தமிழகம்
மாமல்லபுரம் அருகே, இந்திய தொல்லியல் துறையினர் நவீன கருவிகளுடன் கடலில் ஆய்வில் ஈடுபட்டனர். மாமல்லபுரம் கடற்கரை கோவிலிலிருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில், 6-7 மீட்டர் ஆழத்தில் பல்வேறு கட்டிடக் கலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆராய்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெறும் என தொல்லியல் துறை கூடுதல் இயக்குநர் பேராசிரியர் அசோக் திருப்பாதி தெரிவித்தார். (ஆகஸ்டு 16)
தமிழ்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் வருவாய் 5 மடங்கு உயர்ந்துள்ளது. (ஆகஸ்டு 16)
நுகர்வோர் குறைதீர்க்கும் பணியில் கடந்த ஜூலை மாதத்தில் நாடு முழுவதும் முன்னணி மாநிலமாக தமிழகம் விளங்கியது என்று மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகம் அறிவித்தது. (ஆகஸ்டு 17)
தமிழகத்தில், நாட்டிலேயே முதல்முறையாக விவசாயிகளுக்கு இணையவழியில் பயிர்க் கடன் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். (ஆகஸ்டு 17)
மின் சாதனங்கள் மற்றும் ஆடைகள் உற்பத்தியில் சிறப்புத் திறனைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. மேலும் மின்தூக்கிகள் உற்பத்தி மையமாக தமிழ்நாடு மாறியதாக அரசு தெரிவித்துள்ளது. (ஆகஸ்டு 18)
முன்னாள் ராணுவ வீரர்களின் வாழ்க்கையை மேம்படுத்த `முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். (ஆகஸ்டு 19)
பொருளாதாரம்
இந்தியாவின் அந்நியச்செலாவணி கையிருப்பு ஆகஸ்டு 8-ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 69,360 கோடி டாலராக உயர்ந்துள்ளது. (ஆகஸ்டு 16)
உலகளவில் உருக்கு உற்பத்தி குறைந்துள்ள நிலையில், இந்தியாவின் உருக்கு உற்பத்தி 12 சதவீதத்துக்கும் மேல் வளர்ந்துள்ளது. (ஆகஸ்டு 16)
இந்தியாவின் டேப்லட் சந்தை 2025-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 20 சதவீத வருடாந்திர வளர்ச்சியை கண்டுள்ளது. (ஆகஸ்டு 16)
முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான அரசு செலவுகளின் அதிகரிப்பால், 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் சிமெண்ட் நிறுவனங்கள் இரட்டை இலக்க விற்பனை வளர்ச்சியை சாதித்துள்ளன. (ஆகஸ்டு 18)
நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் சுத்திகரிப்பு பொருட்கள் உற்பத்தி குறைந்ததால், கடந்த ஜூலை மாதத்தில் 8 உள்கட்டமைப்புத் துறைகளின் வளர்ச்சி 2 சதவீதமாக இருந்தது. இது இரு மாதங்களில் காணாத மந்த வளர்ச்சியாகும். (ஆகஸ்டு 21)
இந்தியா
நாகாலாந்து கவர்னராக மணிப்பூர் கவர்னர் அஜய்குமார் பல்லாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். (ஆகஸ்டு 16)
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயில் சேவை விரைவில் அறிமுகமாவதற்கு முன்பு நடத்தப்பட்ட முக்கிய சோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (ஆகஸ்டு 16)
ஒடிசாவின் 4 முக்கிய மாவட்டங்களில் இந்திய தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் 10 முதல் 20 டன் அளவுக்கு தங்கம் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒடிசாவில் தங்கம் எடுக்கப்பட்டால் இந்தியாவில் உள்நாட்டு தங்கம் உற்பத்தி அதிகரித்து, இறக்குமதியும் ஓரளவு குறையும். (ஆகஸ்டு 17)
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டத்துக்கான போட்டி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 48 பேர் பங்கேற்றனர். இதன் இறுதிச் சுற்று போட்டியில் ராஜஸ்தானை சேர்ந்த மணிகா விஷ்வகர்மா மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டத்தை வென்றார். (ஆகஸ்டு 19)
உலகம்
பாகிஸ்தான் கடற்படையை வலிமைப்படுத்த 8 ஹாங்கோர் வகை நீர்மூழ்கி கப்பல்களை வழங்க சீனா ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி சீனாவின் வூஹான் நகரில் நடந்த விழாவில் 3-வது ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டது. (ஆகஸ்டு 16)
விளையாட்டு
சைபன் சர்வதேச 2025 பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் தன்யா ஹேமந்த் 15-10, 15-8 என்ற புள்ளி கணக்கில் ஜப்பானின் கனே சகாயை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். (ஆகஸ்டு 16)
ஜெர்மனியில் நடைபெற்ற சூப்பர் கோப்பை கால்பந்து போட்டியில் பேயர்ன் மியூனிக் 2-1 கோல்கணக்கில் வி.எப்.சி. ஸ்டட்கார்ட் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. இப்போட்டியில் இந்த அணிக்கு இது 11-வது சாம்பியன் கோப்பையாகும். (ஆகஸ்டு 17)
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் அன்மோல், ஆதித்யா மல்ரா, சவுரப் சவுத்ரி ஆகியோர் கொண்ட இந்திய அணி 2-வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்றது. மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனுபாகர் 219.7 புள்ளிகள் சேர்த்து வெண்கலப் பதக்கம் வென்றார். (ஆகஸ்டு 19)
பல்கேரியாவின் சாமோகோவில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் காஜல், தபஸ்யா ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர். (ஆகஸ்டு 21)
அறிவியல்
பூமியின் கீழ் சுற்றுப் பாதையில் 75 டன் எடை கொண்ட செயற்கைக்கோளை நிலைநிறுத்த 40 மாடி கட்டிடத்தின் உயரத்தை கொண்ட ராக்கெட் ஒன்றை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார். (ஆகஸ்டு 19)
பூமியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிக்கவும், பருவநிலை மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் நாசா கூட்டுமுயற்சியில் நிசார் செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டது. இந்நிலையில் விண்ணில் ஏவப்பட்டு 17 நாட்களுக்குப் பிறகு இந்த செயற்கைக்கோளில் இருந்த 12 மீட்டர் நீளம், 64 கிலோ எடையுள்ள ஆன்டெனா விரிந்து பணியை தொடங்கியது. இதற்கு விஞ்ஞானிகள் `தங்கமலர்’ என்று பெயரிட்டுள்ளனர். (ஆகஸ்டு 20)
பால்வெளி மண்டலத்தில் 7-வது கோளான யுரேனசை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ஆராய்ந்து வருகிறது. ஏற்கனவே 28 நிலாக்களை யுரேனஸ் கொண்டுள்ளது. இந்நிலையில் யுரேனஸ் கோளை மேலும் ஒரு நிலா சுற்றி வருவதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது. (ஆகஸ்டு 20)
5 ஆயிரம் கி.மீ. தொலைவிலான இலக்குகளை குறிவைத்து தாக்கும் அக்னி-5 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. (ஆகஸ்டு 20)
No comments:
Post a Comment