KALVISOLAI TNPSC

Tuesday, 4 October 2016

மூலிகை மந்திரம் – வேர்க்கடலை

மூலிகை மந்திரம் – வேர்க்கடலை

கொறிப்பதற்கு சுகமான தின்பண்டமாகவும், சமையலில் எண்ணெயாகவும் பயன்படும் வேர்க்கடலையின் நன்மைகள் பற்றி விரிவாகவே பார்ப்போம்.வேர்க் கடலையின் தாவரப்பெயர் Arachis hypogaea. ஆங்கிலத்தில் Ground nut என்றும், ஆயுர்வேதத்தில் 'மண்டபி', 'பூமி மட்கா' போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. நம்மவர்கள் 'நிலக்கடலை', 'மணிலாப்பயறு' என்று குறிப்பிடுகிறார்கள். இந்தியா முழுவதும் வேர்க்கடலை பரவலாகப் பயிரிடப்பட்டாலும் தென்மாநிலங்களிலேயே அதிகம் பயிரிடப்படுகிறது. வடக்கே மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் மாநிலத்திலும் அதிகம் பயிராகிறது. இதன் தாயகம் பிரேசில் என்று தாவர வல்லுநர்கள் கணித்திருக்கிறார்கள். ஆண்டுக்கு ஒருமுறை பயிராகக் கூடிய வேர்க்கடலை, பல கிளைகளைக் கொண்டு தரையினில் படர்ந்து வளரக்கூடிய ஒரு செடி. இதனுடைய தண்டுகள் 30 முதல் 80 செ.மீ. நீளம் உடையவையாக இருக்கும்.

மஞ்சள் நிறத்தில் கொத்துக் கொத்தாக பூக்களைப் பெற்றிருக்கும். சத்துகள் நிறைந்த இதன் கடலை தரைக்குள் வேர்ப்பகுதியில் கொத்துக் கொத்தாகக் காய்க்கும். மருத்துவப் பயன்கள் சிலருக்கு ரத்தம் உறையும் தன்மை இல்லாததாலும் ரத்தம் நீர்மை பெற்று இருப்பதாலும் எங்கேனும் மெதுவாக அடிபட்டால் கூட அந்த இடத்தில் வீக்கம் கண்டு ரத்தமும் தேக்கமுறும். மேலும், அடிபட்ட காலங்களில் ரத்தம் உறையாமல் உயிருக்கு ஆபத்தான நிலையும் ஏற்படும். இவை மட்டுமின்றி பற்களின் ஈறுகளில் இருந்தோ, மூக்கினுள் இருந்தோ அல்லது வேறு எங்கேனும் மெல்லிய சதைப்பகுதியினின்றோ ரத்தக்கசிவு ஏற்படும் நிலையும் உண்டாகும். இந்நோயை தடுத்து நிறுத்தும் சக்தியை வேர்க்கடலை மாவும், வேர்க்கடலையின் மேல் தோலும் பெற்றிருக்கிறது. வேர்க்கடலையின் தோல்பகுதியில் இருக்கும் Bioflavonoid கொழுப்பைக் கரைக்கும் திறனைப் பெற்றிருப்பதோடு புற்றுநோயைக் குணப்படுத்தக் கூடியதாயும், புற்றுநோய் வராமல் தடுத்து நிறுத்தக் கூடியதாகவும் விளங்குகிறது. இதன் மெல்லிய சிவந்த தோலினிலிருந்து பெறப்படும் Capric acid எனும் வேதிப்பொருள் பூஞ்சைக் காளான்களைப் போக்கும் வல்லமை கொண்டது. மறைந்திருக்கும் சத்துகள் 100 கிராம் வேர்க்கடலையில் எரிசக்தி 570 கலோரி, மாவுச்சத்து 21 கிராம், நார்ச்சத்து 9 கிராம், கொழுப்புச்சத்து 48 கிராம், புரதச்சத்து 25 கிராம் போன்றவை அடங்கி உள்ளன. இத்துடன் அர்ஜினைன், டைரோசின், டிரிப்டோபேன் போன்ற எண்ணற்ற மருத்துவப் பொருட்களும் உள்ளன.

இதேபோல தயாமின், ரிபோஃப்ளேவின், நியாசின், பேண்ேடாதெனிக் அமிலம், வைட்டமின் பி6, வைட்டமின் ஈ ஆகியனவும் தாது உப்புகளான  சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம் ஆகியவையும் மிகுதியாக அடங்கியுள்ளன. 100 கிராம் வேர்க்

கடலையில் சராசரியாக 4.26 கிராம் நீர்ச்சத்து  உள்ளது.

மருத்துவத்தில் வேர்க்கடலை

வேர்க்கடலையை பச்சையாக உண்பதைவிட வறுத்தோ, வேக வைத்தோ சாப்பிடும்போது அதன் சத்துகள் முழுமையாகக் கிடைப்பதாக ஆய்வுகள் தெரியப்படுத்தி இருக்கின்றன. பச்சையாக  உண்பதைவிட இரண்டு முதல் நான்கு பங்கு உயிர்ச்சத்து அதிகமாகக் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளன.

வேர்க்கடலையை வேக வைத்தாகிலும், கடாயில் இட்டு வறுத்தாகிலும்வெல்லம் சேர்த்து சாப்பிடுவதால் உடலை வளர்க்கும் உரமாக விளங்கும். வேர்க்கடலையைத் தோல் நீக்கி இடித்து மாவாக்கிப் பாலில் வேக வைத்துச் சாப்பிட்டு வருவதால் ஆண்மை அதிகரிக்கும்.கடலை எண்ணெய் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து அன்றாடம் அருந்திவர சிறுநீர்ப்பை அழலைப் போக்கி சிறுநீரைச் சிரமமின்றிக் கழிக்க உதவும். சிறுநீர்த்தாரை எரிச்சலைப் போக்குவதாகவும் மலச்சிக்கலை உடைத்து தாராளமாக மலத்தைக் கழிக்கச் செய்யும்.

ஒரு தேக்கரண்டி கடலை எண்ணெயைப் பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வருவதால் 'கொனேரியா' எனும் பால்வினை நோய் குணமாகும். இதை சீன மக்கள் பின்பற்றி வருகிறார்கள். 'கொனேரியா' நோய்க்குப் பயன்படுத்துவதைப் போலவே மூட்டுத் தேய்மானம், மூட்டு வலி, தூக்கமின்மைக்கும் சீன மக்கள் கடலை எண்ணெயைப் பயன்படுத்துகின்றனர்.வேர்க்கடலையில் ரிபோஃப்ளேவின், நியாசின், தயாமின், பேண்டோ தெனிக் அமிலம், வைட்டமின் பி6 மற்றும் ஃபோலேட் ஆகிய சத்துகள் மிகுதியாக அடங்கியுள்ளன. இவை மூளையின் ஆரோக்கியத்துக்கும் மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்லவும் உதவுகின்றன.

 

நவீன ஆய்வுகளில் வேர்க்கடலை

வேர்க்கடலையை அன்றாடம் பயன்படுத்துவதால் உடலின் ஆரோக்கியத்துக்குத் தேவையான நல்ல கொழுப்புச்சத்தான HDL போதுமான அளவு கிடைக்கிறது. சர்க்கரை நோயாளிகள் வேர்க்கடலையை அடிக்கடி சேர்த்துக்கொள்வதால் மாரடைப்பு வராத வண்ணம் பாதுகாப்பு கிடைக்கிறது. உணவு உண்பதற்கு முன் இருக்கிற சர்க்கரை அளவை வேர்க்கடலை குறைப்பதோடு, இதயத்துக்கு ஊறு செய்கிற டிரை கிளிசரைட்ஸ் மற்றும் எல்.டி.எல். கொழுப்புச்சத்து ஆகியவற்றையும் கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது. வேர்க்கடலை நல்ல கொழுப்புச்சத்தினை நமக்குத் தருவதைப் போல, உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை மலத்தோடு வெளியேற்றம் செய்யவும் உதவுகிறது.

சோர்வு நீக்கி புத்துணர்வு தரக்கூடியதாகவும், வீக்கத்தைக் கரைக்கக்கூடியதாகவும் வேர்க்கடலை விளங்குகிறது. வேர்க்கடலைச் செடியின் இலைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சத்துவமானது மென்மையான மயக்கம் ஊட்டியாகவும் மூளைக்கு அமைதி தந்து தூக்கத்தைத் தரக்கூடியதாகவும் விளங்குவதாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது.ஆயுள், ஆரோக்கியம் இரண்டையும் அளிக்கக்கூடிய Resveratrol எனும் மருத்துவ வேதிப்பொருள் வேர்க்கடலையில் மிகுந்து இருப்பதாகவும் ஆய்வுகள் தெரியப்படுத்தி இருக்கின்றன. இந்த ரெஸ்விரேட்ரோல் எனும் சத்துவம் உடலில் தன்னிச்சையாகச் செயல்பட்டு எங்கு வேண்டுமானாலும் புற்றுநோய் ஏற்படக் காரணமான நச்சுகளை நசித்து ஆரோக்கியத்துக்கு அடிகோலுகிறது.

வேர்க்கடலையில் மிகுதியாக இருக்கும் புரதச்சத்து இறந்துபோன செல்களை ஈடுகட்டவும் இருக்கிற செல்களுக்கு புத்துணர்வு தரவும் இன்றியமையாததாகிறது. வளரும் குழந்தைகள், சைவ உணவை வழக்கத்தில் கொண்டோர், புரதச்சத்து  குறைபாடுடையோர் வேர்க்கடலையை எவ்வகையிலேனும் எடுத்துக் கொள்வது நன்மை தரும்.வேர்க் கடலையில் மிகுந்துள்ள புத்துயிர்வு தரும் வேதிப்பொருட்களான பாலிபினால்ஸ் மற்றும் ஒலியிக் அமிலம் (Oleic acid) ஆகியன இதயத்துக்குப் பாதுகாப்பாக மட்டுமின்றி நோய்க்கிருமிகளைத் தடுத்து நிறுத்துவதோடு புற்றுநோய் வராத வண்ணம் பாதுகாக்கிறது.

அலர்ஜி?

அலர்ஜி என்ற உணவு ஒவ்வாமை ஒருவருக்கொருவர் மாறுபடும். அதுபோல, வேர்க்கடலையும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரியப் படுத்தியிருக்கின்றன. அதனால், வேர்க்கடலையோ, கடலை எண்ணெயோ பயன்படுத்திய பிறகு சரும எரிச்சல் போன்ற ஏதேனும் ஒவ்வாமையை உணர்ந்தால் மருத்துவரின் ஆலோசனை பெற்றுத் தவிர்த்துவிடலாம்.

No comments:

Post a comment