KALVISOLAI TNPSC

Monday, 3 October 2016

உடற்பயிற்சி வணிகமயமாவானேன்?

உடற்பயிற்சி வணிகமயமாவானேன்?

மனிதராவார்க்கு உடல் நலம், மன நலம் இரண்டும் அடிப்படைத் தேவையாகின்றன. உடல் நலத்திற்கு உணவு, உழைப்பு, ஓய்வு மூன்றும் தேவையாகின்றன. மனநலத்திற்கு உழைப்பு, ஓய்வு இரண்டுமே தேவை. உடலுக்கு ஓய்வாவது செயலற்றிருத்தல். மனத்திற்கு ஓய்வாவது யாது? முதலில் மனமாவது யாது?

ஆறறிவதுவே அவற்றொடுமனனே

மக்கள்தாமே ஆறறிவுயிரே

என மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிவியல் முறையில் அறுதியிட்டுரைத்தார் ஆசிரியர் தொல்காப்பியர். மனிதர்க்கு மட்டும் உரியதாகும் சிந்தனை என்னும் திறனையே மனன் எனக் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். அதாவது மனம், சிந்தித்தல், எண்ணுதல், நினைத்தல் என்பனவெல்லாமும், ஒன்றன்றி வெவ்வேறல்ல.இனி, செயலற்றிருத்தல் உடலுக்கு ஓய்வாகலாம். மனமாவது சிந்தனையெனும்போது, சிந்தனையற்றிருத்தல் உன்மத்தம் அல்லது மயக்க நிலை. உன்மத்தமும், மயக்கமும் உடல், உள்ளம் இரண்டிற்கும் சாவன்றி வாழ்வல்ல. இங்கே விவாதப் பொருள் வாழும் வகை பற்றியதே. ஆக, மனம் செயலாகவும் இருக்க வேண்டும். அதுவே ஓய்வாகவும் வேண்டும்.இது குறித்துத் தியானவாதிகளும், யோகாக் கலையாரும் கூறுவதென்ன? "நாம் அன்றாடம் பல்வகைப் பணிகளில் சிக்கிப் பல்வேறு சிந்தனைகளில் சுழல்வதால் மன உளைச்சல் உண்டாகிறது. நாள்தோறும் சிறிதுபொழுது ஓரிடத்திலிருந்து எண்ணங்களை அங்குமிங்கும் அலைபாய விடாது குறிப்பிட்ட ஒன்றிலேயே ஒருமுகப்படுத்தும் தியானத்தையும், யோகாவையும் மேற்கொண்டால் உடலும் உள்ளமும் நலமாகும்.அதனால் ஆன்மா ஒளியாகும். எண்ணிய எண்ணியாங்கெய்தலாம். அந்தக் காலத்து மகான்கள் இப்படியாகத்தான் வியத்தகு செயல்களையும் விளையாட்டுப்போலச் செய்தார்கள்' என்கிறார்கள்.நாடு துறந்து காடு புகுந்து தவ வாழ்வு மேற்கொண்டோர் அவ்வப்போது அமைதியான ஓரிடத்திலமர்ந்து தம் குறிக்கோள்கள் குறித்து ஆழமாகச் சிந்தித்தல் வழக்கம். அத்தகைய ஆழ்ந்த சிந்தனைகளின் விளைவாக அவர்களிற்பலர் நல்ல பல கருத்துக்களை நானில மக்களின் நன்மைக்கென வெளியிட்டிருக்கிறார்கள்.புத்தர் பெருமானுக்கு ஒருநாள் போதி மரத்தடியில் ஞானோதயம் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. அதன் மெய்மை யாது? தாம் வாழும் சமூகத்தின் சிக்கல்களுக்குத் தீர்வு யாது? அது குறித்துத் தாம் மக்களுக்கு அறிவுறுத்தத் தகும் கருத்தென்ன? அதற்காகத் தாம் மேற்கொள்ள வேண்டிய வழி முறைகள் யாவை என்பன குறித்துப் பல்லாண்டுகள் பலவாறாகச் சிந்தித்த சித்தார்த்தர் ஒருநாள் ஒரு போதி மரத்தடியில் அமர்ந்து தம் எண்ணங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, தாம் கொள்ள வேண்டிய - செல்ல வேண்டிய நெறிகள் பற்றித் தெள்ளத் தெளிவான ஒரு முடிவுக்கு வந்தார் என்பதுதான் ஞானோதயம் பெற்றதன் மெய்ம்மையாகும்.ஆக, தியான நிலை, யோக நிலை என்பனவெல்லாம் ஆழ்ந்த சிந்தனையாகும் வழிமுறைகளன்றி சிந்தனைஅடக்கப்பட்ட நிலையல்ல. ஆழ்ந்த சிந்தனையாளர்கள் தெளிபொருளைத் தேர்ந்துரைக்கத் தியானம், யோகம் என்பனவும் வழிமுறைகளாகலாம். ஆனால் தியானத்தில் அமர்வோரெல்லாம், யோகா செய்வோரெல்லாம் தெளிபொருள் தேர்ந்துரைக்கும் சிந்தனையாளராவதில்லை.சிந்தனைத் திறனுடையார்க்குப் பணியொன்றில் ஈடுபடும்போதும் முடிவான எண்ணமொன்று உள்ளத்தில் முளைக்கக் கூடும். ஆர்க்கிமிடிசுக்குப் பளிச்சிட்டதைப் போல.இனி, தியானம், யோகா என்பவற்றை வேறிருதிறமாக ஆராய்வோம். இவையிரண்டும் மன உளைச்சல், மன அழுத்தம் என்பவற்றிலிருந்து விடுபட்டு மன அமைதி பெற்று வாழ்வியல் செயல்களை ஊக்கத்துடன் செய்தற்கு உறுதுணையாகும் என்கிறார்கள். ஒன்றிலேயே ஒன்றுவதெல்லாம் பொன்றாத அமைதியாகுமா? குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் சுற்றுலா செல்கிறோம். பல்வேறு காட்சிகளையும், நிகழ்ச்சிகளையும் பார்க்கிறோம். பலவற்றில் பங்கு கொள்கிறோம். சிந்தனை பலவாறாகச் சிதறுகின்றது. ஆனாலும் நம்முள்ளத்தில் உருவாவது அமைதியும் புத்துணர்ச்சியுமின்றி அவலமும், உளைச்சலுமல்லவே.தேர்வு நெருங்கும் நாளில் பாடம் படிப்பதில் ஆழ்ந்திருக்கும் மாணவனுக்கு அம்மா அழைப்பது செவிப்புலனாவதில்லை. அவ்வளவுக்கு மாணவனின் மனம் பாடம் ஒன்றிலேயே ஒன்றி விடுகிறது. ஆனால், அந்த ஒன்றிப்பு அவனுக்கு மன அழுத்தமாவதன்றி மன அமைதியாவதில்லை.அதாவது ஒன்றிலே மனஒருமைப்படுதல் எல்லாமும் மன அமைதியாவதில்லை. அதே மாணவன் விடுமுறை நாளில் அவனுக்குப் பிடித்தமான தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதும் அம்மாவின் அழைப்பு அவன் கவனத்தை ஈர்ப்பதில்லை. அதேசமயம் இந்த ஒன்றிப்பு அவனுக்கு மனத்தளர்ச்சியாவதன்றி மனஇறுக்கமாவதில்லை.கதிரவன் மறையலாகும் மாலை வேளையில், கடற்கரை சென்று, ஆர்ப்பரித்து வரும் அலைகளையும், அவை மணற் கரையில் படர்ந்து பால்போலும் வெண்ணுரையாதலையும் மனமொன்றிப் பார்த்துக் கொண்டிருந்தால் மனம் அமைதியாகிப் புத்துணர்ச்சி ஏற்படுதலை உணரலாம்.ஆனால், ஒரு மணி நேரத்தில் அவ்வாறாகும் பேரலை, சிற்றலைகள், அவை பரவும் பரப்பளவு, அலைகள் வந்து மீளும் கால அளவு, அவை மீளும்போது தட்டுப்படும் நண்டுகள் என்பவற்றைக் கணக்கிடுதலை ஒரு பணியாகச் செய்யும்போது ஏற்படக்கூடியது மன அழுத்தமன்றி அமைதியல்ல.வண்ணப் பூஞ்சோலையில் வலம் வருதல் எப்போதாவது சென்று வருவார்க்கு மன மகிழ்ச்சியாகலாம். அதுவே பணியாகக் கொள்வார்க்கு அதுவே விரக்தியாகிவிடும்.அடுத்து யோகா என்பதென்ன? அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் நடுநிலைப் பள்ளிகளில் விளையாட்டுப் பாட வேளையில் விளையாட்டாசிரியர் விளையாட்டாகக் கற்பித்த உடற்பயிற்சிகள் அத்தனையும் இன்று யோகா எனும் புதுப் பெயர் பூணுகின்றன.பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையான கல்வி நிலையங்களில், அந்தந்தப் பருவத்திற்கேற்பப் பயிற்றுவித்ததற்குரிய உடற்பயிற்சிகள் வணிகமயமாவானேன்?

முத்திசேரச் சித்தியிங்கு முன்னளிப்பேன் பாரெனச்

சத்தியங்கள் சொல்லியெங்கும் சாமிவேடம் பூண்டவர்

நித்தியம் வயிறுவளர்க்க நீதி ஞானம் பேசியே

பத்தியாய்ப் பணம் பறித்துப் பாழ்நரகில் விழ்வரே

-என்றார் சிவவாக்கியர்.

அன்று சாமிவேடம் பூண்டோர் அந்தந்த வட்டார அளவில் பணம் பறித்திருப்பர். இன்றைய சூழலுக்கேற்ப இதுவும் பன்னாட்டு வணிகமாகிறது. உலக அளவில் நூறாண்டுகளைக் கடந்து வாழ்வோரில் அதிக எண்ணிக்கையினர் சப்பானியர் என்கிறது புள்ளிவிபரம். அப்படி வாழ்வோரனைவரும் தியானமும், யோகாவும் செய்பவர்களா?

ஆக, மன உளைச்சல், மன அமைதி என்பனவெல்லாம் வினை நிலை, வினையாளர் மனநிலை, கால - இடச்சூழல் என்பவற்றின் இயைபைப் பொருத்தமைவனவன்றி, இதற்கிது என அறுதியிட்டு உறுதி கூறத்தக்கனவல்ல.அதாவது, தியானத்தையும், யோகாவையும் தன்னிச்சையாக மேற்கொண்டால் மன அமைதியாகலாம். அவற்றைக் கட்டாயப் பயிற்சியாகச் செய்யும்போது மனம் அழுத்தமாவதன்றி அமைதியாகாது.உளைச்சலும், அழுத்தமும் உண்டாக்கும் பணிகளுக்கிடையே அமைதிப் பொழுதுக்கும் அட்டவணையிட்டுக் கொண்டால் உளைச்சலும், அழுத்தமும் உடனுக்குடன் நீங்கும்.வெளியில் மன அழுத்தத்திற்காளாகுவோர் அன்றாடம் வீட்டில் சிறுபொழுது மனைவி, மக்கள், பேரப்பிள்ளைகளுடன் வேடிக்கை பேசி வீண் பொழுது போக்கினால் அன்றைய உளைச்சல் அன்றேபோம். பேரனின், ஏன் - ஏன் என்னும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதினும் மகிழ்வான செயல் வேறென்ன உண்டு? அதற்கு வாய்ப்பில்லாதோர் என்ன செய்ய?மேலைநாட்டினர் வார விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் வெளியிடம் சென்று மகிழ்வாகப் பொழுது போக்கி மீள்கின்றனர். அந்தப் புத்துணர்ச்சியின் வலிவுடன் அடுத்த வாரம் முழுதும் உழைக்கின்றனர். நாம், விடுமுறை நாட்களில் வீட்டுவேலை பலவற்றை இழுத்துப்போட்டுச் செய்கிறோம். அதுதான் இங்கே சிக்கல்.திங்களுக்கொரு நாள் அண்மையூருக்கும் ஆண்டிற்கொரு முறை தொலைவிடத்திற்கும் உறவுசூழ உலாச் சென்றுவந்தால் மனஞ்சூழும் உளைச்சலும் அழுத்தமும் ஒழிந்து போகும். தொடக்கப் பள்ளி முதல் பட்டப் படிப்புவரை இசை, நடனம், ஓவியம், ஏதேனுமொரு விளையாட்டு எனுமிவற்றுள் ஏதேனுமொன்று கட்டாய பாடமாக வேண்டும். அதேபோது அதில் கட்டாயத் தேர்ச்சி கூடாது.இதன் வழியாக, தேர்ச்சி, கூடுதல் மதிப்பெண் என்பவற்றிற்காகப் பாடங்களை வலிந்து படிக்கும் மனச்சுமையிலிருந்து அன்றாடம் விடுபட்டு மன அமைதி பெறுதல் இயல்பாகிவிடும். தனியாகவும், பலருடனிணைந்தும் சமூக நலப்பணிகளில் ஈடுபடுதல் உயரிய மகிழ்ச்சியும், மனநிறைவுமாகும்.எல்லாவற்றிற்கும் மேலாக, அன்றாட வாழ்விலும், ஒட்டுமொத்த வாழ்விலும் இன்பம் எய்துங்காலத்து ஆரவாரமின்றி அமைதி கொள்வோர் துன்பம் சூழுங்காலத்துப் புலம்பலின்றிப் பொறுமையாவர்.

இன்பத்துள் இன்பம் விழையாதான்

துன்பத்துள் துன்பம் உறுதல் இவன்.

என்பது வள்ளுவரின் வாய்மை மொழியாகும்.

No comments:

Post a comment