KALVISOLAI TNPSC

Sunday, 9 October 2016

இரைப்பைப் புற்றுநோய் சிகிச்சை என்ன?

இரைப்பைப் புற்றுநோய் சிகிச்சை என்ன?

உலக அளவில் நுரையீரல் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக மக்களைப் பெரிதும் பாதிக்கின்ற ஒரு புற்றுநோய், இரைப்பைப் புற்றுநோய். உலகிலேயே ஜப்பான் நாட்டில்தான் இந்த நோய் அதிகமாகக் காணப்படுகிறது.  இது இந்தியாவிலும் உள்ளது.

 

யாருக்கு வரும்?

இது பொதுவாக 50லிருந்து 70 வயது வரை உள்ளவர்களுக்கு வருகிறது. என்றாலும் அண்மைக்காலமாக 30 முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்களுக்கும் இந்த நோய் வருவது உறுதியாகி உள்ளது. இதற்கு இவர்கள் விரும்பி உண்ணும் விரைவு உணவுகள்தான் முக்கிய காரணம் என்று தெரிகிறது. பெண்களைவிட ஆண்களுக்கு இரைப்பைப் புற்று ஏற்படுவது இரண்டு மடங்கு அதிகம். மாசடைந்த சுற்றுச்சூழல் இந்த நோய் உருவாவதைத் தூண்டும் என்பதும் தெரியவந்துள்ளது. அதனால்தான் ஆஸ்பெஸ்டாஸ் தொழில் புரிவோர், உலோகத் தொழில் புரிவோர், சுரங்க வேலை செய்வோர், ரப்பர் தோட்டத் தொழில் புரிவோர் ஆகியோருக்கு இந்த நோய் அதிக அளவில் வருகிறது. அடுத்து, நீண்ட நாட்களுக்கு இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கு, கடும் ரத்தசோகை உள்ளவர்களுக்கு, வைட்டமின் பி12 சத்துக்குறைவு உள்ளவர்களுக்கு இந்த நோய் வரும் வாய்ப்புகள் அதிகம்.

காரணங்கள்

இரைப்பைப் புற்றுநோய்க்குத் தவறான உணவுப்பழக்கம் ஒரு முக்கிய காரணம். ஜப்பான் நாட்டில் கருகிய உணவை (Smoked foods) அதிகமாக விரும்பிச் சாப்பிடும் பழக்கம் உள்ளது. நிறைய மது அருந்துதல், சோயா சாஸ் மற்றும் ஊறுகாய் வகைகளை உண்ணுதல் அங்கு அதிகம். இதனால் ஜப்பானில் இரைப்பைப் புற்று பெருமளவில் வருகிறது. அயர்லாந்தில் சுட்டமீன், கோர்ட்ரியாவில் வாட்டிய ஆமை, வட சீனாவில் 'கோலினாத்' எனும் தானியம் போன்றவற்றை அதிக அளவில் உண்பதால் இந்த நோய் அந்த நாடுகளில் அதிகமாக வருகிறது என்று தெரியவந்துள்ளது.

இந்தியாவில் புகைப்பிடித்தல், வெற்றிலை பாக்கு, புகையிலை, பான்மசாலா, நிறைய மது அருந்துதல் போன்ற பழக்க வழக்கங்களாலும், வயலில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் செயற்கை உரங்களின் பயன்பாடு போன்றவற்றாலும் இந்த நோய் வருவதாகத் தெரிகிறது. இப்புற்றுநோய் வருவதற்குப் பரம்பரைத் தன்மையும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.

அதிக சூடான, காரமான, மசாலா அதிகமான அல்லது அதிக குளிர்ச்சியான உணவுகளையோ, குளிர்பானங்களையோ அடிக்கடி உண்ணும் போது இந்த நோய் விரைவில் உருவாகிறது. எச்.பைலோரி கிருமி இரைப்பையில் நெடுங்காலத்திற்கு இருக்குமானால், இந்த நோய் உண்டாகின்ற வாய்ப்பு அதிகரிக்கும்.

உணவில் உப்பை அதிகமாகச் சேர்த்துக் கொள்வோருக்கும் மாவுச்சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவில் உண்ணும் பழக்கம் உள்ளோருக்கும் இந்த நோய் வரலாம். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களைக் குறைவாகவும், கொழுப்பு மிகுந்த பீட்ஸா, பர்கர், சாண்ட்விச் போன்ற விரைவு உணவுகளைப் பெரிதும் விரும்பி உண்ணும் போதும் இந்த நோய் வரும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இரைப்பையில் 'பாலிப்ஸ்' என்று அழைக்கப்படும் சிறு கட்டிகள் இருப்பவர்களுக்கு வயதாக ஆக அவை வளர்ந்து பெரிதாகி புற்றுக்கட்டிகளாக மாறுவதற்கு வாய்ப்புண்டு.

அறிகுறிகள்

பெரும்பாலோருக்கு இந்த நோய் தோன்றும்போது எவ்வித அறிகுறிகளும் வெளியில் தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும் இரைப்பைப் புண்ணுக்குரிய அறிகுறிகள்தான் முதலில் தெரியும். பசிக்குறைவு, ஏப்பம், உணவில் விருப்பம் குறைவது, உணவு விழுங்குவதில் சிரமம், லேசான வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், அஜீரணம், நெஞ்சுக்குழியில் ஒரு சிரமம் போன்ற அறிகுறிகள் வெளிப்படும். இவையெல்லாமே சாதாரண அறிகுறிகள் என்பதால் பொதுவாக பல நோயாளிகள் தாங்களாகவே மருந்துக்கடைகளில் 'அல்சர்' மருந்துகளைச் சாப்பிட்டுக் கொண்டு உண்மையான நோயைக் கவனிக்காமல் இருந்து விடுவார்கள். அதற்குள் இரைப்பைப் புற்று முற்றிவிடும்.

பிறகுதான் இரைப்பைப் புற்றுக்கே உரிய அறிகுறிகள் தெளிவாகத் தோன்றும். அதாவது, இவர்களுக்கு வயிற்றுவலி தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். உணவு சாப்பிட்டதும் வயிற்றுவலி அதிகமாகும். வாந்தி வரும். வாந்தி வந்தபிறகு வலி குறையும். சில நேரங்களில் இரைப்பையில் பந்து உருளுவது போன்று உணருவார்கள். ரத்தவாந்தி வரும். மலத்தில் ரத்தம் போகலாம். கருமலம் வெளியேறலாம். உணவு உண்பது குறையும். உடல் எடை குறையும். வயிறு வீங்கி நீர்கோர்த்த மாதிரி தெரியும்.

புற்று பரவும் விதம்

இரைப்பைப் புற்று நேரடியாக உணவுக்குழாய், கல்லீரல், கணையம், மண்ணீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்ற உறுப்புகளுக்குப் பரவி விடும். நிணநீர் வழியாக நிணநீர்க்கட்டிகளுக்குப் பரவும். குறிப்பாக இடது கழுத்துப்பட்டை எலும்புக்கு மேல் உள்ள நிணநீர்க் கழலைகள் மற்றும் அக்குளில் உள்ள நிணநீர்க் கழலைகள் வீங்கும். ரத்தக்குழாய்கள் மூலமாக நுரையீரல், கல்லீரல், எலும்பு, மூளை போன்ற உறுப்புகளுக்குப் பரவும். வயிற்றுச் சவ்வுப்படலம் வழியாக கருப்பை, சிறுநீர்ப்பை, மலக்குடல், மற்ற வயிற்றுப்பகுதிகள் ஆகியவற்றுக்குப் பரவும்.

என்னென்ன பரிசோதனைகள் தேவை?

செரிமான மண்டலத்தை 'பேரியம்' கொடுத்து எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தால் இந்த நோயைத் தெரிந்து கொள்ளலாம். நோயின் துவக்கத்திலேயே எண்டோஸ்கோப்பி மூலம் இரைப்பையைப் பரிசோதித்து, புற்றுநோய் உள்ளதா, அது என்ன வகையைச் சேர்ந்தது, எவ்வளவு பரவியுள்ளது, அடைப்பு உள்ளதா எனப் பல விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். மேலும் புற்றுநோய் உள்ள இரைப்பைத் திசுவில் சிறு பகுதியை அகற்றி, திசுப்பரிசோதனைக்கு அனுப்பி, நோயை உறுதி செய்யலாம். நோயாளியின் வயிற்றை 'அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்', சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்ற பரிசோதனைகளைச் செய்து பார்த்தால் இரைப்பைக்கு வெளியில் உள்ள உறுப்புகளான கல்லீரல், கணையம், கருப்பை, சிறுநீர்ப்பை, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் போன்ற இடங்களுக்குப் புற்றுநோய் பரவியிருப்பது தெரிந்துவிடும். அத்தோடு மார்பு எக்ஸ்ரே மற்றும் ரத்தப் பரிசோதனைகள் தேவைப்படும்.

சிகிச்சை முறைகள்

இரைப்பைப் புற்றுக்கு அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை மற்றும் புற்று எதிர் மருந்துகள் பயன்படுகின்றன. புற்றுநோய் இரைப்பையின் அடிப்பகுதியில் இருந்தால் அப்பகுதியை அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிட்டு, மீதமுள்ள இரைப்பையை நடுச்சிறுகுடலுடன் இணைப்பார்கள். இதேபோல் மேற்பகுதியில் புற்று இருந்தால் உணவுக்குழாயை இரைப்பை அடிப்பாகத்துடன் இணைப்பார்கள். புற்று இரைப்பை முழுவதும் பரவியிருந்தால் இரைப்பை முழுவதுமே அகற்ற வேண்டியது வரும். அப்போது உணவுக்குழாயை நடுச்சிறுகுடலுடன் இணைப்பார்கள். புற்றுநோய் அருகில் உள்ள உறுப்புகளிலும் பரவியிருக்கும்போது (உதாரணமாக மண்ணீரல், கணையம்) அந்த உறுப்புகளையும் அகற்ற வேண்டியது வரும்.

புற்றினால் இரைப்பையில் அடைப்பு ஏற்பட்டு, அதேநேரத்தில் இரைப்பைப் புற்றுக்கட்டியை அகற்ற முடியாத நிலைமை இருக்குமானால், இரைப்பையையும் நடுச்சிறுகுடலையும் இணைக்கின்ற அறுவை சிகிச்சை செய்யப்படும். அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து தேவைக்கேற்ப கதிரியக்க சிகிச்சை அல்லது மருந்து சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

தடுப்பது எப்படி?

புகைப்பதையும் புகையிலை கலந்த பொருட்களைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். மது அருந்தாதீர்கள். அதிக காரமான மசாலா கலந்த உணவு

களைக் குறைத்துக் கொள்ளுங்கள். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகப்படுத்தவும். வெள்ளைப்பூண்டு, வெங்காயம் போன்றவற்றுக்கு புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. இவ்வுணவுகளை அதிகப்படுத்துங்கள். சமைக்கும்போது கருகிவிட்ட உணவுகளை உண்ணாதீர்கள். காரணம், அந்தக் கருகலில்தான் புற்றுநோயை உருவாக்கும் காரணிகள் குடியிருக்கும்.  கொதிக்கவைத்த எண்ணெயை மறுபடியும் மறுபடியும் சூடுபடுத்தி சமையலுக்குப் பயன்படுத்தாதீர்கள். இதிலும் புற்றுநோய் ஆபத்து உள்ளது. எந்த வயதானாலும் சரி, ஒருவருக்குப் பசி குறைந்து, உடல் எடை குறைந்து கொண்டே போனால் உடனே 'இரைப்பை எண்டோஸ்கோப்பி பரிசோதனை' செய்து கொள்ளுங்கள். இது முக்கியம்.

ரத்த வாந்தி வருவது ஏன்?   

ரத்த வாந்தி என்பது தனிப்பட்ட ஒரு நோயல்ல. இது ஒரு அறிகுறி. உணவுச் செரிமானப்பாதையில் ஏதோ ஒரு தீவிரப் பிரச்னை உள்ளது என்பதைத் தெரிவிக்கும் முக்கியமான அறிகுறி. இதற்கான காரணத்தை உடனடியாக கண்டுபிடித்து தகுந்த சிகிச்சையைப் பெற்றுவிட வேண்டும். தவறினால், உயிருக்கு ஆபத்து காத்திருக்கும்.

காரணங்கள்

வாந்தியில் ரத்தம் வருவதற்கும் மலத்தில் ரத்தம் வெளியேறுவதற்கும் கீழ்க்காணும் காரணங்கள் இருக்க அதிக வாய்ப்புள்ளது.

1.    உணவுக்குழாய்ப் புண், வெடிப்பு, சுருள் ரத்தக்குழாய் நோய்.

2.    இரைப்பைப் புண்.

3.    இரைப்பை ஏற்றம்.

4.    இரைப்பைப் புற்றுநோய்.

5.    முன்சிறுகுடல் புண்.

6.    கணையப் புற்றுநோய்.

7.    மூலநோய்.

8.    வயிற்றில் ரத்தக்குழாய் வீக்கம்.

9.    ரத்த உறைவுக் குறைபாடுகள்.

10.    பாரம்பரிய ரத்த ஒழுக்கு நோய் (ஹீமோபிளியா).

11.    ரத்த சோகை.

12.    வலி நிவாரணி மாத்திரைகளுக்கு

ஒவ்வாமை.

13.    கல்லீரல் சிரை மிகு ரத்த அழுத்த நோய் (Portal Hypertension).

அறிகுறிகள்

இரைப்பையில் அல்லது குடலில் ரத்தக்கசிவு சிறிய அளவில் இருந்தால், முதலில் அது வாந்தியாக வராது. மலத்தில் மட்டும் கறுப்பு நிறத்தில் வெளியேறும். அதன் பின்னர்தான் காபி சாப்பிட்ட மாதிரியான நிறத்தில் வாந்தி வரும். ரத்தக்கசிவானது ரத்த ஒழுக்காக மாறிவிட்டது என்றால் மட்டுமே சிவப்பு நிறத்தில் வாந்தியாகவும், மலம் அடர்ந்த கறுப்பு நிறத்திலும் வெளியேறும்.அப்போது நோயாளிக்கு நாடித்துடிப்பு அதிகரிக்கும். ரத்த அழுத்தம் குறையும். தலைச்சுற்றல் வரும். உடல் வியர்க்கும். மயக்கம் எட்டிப் பார்க்கும்.

 

பரிசோதனைகள் என்னென்ன?

இரைப்பை எண்டோஸ்கோப்பி மற்றும் கொலோனோஸ்கோப்பி பரிசோதனைகள் மூலம் ரத்தக்கசிவுக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியும். வயிற்றை அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்துப் பார்த்தால், வயிற்றில் மற்ற உறுப்புகளின் நிலைமை புரியும். பொதுவான ரத்தப் பரிசோதனைகள் மூலம் ரத்த வாந்திக்கான பிற காரணங்களைக் கண்டுபிடிக்க முடியும். மலத்தில் 'அக்கல்ட் பிளட்' (Occult Blood) பரிசோதனை செய்தால் புற்றுநோய் பாதிப்பு உறுதியாகும்.

சிகிச்சை என்ன?

ரத்த வாந்திக்கும் ரத்தத்தில் மலம் போவதற்கும் காரணத்துக்கு ஏற்ப சிகிச்சை அமையும். ரத்தம் அதிகம் வெளியேறி இருந்தால், நோயாளிக்கு ரத்தம் ஏற்றப்பட வேண்டும். இரைப்பையில் சாதாரணமாக ரத்த ஒழுக்கு ஏற்பட்டிருந்தால் எண்டோஸ்கோப்பி கருவியின் உதவியுடன் ஸ்கிலிரோதெரபி (Sclerotherapy) எனும் சிகிச்சை மூலம் சரிப்படுத்தலாம். பேண்டிங் (Banding) என்று மற்றொரு சிகிச்சை முறை உள்ளது. இதுவும் இரைப்பை ரத்தக்கசிவை சரிப்படுத்தும். 'குளு' (Glue) எனும் ஊசி மருந்தை ரத்தக்கசிவு உள்ளவர்களுக்குச் செலுத்தியும் இரைப்பை ரத்தக்கசிவை நிறுத்த முடியும். புற்றுநோய் காரணம் என்றால், அறுவை சிகிச்சை, கதிரியக்க  சிகிச்சை மற்றும் மருந்து சிகிச்சை பயன் தரும்.

தடுப்பது எப்படி?

இரைப்பைப் புற்றுநோய்க்குச் சொல்லப்பட்ட அத்தனைத் தடுப்புமுறைகளும் இதற்கும் பொருந்தும்.

No comments:

Post a comment