KALVISOLAI TNPSC

Saturday, 8 October 2016

இந்திய சுதந்திர போராட்டமும்..... நேதாஜி சுபாஷ் சந்திர போஸும்......

இந்திய சுதந்திர போராட்டமும்..... நேதாஜி சுபாஷ் சந்திர போஸும்......

ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. அந்நாள், 'நம்முடைய புதிய தேசத்தின் உதய நாள்' என்று சொன்னால் அது மிகையாகாது.

 

நமது தாய் நாடான இந்தியா சுதந்திரமடைந்து, சுமார் அரை நூற்றாண்டுகளையும் கடந்து, நாம் சுதந்திரமாக நமது தாய்மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு முதற் காரணம், நமது தேசிய தலைவர்களும், போராட்ட வீரர்களுமே! இருநூறு ஆண்டுகளாக, நமது நாட்டிலேயே நாம் அந்நிய தேசத்தவரிடம் அடிமைகளாக இருந்த போது, அவர்களை தைரியத்துடனும், துணிச்சலுடனும் பலர் வீறு கொண்டு எதிர்த்து பல புரட்சிகளையும், போர்களையும் நடத்தி, வெற்றியும், தோல்வியும் கண்டுள்ளனர். சுதந்திரம் என்ற ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, தமது இன்னுயிரையும் துறந்த மகான்கள் பலர், அதில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறிப்பிடதக்கவர்.

 

இந்திய விடுதலையைத் தன் உயிர் மூச்சாகக் கொண்டு அயராது பாடுபட்ட தன்னிகரில்லாத புரட்சி வீரர் சுபாஷ் சந்திரபோஸ். ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் பாரம்பரியப் பெருமை கொண்ட குடும்பத்தில் ஜனவரி 23, 1897 இல் பிறந்தார். பாப்டிஸ்ட் மிஷன் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியையும், கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில் உயர் கல்வியையும் கற்றார்.

 

தனது 16-வது வயதில் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு வீட்டை விட்டு வெளியேறி குருவைத் தேடி அலைந்தார். குரு கிடைக்காததால் தந்தை சொன்னபடி 1915-ல் கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். அங்கே இனவெறி பிடித்த ஆசிரியருடன் நடைபெற்ற மோதல் காரணமாக சுபாஷும் அவரது நண்பர்களும் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டதுடன், இரண்டு ஆண்டுகள் வேறெந்தக் கல்லூரியிலும் சேர முடியாதவாறு தடையும் விதிக்கப்பட்டது.

 

சி.ஆர். தாஸ் உதவியுடன் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்தார். மாணவர்களுக்குரிய படைப் பயிற்சியிலும் சிறப்பாகத் தேறினார். ஐ.சி.எஸ். பட்டத்தையும் பெற்றார். ஆனால், நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயனிடம் வேலை பார்க்கக் கூடாது என்ற எண்ணத்தில் அந்தப் பதவியை லண்டனிலேயே துறந்தார்.

 

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்ற தனது விருப்பத்தை சி.ஆர். தாஸுக்குக் கடிதத்தின் வாயிலாக தெரிவித்தார். சுபாஷ் சந்திரபோஸின் திறனை நன்கு அறிந்த தாஸ் அவர்கள், தான் நிறுவிய தேசியக் கல்லூரியின் தலைவராக வெறும் 25 வயதே ஆன சுபாஷை நியமித்தார்.

 

லண்டனில் கேம்பிரிட்ஜில் படிக்கும் போது மேல்நாட்டு விடுதலைப் போர் வரலாறுகளையும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் நன்கு அறிந்து கற்றிருந்த சந்திரபோஸ் தன் கல்லூரியில் மாணவர்களுக்கு விடுதலை உணர்ச்சி பொங்கும் வண்ணம் சொற்பொழிவு ஆற்றியதுடன் பாடமும் கற்பித்தார்.

 

சுயாட்சிக்கு எதிர்ப்பு காட்டிய காந்தியின் முடிவை எதிர்த்துப் பேச காங்கிரஸ் தலைவர்கள் தயங்கினர். கொல்கத்தா மாகாண தலைவரான போஸ் காந்தியின் முடிவு தவறு என எதிர்த்தார். இதனால் காந்தி-போஸ் மோதல் ஆரம்பமானது. ஜாலியன் வாலாபாக் படுகொலையைத் தலைமையேற்று நடத்திய டயரைச் சுட்டுக் கொன்ற உத்தம் சிங்கைக் கண்டித்து காந்திஜி அறிக்கை விட்டார். ஆனால், சுபாஷ் அவரைப் பாராட்டிக் கடிதம் அனுப்பினார். இது காந்திஜிக்கும் நேதாஜீக்கும் இருந்த மோதலை அதிக படுத்தியது.

 

காந்தியின் பல முடிவுகளை நேரடியாகவே எதிர்த்தார் போஸ். இதனால் திட்டமிட்டே காரிய கமிட்டியில் இருந்து போஸ் நீக்கப்பட்டார். இதனால் சீனுவாச அய்யரைத் தலைவராகக் கொண்டு 'காங்கிரஸ் ஜனநாயக கட்சி'யைத் தொடங்கினார்.

 

மாநகராட்சி நிர்வாக அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போஸ், கொல்கத்தா நகரில் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டார். இவருக்கு ஆதரவு பெருகி வருவதைக் கண்ட பிரிட்டிஷ் அரசு இவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. சிறையில் இருந்தபடியே சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். சிறையிலிருந்து வெளிவந்து உடல்நிலை தேறிய பின் 1930-ல் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் சென்று இந்திய விடுதலைக்காக ஆதரவு திரட்டினார்.

 

மேலும், இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியனார்.

 

ஆஸ்திரியாவை சேர்ந்த எமிலியின் அறிமுகம் அவருக்கு கிடைத்தது. அவரை தனது உதவியாளராக்கிக்கொண்டார். இருவருக்குள்ளும் காதல் அரும்பியது. 1937 டிசம்பர் 27ல் எமிலியை போஸ் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நவம்பர் 29, 1942-ல் ஒரு மகள் பிறந்தார். அவருக்கு அனிதா போஸ் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

 

1941-ல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை உருவாக்கி ஆசாத் ஹிந்த் என்ற ரேடியோ மையத்தையும் நிறுவி, நாட்டுக்கெனத் தனிக் கொடியை அமைத்து, ஜன கணமன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார். இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, பெண்களுக்கெனத் தனிப் பிரிவு ஏற்படுத்தி அதற்கு ஜான்சி ராணிப் படை என்று பெயரிட்டார்.

 

இந்திய புரட்சி நாயகரும் இந்தியாவின் தன்னிகரற்ற சுதந்தரப் போராட்ட வீரருமான இவர் இரத்தத்தை தாருங்கள் உங்களுக்கு விடுதலையைப் பெற்று தருகிறேன் என சூளுரை கொண்டார்.

 

1945 ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி விமான விபத்தில் 48-ஆவது வயதில் உயிரிழந்ததாக ஜப்பான் அரசு அறிவித்தது, இது தவிர உருசியாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் இவருடைய மரணம் குறித்துப் பல்வேறு முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன.

 

1992-இல் சுபாஷ் சந்திரபோசுக்கு, இறப்புக்குப் பின்னான இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஆனால் விருது வழங்கும் குழுவால் சுபாஷ் சந்திர போஸின் இறப்பு குறித்த ஆதாரங்களைத் தர முடியவில்லை எனவே உச்சநீதிமன்ற ஆணையின்படி இவ்விருது திரும்ப வாங்கப்பட்டது.

 

ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேசபக்தியுடன் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி, தேசப்பற்றை வளர்ப்போம்! வாழ்க இந்தியா!!! வளர்க பாரதம்!!!

No comments:

Post a comment