KALVISOLAI TNPSC

Monday, 3 October 2016

கருமுட்டை இல்லாமல் குழந்தைப்பேறு!

கருமுட்டை இல்லாமல் குழந்தைப்பேறு!

மனிதர்கள் அனைவரும் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய அடிப்படையான இன்பங்கள் சில உண்டு. அவற்றுள் மிகவும் முக்கியமானது திருமணத்துக்குப் பின்னான குழந்தைப்பேறு. தம் மழலைகளுடன் கொஞ்சி விளையாடுவது எல்லையில்லா மகிழ்ச்சியை தரக்கூடியது என்பது பெற்றோர் அனைவரும் அறிந்ததே.

திருக்குறளில் உள்ள 'புதல்வரைப் பெறுதல்' என்னும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள ஒரு குறளில்,'அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்' என்கிறார் திருவள்ளுவர்.

அதாவது, தம் குழந்தைகளின் சிறு கையால் அளாவப்பட்ட கூழானது அமிழ்தத்தை விடவும் மிகவும் இனிமையானது என்கிறார் வள்ளுவர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சில குறைபாடுகள் அல்லது நோய்கள் காரணமாக கருத்தரிக்க முடியாத பெண்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் குழந்தைப் பேறு இன்பம் கிடைப்பதில்லை.

குழந்தைப்பேறு தொடர்பான குறைபாடுகள் மற்றும் நோய்களை ஆய்வு செய்துவரும் பல ஆய்வாளர்கள் அதற்கான தீர்வாக புறக்கருக்கட்டல் (Invitro fertilization) உள்ளிட்ட பல தொழில்நுட்பங்களை தொடர்ந்து உருவாக்கி வருகின்றனர். ஆனாலும் அதீத பணச்செலவும் மற்றும் ஒரு முறைக்கு பல முறை மேற்கொண்ட பின்னும் கருத்தரிக்காமை போன்ற பல்வேறு காரணங்களால் புறக்கருக்கட்டல் போன்ற தொழில்நுட்பங்களால் அனைத்து தரப்பு மக்களுக்கும் முழுமையான பலன் கிடைப்பதில்லை.

அதனால் சுலபமான அல்லது முழுமையான பலனளிக்கக் கூடிய புதிய தொழில்நுட்பங்களை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர். உலகில் முதல் முறையாக, கருத்தரித்த கருமுட்டை இல்லாமலேயே பாலூட்டி உயிரினங்களை உற்பத்தி செய்து அசத்தியுள்ளனர் இங்கிலாந்திலுள்ள பாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டோனி பெர்ரி தலைமையிலான ஆய்வாளர்கள்.

என்ன, கருத்தரித்த முட்டை இல்லாமலேயே பாலூட்டி உற்பத்தியா? அதெப்படி சாத்தியமாகும்? உண்மைதான்.

கருத்தரித்த முட்டை இல்லாமல் ஒரு பாலூட்டி உயிரினத்தை உற்பத்தி செய்வது சாத்தியமில்லாத ஒன்றுதான்.

ஆனால், டோனி பெர்ரியின் ஆய்வுக்குழு கருத்தரித்த முட்டைக்கு பதிலாக பார்த்தீனோஜீநாட் (parthenogenote) என்று அழைக்கப்படும், மாற்றங்கள் செய்யப்பட்ட மற்றும் செயல்படாத எலியின் முளையம் (embryo) அல்லது முளைக்கருவைப் பயன்படுத்தி ஒரு உயிரினத்தை உற்பத்தி செய்துள்ளனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

பார்த்தீனோஜீநாட் என்பது கருத்தரிப்பு நிகழ்வு இல்லாமலேயே ஒரு முளையமாக மாறும் வண்ணம் விஞ்ஞானிகளால் தூண்டிவிடப்பட்ட ஒரு கருமுட்டை ஆகும். இதற்கு முன்னரும் இதுபோன்ற ஆய்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாலும், அத்தகைய முளையங்கள் அனைத்தும் உருவான சில நாட்களிலேயே இறந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

எலியின் கருமுட்டைகளை ஸ்ட்ரான்சியம் குளோரைடு (strontium chloride, SrCl2) எனும் ரசாயன உப்பு நீரில் குளிப்பாட்டுவதன் மூலம், பொதுவாக சில நாட்களில் இறந்துவிடும் தன்மைகொண்ட பார்த்தீனோஜீநாட் முளையங்களை பாத் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக உயிர்வாழச் செய்தனர். முக்கியமாக, பார்த்தீனோஜீநாட் முளையங்கள் வளர்ச்சி தடைப்பட்ட ஒரு நிலைக்கு ஆளாவதன் காரணமாகவே செயலிழந்து போகின்றன என்பது முந்தைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

அதனால், பார்த்தீனோஜீநாட் முளையங்களின் வளர்ச்சி தடைப்படுவதை தடுக்கக்கூடிய ஸ்ட்ரான்சியம் குளோரைடு ரசாயனத்தைப் பயன்படுத்தி அவற்றில் இருந்து ஒரு உயிரினத்தை உருவாக்கியுள்ளனர் டோனியின் ஆய்வுக்குழுவினர். இந்த ஆய்வில், முதலில் எலியின் கருமுட்டைகள் சேகரிக்கப்பட்டன. பின்னர் அவற்றின் வளர்ச்சியைத் தூண்டக் கூடிய ரசாயனங்களை பயன்படுத்தி கருமுட்டைகளின் வளர்ச்சி தூண்டப்பட்டது.

அப்படி வளர்ந்த பார்த்தீனோஜீநாட் முளையங்களின் உடலுக்குள் எலியின் விந்துகள் ஊசி மூலம் செலுத்தப்பட்டன. அதன் காரணமாக கருத்தரிப்பு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து, கருத்தரிப்புக்கு உள்ளான பார்த்தீனோஜீநாட் முளையங்கள் வாடகைத்தாய் எலிகளின் கருவறைக்குள் பொருத்தப்பட்டன.

இத்தகைய, முற்றிலும் புதிய வகையான கருத்தரிப்பு முறை வழியாக உற்பத்தி செய்யப்பட்ட பார்த்தீனோஜெனெடிக் எலிகள், சாதாரண முறையில் வளர்ந்தது மட்டுமல்லாமல் இனப்பெருக்கமும் செய்தன என்றும் கூறப்படுகிறது. ஊசி மூலம் செலுத்தப்பட்ட எலியின் விந்துகள் பார்த்தீனோஜீநாட் முளையங்களை எப்படி மாற்றி அமைத்தன என்பது குறித்து மேலதிக ஆய்வுகள் மூலம் கண்டறிய வேண்டும் என்கிறார் ஆய்வாளர் டோனி பெர்ரி.

எலிகளின் பார்த்தீனோஜீநாட் முளையங்களில் இருந்து ஆரோக்கியமான எலிகள் உற்பத்தியானது போல கருத்தரிப்புக்கு உள்ளாகாத மனிதர்களின் கருமுட்டைகளில் இருந்தும் ஆரோக்கியமான குழந்தைகளை உற்பத்தி செய்ய முடியுமா என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் தற்போது இல்லை என்றாலும், இயற்கையில் அது சாத்தியமே என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

சில பல வருட மேலதிக ஆய்வுகள் இதற்கான விடையளிக்கலாம். ஆனால் எது எப்படி இருந்தாலும், எதிர்காலத்தில் ஆண் அல்லது பெண் என இரு பாலருமே சுய கருத்தரிப்பு செய்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக் கூடும் என்று கருதப்படுகிறது. முக்கியமாக, இந்த புதிய கருத்தரிப்பு முறையைப் பயன்படுத்தி அழிவின் விளிம்பில் இருக்கக்கூடிய பல உயிரினங்களை காப்பாற்ற முடியும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தற்போது, இந்த ஆய்வில் ஏற்பட்டுள்ள புரிதலின் அடிப்படையில் மனிதர்களை பாதிக்கும் மலட்டுத்தன்மை மற்றும் இதர பல இனப்பெருக்கக் குறைபாடுகளை குணப்படுத்த முடியுமா என்று ஆய்வு செய்யத் தொடங்கியிருக்கிறது டோனி பெர்ரியின் ஆய்வுக்குழு என்பது மகிழ்ச்சியான செய்திதான்!

No comments:

Post a comment