KALVISOLAI TNPSC

Wednesday, 5 October 2016

நோய்களை குணமாக்கும் கம்ப்யூட்டர் புரோகிராம்

நோய்களை குணமாக்கும் கம்ப்யூட்டர் புரோகிராம்

அளவில் சிறியவையாயினும் பெரியவையாயினும் கணினிகள்தான் தற்போது உலகத்தை இயக்கி வருகின்றன. அந்த வகையில் நம் தினசரி நிகழ்வுகளில் பல கிட்டத்தட்ட 'புரோக்கிராம்' அல்லது 'நிரலாக்கம்' செய்யப்பட்டவை என்றே கூறலாம். உதாரணமாக, காலை சிற்றுண்டிக்கு எந்த வகையான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் தொடங்கி இரவு படுக்கைக்குச் செல்லும் வரை மனிதர்கள் மேற்கொள்ளும் பல்வேறு தினசரி நடவடிக்கைகளை எந்த நேரத்தில், எந்த வகையில் செயல்படுத்த வேண்டும் என்பதை நமது செல்போன், டேப்லட் உள்ளிட்ட பல்வேறு வகையான கணினிகள் தீர்மானிக்கத் தொடங்கிவிட்டன.ஆக, மனித வாழ்க்கையும் நிரலாக்கம் செய்யப்பட்டுவிட்டது என்றே கூற வேண்டும். இத்தகைய சூழலில், மனிதர்களை தாக்கும் ஆபத்தான உயிர்க்கொல்லி நோயான புற்றுநோய் போன்றவற்றை எதிர்கொண்டு சமாளிக்க அல்லது முறியடித்து வெற்றிபெற கணினிகளையும், அவற்றின் நிரலாக்க முறைகளையும் பயன்படுத்தினால் என்ன என்ற ஒரு உயர்ந்த எண்ணத்துடன் களமிறங்கியுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒரு அங்கமான மைக்ரோசாப்ட் ஆய்வுத்துறை.மைக்ரோசாப்ட் சோதனைக்கூடங்களில் பணிபுரியும் கணினி விஞ்ஞானிகள், புரோக்கிராமர்கள் (நிரலாக்க வல்லுனர்கள்), பொறியாளர்கள் மற்றும் இதர பல வல்லுனர்கள் அடங்கிய ஒரு பல்துறை ஆய்வுக்குழு புற்றுநோயை தொற்றும் குணாதிசயம் கொண்ட ஒரு வைரஸை ஆய்வு செய்து வருகிறது. குறிப்பிட்டுச் சொல்வதானால் புற்றுநோயை சரியாக கண்டறிந்து அதனை குணப்படுத்துவதற்கான சிறந்த வழிகளையும் கண்டறிய முயன்று வருகிறது மைக்ரோசாப்ட் ரிசர்ச்சின் இயக்குனர் கிறிஸ் பிஷப் அவர்களின் ஆய்வுக்குழு. முக்கியமாக, உலகப் பொதுமறையாம் திருக்குறளில் வரும்,'உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து' எனும் குறளில் திருவள்ளுவர் 'எண்ணும் உயர்ந்த எண்ணங்கள் கைகூடி பலனளித்தாலும் சரி, அல்லது கை கூடாமல் செயலற்று, பயனில்லாமல் போனாலும் சரி, எப்போதும் உயர்ந்த எண்ணங்களை எண்ணும் பண்பை கை விட்டு விடக்கூடாது' என்று வலியுறுத்துவதற்கு இணங்க, உயிரணுக்களை மறுநிரலாக்கம் செய்து புற்றுநோய் போன்ற நோய்களை எதிர்கொண்டு சமாளிக்க உதவும் ஒரு நவீன தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது மைக்ரோசாப்ட்.அதாவது, மனித உடலில் உள்ள உயிரணுக்களின் உள்ளே வாழக்கூடிய தன்மையுடைய, புற்றுநோய் போன்ற உடலியல் கோளாறுகளைக் கண்டறியும் திறன்கொண்ட, டி.என்.ஏவால் ஆன ஒரு கம்ப்யூட்டரை உருவாக்க மைக்ரோசாப்ட் நிறுவன ஆய்வாளர்கள் முயன்று வருகின்றனர். உயிரணுக்களுக்குள் வாழக்கூடிய இந்த டி.என்.ஏ கம்ப்யூட்டர் புற்றணுக்களை கண்டறியும் பட்சத்தில், அவற்றை உடலில் இருந்து நீக்கும் கட்டளைகளை உடலுக்கு அனுப்பி, புற்றணுக்களை உடலில் இருந்து முற்றிலும் வெளியேற்றிவிடும் அளவுக்கு சக்திவாய்ந்ததாக இருக்கும் இந்த டி.என்.ஏ கம்ப்யூட்டர் என்று கூறப்படுகிறது.மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த ஆய்வுத்திட்டத்திற்கு, 'மூன்ஷாட்' (moonshot) என்று பெயரிட்டுள்ளது. இதை லட்சியமிக்க, சிக்கல்கள் நிறைந்த மற்றும் ஆராயும் தன்மைகொண்ட ஒரு ஆய்வுத்திட்டமாக கருதுகிறது. இருந்தபோதிலும், ஆய்வாளர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் பணியாற்றி வருகிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமல்லாமல், இன்னும் 5 முதல் 10 வருடங்களுக்குள் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவது என்பது தொழில்நுட்ப ரீதியாகவும் சாத்தியமே என்கிறார் மைக்ரோசாப்டின் உயிரியல் கணினி ஆய்வுத்துறைத் தலைவரான ஆண்ட்ரூ பிலிப்ஸ். ஒரு ஆரோக்கியமான உயிரணுவின் செயல்பாடுகளை பாவனை செய்யக்கூடிய ஒரு நிரலி அல்லது சாப்ட்வேரை மைக்ரோசாப்ட் ரிசர்ச்சின் ஆய்வுக்குழு தயாரித்துவிட்டது. இந்த சாப்ட்வேரை பயன்படுத்துவதுடன், ஒரு நோய்வாய்ப்பட்ட உயிரணுவின் செயல்பாடுகளையும் கண்டறிவதன் மூலம், ஒரு உயிரணு எப்படி புற்றணுவாக மாறியது என்பதையும், பின்னர் அதனை எவ்வாறு குணப்படுத்துவது என்பதை அறிந்துகொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.இந்த புதிய தொழில்நுட்பத் தயாரிப்பு ஒரு புறமிருக்க, மைக்ரோசாப்டின் ஆய்வுக்கூடங்கள் புற்றுநோய் தொடர்பான மேலும் 3 ஆய்வுத்திட்டங்களிலும் பணியாற்றி வருகிறது. உதாரணமாக, (1) மெஷின் லேர்னிங் மற்றும் கம்ப்யூட்டர் பார்வை (machine learning and computer vision) ஆகிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி புற்றுக்கட்டிகளை வெற்றிகரமாக கண்டறியும் ஒரு தொழில்நுட்பம், (2) ஒவ்வொரு நோயாளிக்கும் தனிப்பட்ட மருத்துவம் பார்க்க உதவும் ஒரு தொழில்நுட்பம் மற்றும் (3) புற்றுநோய் வளர்ச்சியை முழுமையாக புரிந்துகொள்ளவும், பின்னர் அதற்குத் தகுந்த சிகிச்சைகளைக் கண்டறிய உதவும் சக்திவாய்ந்த அல்காரிதங்கள் ஆகிய பல்வேறு ஆய்வுத் திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறது மைக்ரோசாப்ட்.இந்த புதிய தொழில்நுட்பம் மற்றும் இதர பல ஆய்வுத்திட்டங்கள் அனைத்தும் வெற்றி அடையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a comment