KALVISOLAI TNPSC

Tuesday, 4 October 2016

மகிழ்ச்சி தரும் சுற்றுலா

மகிழ்ச்சி தரும் சுற்றுலா

பண்டைக்காலம் தொட்டே தமிழர்கள் சுற்றுலாவை பொழுது போக்கிற்காக மட்டுமல்லாமல் வணிகம் ஈட்டுவதற் காகவும் பயன்படுத்தியுள்ளனர்.தான் வாழ்ந்து வரும் சூழலில் இருந்து வெளியே சென்று ஓய்வு, தொழில் போன்ற காரணங்களுக்காக ஓராண்டிற்கும் மேலாக அவ்விடத்தில் வருமானம் ஈட்டுகின்ற செயலுடன் தொடர்பற்ற பிற நோக்கங்களுக்காக செயல்படுபவர் சுற்றுலாப் பயணி என உலக சுற்றுலா நிறுவனம் விவரித்துள்ளது.சுற்றுலாத்துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்த உலக நாடுகள் ஐக்கிய நாடு சபையில் 1979-ஆம் ஆண்டு ஒன்று கூடி ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 27-ஆம் நாள் உலக சுற்றுலா நாளாக கொண்டாட தீர்மானம் நிறைவேற்றின.1990-ஆம் ஆண்டுவரை இந்திய சுற்றுலாத்துறை இவ்வளவு செழிப்பாக இல்லை. அதன்பின்னர் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி குறைந்திருந்த போதிலும் இந்திய சுற்றுலாத்துறையின் வளர்ச்சி உலகின் மற்ற நாடுகளைவிட வேகமாக வளர்ந்தது.கடந்த ஆண்டு முதல் இந்திய பொருளாதாரம் ஆண்டுக்கு சுமார் ஐந்து விழுக்காடு என்ற அளவில் அதிகரித்து வருகிறது. சுற்றுலாத்துறை பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வரும் போதிலும்கூட இந்தியாவிற்கு அதிக அளவு அந்நிய செலாவணியை ஈட்டித்தருவதில் 2-ஆவது இடத்தில் உள்ளது.2012-ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒட்டுமொத்த உற்பத்திக்கு சுற்றுலாத்துறை அளித்த பங்களிப்பு 6.6 விழுக்காடாகும். அது மட்டுமன்றி 3.9 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது.கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 16 விழுக்காடு என்ற அளவில் அதிகரித்து வருகிறது. சுற்றுலா செல்வதற்கான செலவு குறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 6-ஆவது இடத்தில் இருக்கிறது.இன்று இந்தியாவில் சுற்றுலா தொழில் பெரிய அளவில் வளர்ந்துள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் 2012-2013 ஆண்டின் அறிக்கையின் படி இந்தியாவின் மொத்த உற்பத்தி அளவில் இதன் பங்கு 6.88 சதவீதமாக இருந்தது. இதே காலக்கட்டத்தில் இத்துறையினரால் ஏற்பட்ட வேலைவாய்ப்பு 12.36 சதவீதமாகவே இருந்தது.2011-இல் உலக போக்குவரத்து மற்றும் சுற்றுலா கவுன்சில் வெளியிட்ட ஓர் ஆய்வு உலகெங்கும் இத்துறையின் வளர்ச்சி 2021 ஆண்டுக்குள் 8.8 சதவீதமாக உயரும் என்று கூறுகிறது.இந்த அறிக்கையில் மிக வேகமாக வளரும் சுற்றுலாத்துறை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 5-ஆவது இடம் கிடைத்தது.மேற்கத்திய நாடுகளில் சுற்றுலாத்தலங்கள் அதிதீவிரமாக அபிவிருத்தி செய்யப்படுகின்றன. அவ்வாறு இந்தியாவில் செய்யப்படுவதில்லை.இனிமேல் இந்தியாவில் இவ்வாறான மாயம் சூழ்ந்த அதிசயமான சுற்றுலாத்தலங்களை இனிதான் அடையாளம் கண்டு அவற்றைச் சந்தைப்படுத்த வேண்டும்.ஆந்திர பிரதேசம் கர்னூல் மாவட்டத்தில் மஹாநந்தி என்ற இடத்தில் உள்ள ஒரு குளத்தின் நீரின் மட்டம் ஆண்டு முழுவதும் 5 அடி என்ற ஒரே அளவாகவே இருக்கின்றது. இதில் அதிசயம் என்னவென்றால் இந்தக் குளத்துக்கு எப்படி தண்ணீர் வருகின்றது என்று யாருக்கும் தெரியாது. அந்த குளத்தில் தண்ணீர் கண்ணாடி போல தெளிவாக இருக்கும்.அதுபோல ராஜஸ்தானில் அல்வார் என்ற இடத்திற்கு பக்கத்தில் இருக்கிற பங்கார் கோட்டை 1613-இல் மதோசிங் அரசால் கட்டப்பட்டது. பேய் உலாவும் சுற்றுலாத்தலங்களில் இதுவும் ஒன்று என நம்பப்படுகிறது.பழங்கால மரபுப்படி பாபா பலுநாத் என்ற சாது கோட்டைக்குள் வாழ்ந்து வந்தார். கோட்டை வளாகத்துக்குள் எந்தக் கட்டடமும் அவரது வீட்டைவிட உயரமாகக் கட்டப்படக்கூடாது என்பது அவரது ஆணையாகும். அவ்வாறு கட்டப்பட்டு அந்த வீட்டின் நிழல் சாது வீட்டின் மீது விழுந்தால் கோட்டையே இடிந்து தரைமட்டமாகிவிடும்.இந்தக் கோட்டையில் விளிம்புப் பகுதிகளில் தாற்காலிக வீடுகளை யாரும் பார்க்கமுடியாது. அருகில் உள்ள வீடுகள் எதிலும் கூரைகள் இருக்காது. ஏனெனில் ஒரு வீட்டுக்கு கூரை கட்டப்பட்டால் அந்த வீடு இடிந்து விழும் என்ற நம்பிக்கை இன்றும் அங்கே உள்ளது.இதுபோன்று பல மாநிலங்களில் பல இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களை வளர்த்தெடுப்பதற்கு தொழில்முனைவு தேவைப்படுகின்றது. விளைபொருள் வடிவமைப்பு, போய் வருவதற்கான வசதிகளை மேம்படுத்துதல், தங்குமிடம் மற்றும் இதர சுற்றுலா சார்ந்த வசதிகள் அனைத்தும் இத்தகைய தலங்களில் உருவாக்கப்பட வேண்டும்.இந்திய சுற்றுலாத்துறை மிகப்பெரிய வளர்ச்சி அடைய இருக்கிறது. சுற்றுலாதான் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது என்பதால் வளரும் நாடுகளுக்கிடையே சுற்றுலா வருவாய் ஈட்டுவதில் கடும்போட்டி நிலவுகிறது.சீனா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகளை ஈர்க்க வேண்டும் என்ற நோக்குடன் சுற்றுலா கட்டமைப்புகளுக்காக பல்லாயிரக்கணக்கான கோடிகளை செலவழிக்கின்றன. இதன் மூலம் தங்கள் முயற்சியில் அவை வெற்றி பெறுகின்றன.அதே நேரத்தில் இந்தியா சுற்றுலா வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் சில கட்டுப்பாடுகளை நிர்ணயித்துக் கொண்டிருக்கிறது.சுற்றுலா பயணிகளை கவருவதற்காக ஏராளமான வசதிகள் செய்யப்பட்டாலும் சுற்றுலா தலங்களை எளிதில் அணுக இயலாவிட்டால் அவை அனைத்தும் பயனற்றதாகி விடும்.

No comments:

Post a comment