TNTET 2019

Thursday, 20 May 2021

DGE TN | பொதுத்தேர்வு அறிவிப்பு வெளியாகாத நிலையில் பிளஸ்-2 மாணவர்களுக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் திருப்புதல் தேர்வு கல்வித்துறை ஏற்பாடு

பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், பிளஸ்-2 மாணவர்களுக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் மாவட்ட அளவில் திருப்புதல் தேர்வு நடத்துவது குறித்த அறிவிப்பு கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மே மாதம் நடத்தப்பட இருந்த பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து நோயின் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுத்தேர்வு எப்போது நடத்தப்படும்? என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

இந்தநிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிளஸ்-2 பொதுத்தேர்வு உயர்கல்வி சேர்க்கைக்கு மிக முக்கியம் என்றும், தேர்வு நடத்தப்படும் என்றும் கூறி வருகிறார். இதற்கிடையில் தான் தற்போது ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் சார்பில் அந்தந்த மாவட்ட பள்ளிகளுக்கு ஒரு சுற்றறிக்கை சென்று கொண்டு இருக்கிறது. அந்த வகையில் பிளஸ்-2 மாணவர்களுக்கு அலகு மற்றும் திருப்புதல் தேர்வு இந்த மாதம் இறுதியில் தொடங்கி நடத்த உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இந்த தேர்வு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களின்படி நடத்தப்பட வேண்டும் என்றும், மாணவ-மாணவிகள் அவரவர் வீட்டில் இருந்தபடியே இந்த தேர்வை எழுத வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதற்கேற்றபடி, சில வழிகாட்டு நெறிமுறைகளையும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வெளியிட்டு இருந்த நிலையில், தற்போது திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகமும் திருப்புதல் தேர்வு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

* அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்கள், மாணவிகளின் செல்போன் எண்ணை பெற்று, தனித்தனியாக ‘வாட்ஸ்-அப்’ குழுக்களை உருவாக்க வேண்டும்.

* தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், கணினி பயன்பாடு, கணினி தொழில்நுட்பம், புவியியல், கணிதம், வரலாறு, பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியல், வணிக கணிதம், புள்ளியியல் ஆகிய 18 பாடங்களுக்கு வினாத்தாள் முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வு நடைபெறும் தினத்தன்று அனுப்பி வைக்கப்படும். இதர பாடங்களுக்கு அந்தந்த பாடம் சார்ந்த ஆசிரியர்கள் வினாத்தாள்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும்.

* வினாத்தாளை ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளுக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் அனுப்ப வேண்டும். அதை அவர்கள் பதிவிறக்கம் செய்து, விடைத்தாளில் பதில்களை எழுதி, கையொப்பமிட்டு ‘பி.டி.எப்.’ வடிவில் ‘வாட்ஸ்-அப்’ வாயிலாக ஆசிரியர்களுக்கு அனுப்ப வேண்டும்.

* மாணவர்கள் எழுதிய வினாத்தாள்களை வீட்டில் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். ‘வாட்ஸ்-அப்’பிலேயே விடைத்தாளை ஆசிரியர்கள் திருத்தி, மாணவர்களுக்கு அனுப்ப வேண்டும். மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணை பட்டியலாக தயார் செய்து, மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download | Click Here

No comments:

Popular Posts