KALVISOLAI TNPSC

Sunday, 9 October 2016

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும்!

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும்!

வாவ் வைட்டமின்!

தெரிஞ்சது கையளவு... தெரியாதது உலகளவு! வைட்டமின்களில் A, B, C, D, E, K போன்றவை நமக்குத் தெரியும். எந்த உணவில் என்ன வைட்டமின்கள் இருக்கிறது,.. அதனால் என்னென்ன பலன்கள் என்பதும் கூட சிலருக்குத் தெரிந்திருக்கலாம். வைட்டமின் P பற்றித் தெரியுமா? 'தெளிவாச் சொல்லுங்க... வைட்டமின் B தானே என்கிறீர்களா? ஸ்பெல்லிங் மிஸ்டேக்கும் இல்லை. பிரின்டிங் மிஸ்டேக்கும் இல்லை. வைட்டமின் பெயரே P தான்! அது என்ன வைட்டமின் P? டயட்டீஷியன் வினிதா கிருஷ்ணனிடம் கேட்போம்

''Bioflavonoids பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். காய்கறிகள், பழங்கள் போன்றவற்றில் நிறைந்திருக்கும் இந்த ஃப்ளேவனாய்டுகளுக்குத்தான் 'வைட்டமின் P' என்று பெயர். 80 ஆண்டுகளுக்கு முன்னரே வைட்டமின் P கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இத்தனை வருடங்களாக ஃப்ளேவனாய்டு என்றே குறிப்பிட்டு வந்தோம். இப்போது மீண்டும் 'வைட்டமின் P' என்ற பெயரில் பிரபலமாகிறது. இந்த ஃப்ளேவனாய்டு காய்கறிகள், பழங்களைப் போலவே கீரைகள், நட்ஸ் போன்றவற்றிலும் இருக்கிறது. ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, தக்காளி, எலுமிச்சைப்பழம், கிரீன் டீ, குடைமிளகாய், வெங்காயம், பூண்டு, பிரக்கோலி, தானியங்கள் போன்றவற்றிலும் அதிகம்.

மற்ற வைட்டமின்களின் செயல்திறனை  அதிகப்படுத்தி நமக்கு உதவி செய்பவை  ஃப்ளேவனாய்டுகள்தான். குறிப்பாக, வைட்டமின் C மற்றும்  வைட்டமின் E ஆகியவற்றை உணவிலிருந்து அதிக அளவில் கிரகித்து நம்  உடலுக்குள் சேர்ப்பது ஃப்ளேவனாய்டுகளின் முக்கிய வேலை. நமக்குப் புத்துணர்வு தரும் ஆன்டி ஆக்சிடண்டுகள் என்றும் ஃப்ளேவனாய்டுகளைத்தான் சொல்கிறோம். வைரஸ் தொற்று, கெட்டக் கொழுப்பைக் கட்டுப்படுத்துவது, மூட்டு அழற்சி, வெரிக்கோஸ், ஆஸ்துமா, புற்றுநோய் போன்றவற்றைத் தடுக்கும் திறன் கொண்டவை இந்த ஃப்ளேவனாய்டுகள். பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவு காரணமாக ஏற்படும் பிரச்னைகளைத் தடுக்கும் திறனும், மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் திறனும் ஃப்ளேவனாய்டுகளுக்கு உண்டு.

ஃப்ளேவனாய்டுகள் வைட்டமின்களின் குணம் கொண்டவை, அவற்றைப் போல செயல்படுபவை என்றாலும், இவற்றை வைட்டமின் என்று சொல்லலாமா என்பதில் பல்வேறு கருத்துகள் இருக்கின்றன'' என்கிறார் வினிதா. ஏன்?''இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும் முன் வைட்டமின் என்றால் என்னவென்று சொல்லிவிடுகிறேன். அப்போதுதான் புரியும். நாம் உண்ணும் உணவு உடலுக்குள் சென்று சக்தியாக மாறும்போது ஆக்சிஜன் அதிகம் செலவாகிவிடும். மீதமிருக்கும் ஹைட்ரஜன், நைட்ரஜன் போன்ற கூட்டுப்பொருட்கள் ஆக்சிஜன் இல்லாததால் செயல்பட முடியாமல் தவிக்கும். இதனால், ஆக்சிஜன் எங்கே கிடைக்கும் என்று உடலுக்கு உள்ளேயே தேடி அலையும்.

அந்த நேரத்தில் சத்துள்ள உணவின் மூலம் வைட்டமின்களை உடலுக்குக் கொடுக்கும்போது ஹைட்ரஜனுக்கும் நைட்ரஜனுக்கும் போதுமான ஆக்சிஜன் கிடைத்து அமைதியாகிவிடும். இல்லாவிட்டால், பலவீனமான செல்களிலிருந்து ஆக்சிஜனை எடுத்துக் கொள்ள முயற்சிக்கும். மரபியல் ரீதியாகவே பலவீனமடைந்த செல்களால் இதை எதிர்த்துப் போராட முடியாது. இதனால்தான் அல்ஸைமர், பார்க்கின்ஸன், புற்றுநோய்கள் போன்றவை உருவாகின்றன. நோயை உருவாக்கும் இந்த Free radicals என்ற நச்சுக்குப்பைகளைத் தடுத்து நம் செல்களின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கு உதவுபவை இந்த ஃப்ளேவனாய்டுகள். இன்னும் எளிமையாகச் சொன்னால் நோய் எதிர்ப்பு சக்தியை வைட்டமின்கள் மூலம் கிடைக்கச் செய்வதே இந்த ஃப்ளேவனாய்டுகள்.

அதனால்தான் இதை வைட்டமின் போல... ஆனால், வைட்டமின் அல்ல என்று சொல்கிறேன்!'' சரி... இந்த வைட்டமின் P என்ற ஃப்ளேவனாய்டுகளை சப்ளிமென்டுகளாக எடுத்துக் கொள்ளலாமா? ''பொதுவாக எல்லா மருந்து, மாத்திரைகளுக்கும் மருந்துக் கட்டுப்பாட்டுத்துறையே அனுமதி வழங்குகிறது. இந்த வைட்டமின் P மாத்திரைகள் ஹெர்பல் ப்ராடக்ட்டுகள் என்ற வகையில் வருவதால் மருந்துக் கட்டுப்பாட்டு துறையின் கட்டுப்பாட்டில் வருவதில்லை.

அதனால், அந்த சப்ளிமென்டுகள் எந்த அளவில், என்ன தரத்தில் தயாராகின்றன என்பது தெரியவில்லை. அப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றாலும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடுத்துக் கொள்ளக்கூடாது.

முக்கியமாக கர்ப்பிணிகள், குழந்தைகள் எந்த சப்ளிமென்டுகளையும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்துவது நல்லதல்ல. சப்ளிமென்டுகளை இயற்கையான உணவுகளில் இருந்து பெறுவதுதான் எப்போதும் பாதுகாப்பானது!''

No comments:

Post a comment