Wednesday, October 05, 2022

TNPSC G.K - 183 | பொதுத்தமிழ் - ஏழாம் வகுப்பு - அமுதத் தமிழ்.

எங்கள் தமிழ் :


  • அருள்நெறி அறிவைத் தரலாகும்
  • அதுவே தமிழன் குரலாகும்
  • இன்பம் பொழிகிற வானொலியாம்
  • எங்கள் தமிழெனும் தேன்மொழியாம்
  • -நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

சொல்லும் பொருளும் :


  • ஊக்கிவிடும் - ஊக்கப்படுத்தும்
  • குறி - குறிக்கோள்
  • விரதம் - நோன்பு
  • பொழிகிற - தருகின்ற

நூல் வெளி :


  • வெ. இராமலிங்கனார் "நாமக்கல் கவிஞர்" என்று அழைப்பர்.
  • இவர் தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர்.
  • காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காந்தியத்தைப்பின்பற்றியதால் இவர் காந்தியக்கவிஞர் என்றும் அழைக்கப்படுகிறார்.
  • தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர்.
  • மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என்கதை, சங்கொலி - இவரின் படைப்புகள்

ஒன்றல்ல இரண்டல்ல :


  • ஒன்றல்ல இரண்டல்ல தம்பி சொல்ல
  • ஒப்புமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில்
  • சொல்லுக்குத் தலைகொடுத்தான் அருள்மீறி – இந்த
  • வள்ளலாம் குமணன்போல் வாழ்ந்தவர் வரலாறு
  • - உடுமலை நாராயணகவி

நூல் வெளி :


  • பகுத்தறிவுக்கவிராயர் என்று புகழப்படுபவர்
  • உடுமலை நாராயணகவி. இவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர்.

பேச்சுமொழியும் எழுத்துமொழியும் :


  • வாயினால் பேசப்பட்டுப் பிறரால் கேட்டு உணரப்படுவது பேச்சு மொழியாகும். இவ்வாறு பேசுவதும் கேட்பதும் மொழியின் முதல் நிலை.
  • கண்ணால் கண்டு உணருமாறு வரிவடிவமாக எழுதப்பட்டுப் படிக்கப்படுவது எழுத்துமொழியாகும். இவ்வாறு எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் மொழியின் இரண்டாம் நிலை.
  • பேசப்படும் சொற்கள் மட்டுமன்றிப் பேசுபவரின் உடல்மொழி, ஒலிப்பதில் ஏற்ற இறக்கம் ஆகியனவும் பேச்சு மொழியின் சிறப்புக் கூறுகள்.

”எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில்

திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்”

-நன்னூல் நூற்பா.

  • பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி; எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்தநிலையில் வைத்துக் கருதப்படும் மொழியாகும்.
  • இவையே அன்றி வேறுவகை மொழி நிலைகளும் உண்டு. எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும்- மு.வரதராசனார்
  • ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை வட்டார மொழி என்பர்
  • கன்னடம், தெலுங்கு, மலையாளம் முதலிய திராவிட மொழிகள் தமிழிலிருந்து பிரிந்து சென்ற கிளை மொழிகள் ஆகும்.
  • பேச்சு மொழியை உலக வழக்கு என்றும், எழுத்து மொழியை இலக்கிய வழக்கு என்றும் கூறுவர்.
  • பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அஃது இரட்டை வழக்கு மொழி (Diglossic Language) எனப்படும்
  • தொல்காப்பியர் இவற்றை உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்று கூறியுள்ளார்.
  • தமிழில் பேச்சுமொழிக்கும் எழுத்துமொழிக்கும் இடையே வேறுபாடு உண்டு. எனவே தமிழை இரட்டை வழக்கு மொழி என்பர்.

“எளியநடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்

இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்.

வெளியுலகில், சிந்தனையில் புதிதுபுதிதாக

விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்கள் எல்லாம் கண்டு

தெளிவுறுத்தும் படங்களொடு சுவடிஎலாம் செய்து

செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்.”

- பாவேந்தரின் ஆசை.

குற்றியலுகரம், குற்றியலிகரம் :

  • தமிழ் எழுத்துகளை முதலெழுத்து, சார்பெழுத்து என இரு வகையாகப் பிரிப்பர். உயிர் 12, மெய் 18 ஆகிய 30 எழுத்துகளும் முதலெழுத்துகள் எனப்படும்.
  • சார்பெழுத்து பத்து வகைப்படும்.
  • அவை உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் என்பனவாகும்.

குற்றியலுகரம் :

  • கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் இறுதியில் வரும்போது, ஒரு மாத்திரைக்குப் பதிலாக அரை மாத்திரை அளவே ஒலிக்கும்.
  • இவ்வாறு தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும்.
  • குறுமை+இயல்+உகரம் = குற்றியலுகரம்.
  • (எ.கா.) காசு, எஃகு, பயறு, பாட்டு, பந்து, சால்பு

முற்றியலுகரம் :

  • தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள் ஒரு மாத்திரை அளவுக்கு முழுமையாக ஒலிக்கும்.
  • வல்லினம் அல்லாத உகரங்கள் எப்போதும் முழுமையாகவே ஒலிக்கும்.
  • இவ்வாறு ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை முற்றியலுகரம் என்பர்.
  • (எ.கா.) புகு, பசு, விடு, அது, வறு, மாவு, ஏழு

அறிந்து கொள்வோம் :

  • குறில் எழுத்துகளைக் குறிக்க ‘கரம்’ (எ.கா.) அகரம், இகரம், உகரம், ககரம், மகரம்
  • நெடில் எழுத்துகளைக் குறிக்க ‘கான்’ (எ.கா.) ஐகான், ஔகான்
  • குறில், நெடில் எழுத்துகளைக் குறிக்க ‘காரம்’ (எ.கா.) மகாரம், ஏகாரம், ஐகாரம், ஔகாரம்
  • ஆய்த எழுத்தைக் குறிக்க 'கேனம்' (எ.கா.) அஃகேனம்

குற்றியலுகரத்தின் வகைகள்

நெடில்தொடர்க் குற்றியலுகரம்

  • தனிநெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘நெடில் தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும். இவை ஈரெழுத்துச் சொற்களாக மட்டும் அமையும்.
  • (எ.கா.) பாகு, மாசு, பாடு, காது, ஆறு.

ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்

  • ஆ ய்த எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும். (எ.கா.) எஃகு, அஃது

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

  • தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.(எ.கா.) அரசு (ர = ர் + அ) கயிறு (யி = ய் + இ) ஒன்பது (ப = ப் + அ) வரலாறு (லா = ல் + ஆ).

வன்தொடர்க் குற்றியலுகரம்

  • வல்லின (க், ச், ட், த், ப், ற்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘வன்தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.(எ.கா) பாக்கு, பேச்சு, பாட்டு, பத்து, உப்பு, பற்று.

மென்தொடர்க் குற்றியலுகரம்

  • மெல்லின (ங், ஞ், ண், ந், ம், ன்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘மென்தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.(எ.கா.) பங்கு, மஞ்சு, பண்பு, பந்து, அம்பு, கன்று.
  • இடைத்தொடர்க் குற்றியலுகரம்
  • இடையின (ய், ர், ல், வ், ழ், ள்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘இடைத்தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும். (எ.கா.) எய்து, மார்பு, சால்பு, மூழ்கு.

குற்றியலுகரம்

  • ‘வ்’ என்னும் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை.
  • மேலும் சு, டு, று ஆகியவை இறுதியாக அமையும் இடைத்தொடர் குற்றியலுகரச் சொற்களும் இல்லை.

குற்றியலிகரம்

  • தன் ஒரு மாத்திரை அளவில் குறுகி ஒலிக்கும் இகரம் ‘குற்றியலிகரம்’ எனப்படும். குறுமை + இயல் + இகரம் = குற்றியலிகரம்.
  • குற்றியலிகரம் இரண்டு இடங்களில் மட்டும் வரும்.

இடம் - 1

  • குற்றியலுகரச் சொற்களைத் தொடர்ந்து யகரத்தை முதல் எழுத்தாகக் கொண்ட சொற்கள் வரும்போது குற்றியலுகரத்தில் உள்ள உகரம் இகரமாக மாறும்.
  • (எ.கா.) கொக்கு (க் + உ)+யாது = கொக்கியாது (க் + இ)
  • தோப்பு (ப் + உ)+ யாது = தோப்பியாது (ப் + இ)
  • நாடு (ட் + உ)+ யாது = நாடியாது (ட் + இ)
  • எனப்படுவது (த் + உ)+யாது = எனப்படுவதியாது (த் + இ)

இடம் - 2

  • ‘மியா’ என்பது ஓர் அசைச்சொல் (ஓசை நயத்திற்காக வருவது). இதில் ‘மி’ யில் (மி = ம் + இ) உள்ள இகரம் குற்றியலிகரம் ஆகும்
  • (எ.கா.) கேள் + மியா = கேண்மியா
  • செல் + மியா = சென்மியா
  • குற்றியலிகரம் தற்போது உரைநடை வழக்கில் இல்லை. இலக்கியங்களில் மட்டுமே உள்ளது.

கலைச்சொல் அறிவோம் :


  • ஊடகம் – Media
  • பருவ இதழ் - Magazine
  • மொழியியல் - Linguistics
  • பொம்மலாட்டம் - Puppetry
  • ஒலியியல் - Phonology
  • எழுத்திலக்கணம் - Orthography
  • இதழியல் - Journalism
  • உரையாடல் - Dialogue

No comments:

Popular Posts