அக்., 3ம் தேதி நடக்கும் டி.இ.டி., தேர்வு கேள்வித்தாளின் தரத்தில் சமரசம் கிடையாது. ஏற்கனவே இருந்த அதே தரம் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்று டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி கூறியுள்ளார்.


ஜூலை 12ம் தேதி நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு, நேற்று வெளியிடப்பட்டது. தேர்வு எழுதிய, 6.72 லட்சம் பேரில், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 25 ஆயிரம் பேரை தேர்வு செய்ய நடத்திய தேர்வில், வெறும், 0.36 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பதால், அக்., 3ம் தேதி, மீண்டும் ஒரு தேர்வை நடத்த, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.ஏற்கனவே நடத்திய தேர்வுக்கு, போதிய நேரம் வழங்கவில்லை என, எழுந்த புகாரைத் தொடர்ந்து, அக்டோபரில் நடக்கும் தேர்வுக்கு, 3 மணி நேரம் வழங்கப்படும் எனவும் டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
ஜூலை 12ம் தேதி, டி.ஆர்.பி., நடத்திய முதல் தகுதித் தேர்வில், 6 லட்சத்து, 72 ஆயிரத்து, 204 பேர் பங்கேற்றனர். முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் ஆகிய இரண்டுமே கடினமாக இருந்ததாகவும்; போதிய அளவிற்கு நேரம் வழங்கவில்லை எனவும், தேர்வர்கள் குற்றம் சாட்டினர்.அதற்கு தகுந்தாற்போல், நேற்று வெளியான தேர்வு முடிவும் அமைந்தது. தேர்வு எழுதிய 6.72 லட்சம் பேரில், வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 0.36.
தேர்வு முடிவுகள், டி.ஆர்.பி., இணையதளத்தில், நேற்று அதிகாலை வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, தேர்வு முடிவு குறித்த புள்ளி விவரங்களை, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி வெளியிட்டார்.அப்போது, நிருபர்களிடம் அவர்கூறியதாவது:
முதல் தாள் தேர்வில், 1,735 பேரும், இரண்டாம் தாள் தேர்வில், 713 பேரும் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். விண்ணப்பத்திலும், விடைத்தாளிலும் கேட்கப்பட்ட அடிப்படை விவரங்களை சரிவரச் செய்யாத தேர்வர்களுக்கு, அவர்கள் செய்த தவறுகளுக்கு ஏற்ப, மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது.கையெழுத்தில் வித்தியாசம் இருந்ததால், இரு தேர்வர்களுக்கு, டி.ஆர்.பி., தேர்வில் பங்கேற்க, ஐந்தாண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல் தாள் தேர்வில், 685 பேருக்கும்; இரண்டாம் தாள் தேர்வில், 1,547 பேருக்கும், அவர்கள் செய்த தவறுகளுக்கு ஏற்ப, உரிய தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.இரு தேர்வர், தங்கள் அசல் விடைத்தாள் நகலை ஒப்படைக்காததால், அவர்களுடைய தேர்வு ரத்து செய்யப்பட்டது.

தேர்வில், குறைந்த தேர்ச்சி சதவீதம் ஏற்பட்டிருப்பது குறித்து, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மாணவ, மாணவியரின் எதிர்காலத்தையும், தரமான கல்வித் தரத்தை ஏற்படுத்துவதையும் கருத்தில் கொண்டும், 60 சதவீத மதிப்பெண் பெறுபவர் மட்டுமே தேர்ச்சி என்ற நிலையை தொடர்ந்து கடைபிடிக்குமாறு, அரசு அறிவுறுத்தியது.தரமான ஆசிரியரை பணியில் அமர்த்தினால் தான், தரமான கல்வியை வழங்க முடியும் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 60 சதவீத மதிப்பெண் பெறாத தேர்வருக்காக, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில், மற்றொரு டி.இ.டி., தேர்வை உடனடியாக நடத்தவும், அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அக்., 3ம் தேதி, அடுத்த டி.இ.டி., தேர்வு நடக்கும்.இதன் முடிவு, அக்., இறுதிக்குள் வெளியிடப்படும். ஏற்கனவே நடந்த தேர்வில் பங்கேற்று, தேர்ச்சி பெறாத தேர்வர் மட்டுமே, இந்தத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.இந்தத் தேர்வுக்காக, தனியாக விண்ணப்பிக்கவோ, தேர்வுக் கட்டணம் செலுத்தவோ தேவையில்லை. புதிய, "ஹால் டிக்கெட்' அனுப்பப்படும்; அதில் குறிப்பிடும் மையங்களுக்குச் சென்று தேர்வு எழுதினால் போதும்.ஏற்கனவே நடத்திய தேர்வுக்கு, போதிய நேர அவகாசம் வழங்கவில்லை என, கடும் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அக்., 3ல் நடக்கும்,முதல் மற்றும் இரண்டாம் தாள் ஆகிய இரண்டு தேர்வுக்கும், தலா 3 மணி நேரம் வழங்கப்படும்.கேள்வித்தாள் கடினமாக இருந்தது என, அனைவரும் கூறினர். ஆனால், இந்தத் தேர்விலும், இத்தனை ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக, பெண்கள் அதிகளவு மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்களால் மட்டும் எப்படி முடிந்தது?கேள்வித்தாள் அமைப்பை புரிந்து, தேர்வுக்கு முழுவதுமாக தயாரானால், கண்டிப்பாக தேர்ச்சி பெற முடியும். அடுத்து நடக்கும் டி.இ.டி., தேர்வு கேள்வித்தாளின் தரத்தில், எவ்வித மாற்றமும் இருக்காது. ஏற்கனவே இருந்த அதே தரம், தொடர்ந்து கடைபிடிக்கப்படும். கேள்வித்தாள் தரத்தில், சமரசம் கிடையாது.இதுவரை, 13 ஆயிரம் ஆசிரியரை தேர்வு செய்யும் பணி, இறுதி செய்யப்பட்டுள்ளது. அக்., இறுதிக்குள், மேலும், 26 ஆயிரம் ஆசிரியரை தேர்வு செய்யும் பணி முடிவடையும்.இவ்வாறு சுர்ஜித் சவுத்ரி கூறினார்.

3 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. அக்., 3ம் தேதி நடக்கும் டி.இ.டி., தேர்வு கேள்வித்தாளின் தரத்தில் சமரசம் கிடையாது. ஏற்கனவே இருந்த அதே தரம் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்று டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி கூறியுள்ளார்.
   BA(History) படித்த Arul vani என்ற பெண் TET தோ்வில் மாநிலத்திலேயே Social science முதலிடம் பெற்றுள்ளார். அனைவரும் நேரம் போதவில்லை..கேள்வித்தாள் மிகவும் கடினமாக இருந்தது. 5 மதிப்பெண்களுக்குரிய கணக்குகள் 1 மதிப்பெண் கேள்விகளாக இருந்தது என்று எல்லாரும் சொன்னார்கள். கேள்வித்தாளில் Social science பாடத்திற்குரிய கேள்விகள் 30 மதிப்பெண்களுக்கு மாத்திரம்தான் இருந்தது. மற்றவையெல்லாம் கணிதம்,ஆங்கிலம்,அறிவியல், சமூக அறிவியல் பாடத்திலிருந்து இருந்தது என்று தேர்வெழுதிய சிலர் சொல்லக் கேள்விப்பட்டேன். B.A(History) படித்த இந்தப் பெண் மாநிலத்தில் முதலிடம் என்றால் அது +2 விலும் கணிதமோ அல்லது அறிவியலோ படித்திருந்திருக்க வாய்ப்பு இல்லாதபடி 3rd group என்று சொல்லப்படுகிற History குருப்பில் படித்திருக்கவே வாய்ப்பிருக்கிறது. ஆனால் கணிதப்பட்டதாரிகள் அறிவியல் பட்டதாரிகள் விடையளிக்கமுடியாத வினாக்களுக்கு இவர் விடையளித்திருக்கிறார் என்றால்.. டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி சொல்கிற தரம் குறித்து சற்று யோசிக்க வேண்டியதிருக்கிறது. சரிதானே தமிழகமே?

   Delete
 2. ஆசிரியர் தகுதித் தேர்வு..நியாயம்தானா?
  தமிழக அரசு சமீபத்தில் நடத்திய தகுதித்தேர்வு ஆசிரியர்களை பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியிருக்கிறது. வட மாநிலங்களில் ஆசிரியர்கள் பணிக்கென்று முறையாக பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் இருப்பதில்லை. பட்டப்படிப்பை முடித்தவர்கள் நேரடியாக ஆசிரியராக வந்துவிடுகின்றார்கள். ஆகவே அங்கு இதுபோன்ற தேர்வுகள் மிக அவசியம். ஆனால் தமிழகத்தில் இது போன்ற நிலைமை இல்லை. இங்கு B.Ed மற்றும் D.T.Ed பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அதில் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்களுக்கு மட்டுமே சான்றுகள் வழங்கப்படுகிறது. எனில் மறுபடியும் எதற்கு ஒரு தகுதித் தேர்வு? சரி..அப்படியே தகுதித் தேர்வுகளில் வெற்றி பெறுகின்றவர்களுக்கு எல்லாம் உடனே அரசு வேலை உடனே வழங்கப்படுமா என்றால் ..இல்லை என்பதுவே அதிகாரிகளின் பதிலாய் இருக்கின்றது. ஒவ்வொரு முறையும் வேலையில்லா ஆசிரியர்களிடம் இருந்து 500 ரூபாயை தேர்வுக்கட்டணமாகப் பெற்று அவர்களை தேர்விற்கு என்று விடிய விடிய ஆயத்தமாக வைத்து தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் அதன்பிறகும் வேலை இல்லை என்று சொல்வது அவர்களை விரக்தியின் எல்லைக்கே கொண்டு போய்விடாதா? அது சமூகத்திற்கு நல்லதுதானா?
  தகுதித்தேர்வை ஆதரிப்பவர்கள் வைக்கிற வாதம்..குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கப் போகின்ற ஆசிரியர்கள் தகுதியானவர்களாக இருக்கவேண்டும் என அரசு எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்கமுடியும்?
  உண்மை..
  இந்த சமூகத்திற்கு தகுதியான ஆசிரியர்கள் மட்டும்தானா தேவை? தகுதியான நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், கலெக்டர்கள், தாசில்தார்கள் தேவையில்லையா? அவர்களுக்கும் இப்படி ஒரு தகுதித்தேர்வுகள் நடத்தவேண்டாமா?
  6 இலட்சம் வேலையில்லா ஆசிரியர்கள் தேர்வை எழுதியிருக்கின்றார்கள்.நிச்சயமாக இவர்கள் ஒவ்வொருவரும் இதைக்கொண்டு வந்த அதிகாரிகளையல்ல..அரசை சபித்துவிட்டுத்தான் தேர்வை எழுதியிருப்பார்கள். 6 இலட்சம் என்றால்..6 இலட்சக் குடும்பங்களும் வேதனைப்பட்டிருப்பார்கள். எனில் 18 இலட்ச எதிர் வாக்குகளைச் சம்பாதித்ததைத் தவிர கல்வி அமைச்சர் இந்த தேர்வினால் வேறென்ன சாதித்திருக்க முடியும்? அரசு கவனத்தில் கொள்ளவேண்டிய விசயம் இது..

  ReplyDelete