TNTET 2019

Saturday, 22 May 2021

மத்திய அரசு அனுமதிக்கும் வரை ஒரே ஆண்டில் பெற்ற இரு பட்டங்களை அங்கீகரிக்க முடியாது ஐகோர்ட்டு முழு அமர்வு தீர்ப்பு

ஒரே கல்வியாண்டில் இரண்டு பட்டங்கள் பெறுவதை மத்திய அரசு அனுமதிக்கும் வரை, அவற்றை அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களாக கருதமுடியாது என சென்னை ஐகோர்ட்டு முழு அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2013-ம் ஆண்டு மே 9-ந்தேதி அறிவிப்பாணை வெளியிட்டது.

இப்பணிக்கு விண்ணப்பித்த பி.ஏ., பி.எட். படித்த ஜெகதீஸ்வரி என்பவர், ஒரே கல்வியாண்டில், நேரடியாக ஒரு பட்டத்தையும், மற்றொன்றை தொலைதூர கல்வி மூலமும் முடித்திருந்தார். இதனால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

அதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதையடுத்து, அவர் செய்த மேல்முறையீடு வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வும் தள்ளுபடி செய்தது.

ஒரு பட்டத்தை தொலைதூர கல்வியிலும், இன்னொன்றை நேரடி வகுப்பிலும் படித்ததை பல்கலைக்கழகங்கள் அங்கீகரிக்கவில்லை என்பதால், மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக தீர்ப்பளிக்கப்பட்டது.

இதேபோல ஒரே கல்வியாண்டில் பி.ஏ. மற்றும் பி.எட். படிப்புகளை முடித்த கவிதா என்பவர் தொடர்ந்த வழக்கில், அவரது கோரிக்கையை மற்றொரு தனி நீதிபதி ஏற்றுக்கொண்டார். அதை இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்து, ஒரே ஆண்டில் படிக்க தடை விதிக்கும் வகையில் விதிகள் இல்லை என்பதால், கவிதாவின் மனு ஏற்றுக்கொள்ளப்படுவதாக உத்தரவிட்டது.

இதற்கிடையில் இரு பட்டங்களை ஒரே ஆண்டில் படித்த சித்ரா என்பவர் உள்ளிட்ட மூவர் தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டு தனி நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த விவகாரத்தில் இரு வேறு அமர்வுகள், வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளதால், இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதற்காக வழக்கை முழு அமர்வு விசாரணை செய்ய தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்திருந்தார். ஒரே கல்வியாண்டில் இரு பட்டங்களை பெற்றவர்களை தமிழ்நாடு மேல்நிலைப்பணிகளுக்கு தேர்வு செய்ய முடியுமா என்ற கேள்விக்கு விடை காண வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அதன்படி நீதிபதிகள் வி.பாரதிதாசன், எம்.தண்டபாணி, பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய முழு அமர்வை தலைமை நீதிபதி அமைத்தார். அந்த முழு அமர்வு விசாரணையின்போது நேரடியாகவும், தொலைதூர படிப்பு மூலமும் ஒரே ஆண்டில் பட்டம் பெறுவதற்கு தடைவிதிக்க எந்த சட்டப்பிரிவு இல்லை என்றும், அதை காரணம்காட்டி இந்த பட்டங்களை ஏற்க முடியாது என கூறமுடியாது என்றும், இரு பட்டங்களுமே அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் மூலமாக வழங்கப்பட்டுள்ளன என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசு தரப்பில், விண்ணப்பதாரர்களுக்கான கல்வித்தகுதியை நிர்ணயிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதைப்பூர்த்தி செய்யாதவர்கள், ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியில்லை எனவும் வாதிடப்பட்டது.

பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில், ஒரே கல்வியாண்டில் இரட்டை பட்டப்படிப்பை அனுமதிப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுசம்பந்தமான பரிந்துரை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தபிறகு உரிய அறிவிப்பாணைகள் வெளியிடப்படும் என்று வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ஒரே கல்வியாண்டில் பெறக்கூடிய இரு பட்டங்களை மத்திய அரசு அனுமதிக்கும் வரை, அவற்றை அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களாக கருதமுடியாது.

ஆசிரியப் பணி என்பது மற்ற பணிகள் போல் இல்லை, வேறு எந்த அமைச்சுப் பணியையும் ஆசிரியப் பணியுடன் ஒப்பிட்டு பார்க்க முடியாது.

ஒரு சிறந்த ஆசிரியருக்கு முறையான பயிற்சி அவசியம். அப்படிப்பட்டவர்களால் மட்டுமே சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும். அந்தவகையில், தொலைதூர கல்வி மூலம் கல்வி பெறும் ஒருவருக்கு இந்த அனுபவங்கள் இருக்காது. மத்திய அரசு அங்கீகரிக்காத வரை, இரட்டை பட்டங்களை அங்கீகரிக்கப்பட்ட பட்டமாக கருதமுடியாது என முடிவு செய்கிறோம்.

இந்த முடிவை அடிப்படையாக கொண்டு, தனி நீதிபதி வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம். இந்த வழக்கை ஐகோர்ட்டு பதிவுத்துறை தனி நீதிபதி முன்பு பட்டியலிட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Download | Click Here

No comments:

Popular Posts