Default Image

Months format

Show More Text

Load More

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • NEW
  • GENERAL SCIENCE
  • HISTORY-INDIA
  • HISTORY-TAMIL NADU
  • ADMINISTRATION TN
  • NATIONAL MOVEMENT
  • INDIAN ECONOMY
  • INDIAN POLITY
  • INDIAN GEOGRAPHY
  • CURRENT AFFAIRS
  • MENTAL ABILITY
  • GENERAL TAMIL
  • Sitemap
  • Contact us

Kalvisolai.in - A Powerful Portal for Education

  • Home
  • TNPSC
  • _GENERAL SCIENCE
  • _HISTORY-INDIA
  • _HISTORY-TAMIL NADU
  • _ADMINISTRATION TN
  • _NATIONAL MOVEMENT
  • _INDIAN ECONOMY
  • _INDIAN POLITY
  • _INDIAN GEOGRAPHY
  • _MENTAL ABILITY
  • CURRENT AFFAIRS
  • GENERAL TAMIL

TNPSC G.K - 144 | பொது அறிவு - வரலாறு - சிந்து சமவெளி நாகரிகம் / சிந்துவெளி நாகரிகம் (Indus Valley Civilisation).

TNPSC-GENERAL-STUDIES , TNPSC-HISTORY-AND-CULTURE-OF-INDIA   
கல்விச்சோலை
Saturday, October 01, 2022
  • இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த இடைக்கற்காலம், புதிய கற்காலம் உள்ளிட்ட பல பண்பாடுகள் இந்தியாவின் மற்ற பகுதிகளில் நிலவின.
  • பெயரிடு முறையும் படிநிலைகளும் காலவரிசையும் இந்தியாவின் வடமேற்குப்பகுதியிலும் பாகிஸ்தானிலும் பொ.ஆ.மு. 3000 கால அளவில் தோன்றிய நாகரிகங்களும் பண்பாடுகளும் மொத்தமாகச் சிந்து நாகரிகம் எனப்படும்.

புவியியல் அமைவிடமும் குடியிருப்புகளும் :


  • ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படும் சிந்து நாகரிகமும் அதன் சமகாலப் பண்பாடுகளும் இந்தியாவிலும் பாகிஸ்தானிலுமாக மொத்தம் 1.5 மில்லியன் சதுரகிலோமீட்டர் (9-ம் வகுப்பு புத்தகத்தில் 1.3 மில்லியன்) பரப்பளவில் அமைந்துள்ளன.
  • மேற்கில் பாகிஸ்தான் ஈரான் எல்லையில் அமைந்துள்ள சட்காஜென் டோர் குடியிருப்புகள், வடக்கில் ஷார்ட்டுகை (ஆப்கானிஸ்தான்), கிழக்கில் ஆலம்கிர்புர் (உத்தரப்பிரதேசம்), தெற்கில் தைமாபாத் (மகாராஷ்டிரம்) எனச் சிந்து நாகரிகப்பகுதியின் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இதன் மையப்பகுதிகள் பாகிஸ்தானிலும் இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் உள்ளன.
  • இந்நாகரிகம் அடையாளம் காணப்பட்ட முதல் இடம் ஹரப்பா என்பதால், இது ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • இப்பகுதியில் புதிய கற்காலக் கிராமங்களின் தொடக்கம் நடைபெற்றது ஏறத்தாழ பொ.ஆ.மு. 7000 (புதிய கற்காலப் பகுதியான மெஹர்காரின் காலத்தைப் போல) எனக் கணிக்கப்படுகிறது.
  • ஹரப்பா நாகரிகம் பல்வேறு கட்டங்களாகப் (படிநிலைகள்) பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது. 
  • தொடக்க கால ஹரப்பா பொ.ஆ.மு. 3000-2600 முதிர்ச்சி அடைந்த ஹரப்பா பொ.ஆ.மு. 2600- 1900
  • பிற்கால ஹரப்பா பொ.ஆ.மு. 1900-1700 ஒரு நகரப் பண்பாட்டிற்கான கூறுகள் முதிர்ச்சி பெற்ற ஹரப்பாவின் காலத்தில் இருந்தது. அதற்குப்பின் அது வீழ்ச்சி அடைந்தது.

மெஹெர்கர் - சிந்து வெளி நாகரிகத்துக்கு முன்னோடி :


  • மெஹெர்கர் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த ஓர் இடம் ஆகும். இது பாகிஸ்தான் நாட்டில் பலுச்சிஸ்தான் மாநிலத்தில் போலன் ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.
  • இது தொடக்க கால மனிதர்கள் வாழ்ந்ததாகக் கண்டறியப்பட்ட இடங்களுள் ஒன்று. மக்கள் வேளாண்மையிலும், கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டதற்கான சான்று இங்கு கிடைத்துள்ளது. 
  • பொ.ஆ.மு. 7000-ஐ ஒட்டிய காலத்திலேயே மெஹெர்கரில் நாகரிகத்துக்கு முந்தைய வாழ்க்கை நிலவியதற்கான தொல்லியல் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தொடக்கம் :


  • சுமேரியாவின் அக்காடிய பேரரசிற்குட்பட்ட அரசன் நாரம் - சின் என்பவர் சிந்து வெளிப் பகுதியிலுள்ள மெலுக்கா என்னும் இடத்தில் இருந்து அணிகலன் வாங்கியதாகக் குறிப்பு எழுதியுள்ளார்.
  • ஹரப்பா பண்பாட்டிற்கு முந்தைய நிலையை கிழக்கு பலுச்சிஸ்தானத்தில் காணலாம். மொகஞ்சாதாரோவிற்கு வடமேற்கில் 150 மைல் தூரத்திலுள்ள மெகர்கார் என்ற இடத்தில் ஹரப்பா பண்பாட்டிற்கு முந்தைய கால மக்கள் வாழ்ந்தமைக்கான சுவடுகள் காணப்படுகின்றன. 
  • இக்காலத்தில், மக்கள் தங்களது நாடோடி வாழ்க்கையைக் கைவிட்டு நிலையான வேளாண் வாழ்வைத் தொடங்கினர்.
  • ஹரப்பா பண்பாட்டின் தொடக்க நிலையில் மக்கள் சமவெளிகளில் பெரும் கிராமங்களை உருவாக்கி அங்கு வாழ்ந்தனர். இக்காலத்தில்தான் சிந்து சமவெளியில் நகரங்கள் தோன்றி வளரத் தொடங்கின. 
  • கிராமப்புற வாழ்க்கையிலிருந்து மக்கள் நகரவாழ்க்கையையும் மேற்கொள்ள ஆரம்பித்தனர். ஆம்ரி, கோட்டிஜி ஆகிய இடங்களை இந்த நிலைக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
  • ஹரப்பா பண்பாட்டின் உச்சகட்டத்தில் பெரிய நகரங்கள் எழுச்சிபெற்றன. காலிபங்கன் அகழ்வாய்வுகள் அங்கிருந்த நகர அமைப்புகளையும், நகர்ப்புறக் கூறுகளையும் நன்கு வெளிப்படுத்துகின்றன.
  • ஹரப்பா பண்பாட்டின் இறுதிநிலையில், அதன் சிதைவு தொடங்கியது. லோத்தல் அகழ்வாய்வுகள் இந்த நிலைக்கு தக்க எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. லோத்தல் நகரமும் அதன் துறைமுகமும் மிகவும் பிற்காலத்தில்தான் நிறுவப்பட்டன.
  • திராவிடர்கள், மத்தியத் தரைக்கடல் இனத்தினர், முந்தைய ஆஸ்ட்ரோலாய்டுகள், ஆல்பைன்கள் மற்றும் மங்கோலியர்கள் போன்றோர் சிந்துவெளிப்பகுதியில் வாழ்ந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • ஆனாலும், இந்நாகரிகத்தை தோற்றுவித்த பெருமக்கள் யார் என்பது இன்னும் திட்டவட்டமாக அறியமுடியவில்லை.
  • இவர்கள் திராவிடர்களாகத் தான் இருக்க வேண்டும் என்பது சர் ஜான் மார்ஷல், ஆர். டி. பானர்ஜீ, ஹீராசு பாதிரியார் போன்றோர்களின் கருத்தாகும்.
  • மேலும், சிந்துவெளியில் பேசப்பட்டு வந்த மொழி, பண்டைய தமிழ்மொழியே என்பதும் அவர்களது கருத்தாகும்.
  • சிந்துவெளியில் ஹரப்பாவிலும், மொகஞ்சதாரோவிலும் ஊருக்குப் புறத்தே கோட்டைக் கொத்தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
  • அவற்றின் உள்ளே மன்னரின் மாளிகைகளும், பெரிய நீராடும் குளங்களும், நெற்களஞ்சியங்களும் மேடான சாலைகளும் இருந்தன.
  • மேற்குத் திசையில் மேடான நிலத்தில் கோட்டையும், கிழக்கே குடியிருப்புப் பகுதியும் அமைந்திருந்தன.
  • ஹரப்பா நாகரிகத்தின் தொடக்க நிலையில் அப்பகுதி முழுவதும் கிராமங்களும் ஊர்களும் வளர்ச்சி பெற்றன.
  • முதிர்ந்த ஹரப்பா பண்பாட்டுக் கட்டத்தில் நகர மையங்கள் தோன்றின.

ஹரப்பா நகரம்- புதையுண்ட நகரம் :


  • சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகள் பழைமையான இந்நகர நாகரிகம், முதன்முதலில் 1921 இல் கண்டறியப்பட்டது.
  • பழைய பஞ்சாபின் மாண்ட்கொமரி மாவட்டத்தில் (பாகிஸ்தான்) இரவி-சட்லெஜ் ஆறுகளுக்கு இடையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட (1920) தொல்பொருள் சின்னம் 'ஹரப்பா 'எனப்படுவதாகும், ஹரப்பாவுக்கு முதன்முதலில் 1826இல் வருகை தந்தவர் சார்லஸ் மேசன் எனும் இங்கிலாந்து நாட்டவர்.
  • 1831இல் அம்ரி என்னும் ஹரப்பா பண்பாட்டோடு தொடர்புடைய இடத்திற்கு அலெக்ஸாண்டர் பர்ன்ஸ் வருகை தந்தார்.
  • லாகூரிலிருந்து முல்தானுக்கு ரயில் பாதை அமைப்பதற்காக ஹரப்பா அழிக்கப்பட்டது.
  • இப்பகுதியிலிருந்து ஒரு முத்திரை இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் முதல் அளவையரான அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாமுக்குக் கிடைத்தது.
  • 1853இலும் 1856இலும் 1875இலும் அவர் ஹரப்பாவைப் பார்வையிட்டார்.
  • அவர் கிழக்கிந்திய கம்பெனியில் பணிபுரிந்த படைவீரரும், ஆராய்ச்சியாளரும் ஆவார்.
  • அவர் தற்போது பாகிஸ்தானில் உள்ள இந்தியாவின் வடமேற்கு பகுதியில் ஜான் மார்ஷல் பார்வையிட்டபோது சில செங்கல் திட்டுகள் இருப்பதைக் கண்டார்.
  • அந்த பாழடைந்த செங்கற்கோட்டை உயரமான சுவர்களுடனும், கோபுரங்களுடனும் ஒரு மலை மீது கட்டப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டார்.
  • இதுதான் ஹரப்பா இருந்ததற்கான முதல் வரலாற்று ஆதாரம்.
  • 1856-ல் பொறியாளர்கள் லாகூரில் இருந்து கராச்சிக்கு இரயில் பாதை அமைக்கும் பொருட்டு நிலத்தைத் தோண்டிய பொழுது அதிகமான சுட்ட செங்கற்கள் கண்டறியப்பட்டன.
  • அவர்கள் அவற்றின் முக்கியத்துவத்தை உணராமல் அவற்றை இரயில் பாதைக்கு இடையில் போடப்படும் கற்களுக்குப் பதிலாக பயன்படுத்தினர்.
  • ஆனால் ஹரப்பாவின் முக்கியத்துவத்தையும் அதன் நாகரிகத்தையும் உணர்ந்து, அங்கு ஆய்வு நடத்தக் காரணமாக இருந்தவர் சர் ஜான் மார்ஷல் ஆவார்.
  • இவர் இந்தியத் தொல்லியல் துறையின் இயக்குனராகப் பொறுப்பேற்ற நிகழ்வு, இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனை எனலாம்.
  • இவரது முயற்சிகள் மூலம் ஹரப்பாவில் ஆய்வுகள் தொடங்கப்பட்டன.
  • இவரின் கூற்றுப்படி, இந்த நாகரிகம் வேதகாலத்திற்கு முற்பட்டதாக உள்ளது எனவும், இதன் காலம் கி.மு. 3250 முதல் கி.மு. 2750 வரை எனவும் குறிப்பிட்டுள்ளார்·
  • பிற்காலத்தில் 1940களில் ஆர்.இ.எம். வீலர் ஹரப்பாவில் அகழாய்வுகள் நடத்தி அது நகர நாகரிகம் என்பதை உறுதி செய்தார்.
  • இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, ஹரப்பா நாகரிகப் பகுதியில் பெரும்பாலான இடங்கள் பாகிஸ்தானுக்கு உரியதாகிவிட்டன.
  • எனவே ஆய்வாளர்கள் இந்தியாவில் உள்ள ஹரப்பா நாகரிகப்பகுதிகளைக் கண்டறிய ஆவல் கொண்டனர்.
  • ஹரப்பா நாகரிகத்துடன் தொடர்புடைய காலிபங்கன், லோத்தல், ராக்கிகார்ஹி, டோலாவீரா ஆகியவை இத்தகைய முயற்சிகளால் அகழாய்வுக்கு உட்பட்டன.
  • 1950களுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப்பயணங்களும் அகழாய்வுகளும் ஹரப்பா நாகரிகத்தையும் அதன் இயல்பையும் புரிந்துகொள்ள உதவின.
  • அரண்களால் பாதுகாக்கப்படும் தன்மை, நன்கு திட்டமிடப்பட்ட தெருக்கள், சந்துகள், கழிவுநீர் வசதி ஆகியவை ஹரப்பா நகரங்களின் குறிப்பிடத்தக்க கூறுகள்.
  • தகுந்த குடிமை அதிகாரிகளின் கீழ் இத்தகைய திட்டமிடல் நிகழ்ந்திருக்கக்கூடும்.
  • ஹரப்பா மக்கள் கட்டுமானத்துக்குச் சுட்ட, சுடாத செங்கற்களையும் கற்களையும் பயன்படுத்தினர். 
  • நகரங்கள் சட்டக வடிமைப்பைக் கொண்டிருந்தன.
  • கழிவுநீர் வடிகால்கள் திட்டவட்டமான ஒழுங்குடன் கட்டப்பட்டன.
  • வீடுகள் சேற்று மண்ணாலான செங்கற்களாலும் கழிவுநீர் வடிகால்கள் சுட்ட செங்கற்களாலும் கட்டப்பட்டன. வீடுகள் ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களைக் கொண்டிருந்தன.
  • தெருக்கள் நேராக அமைக்கப்பட்டிருந்தன.அவை வடக்கு தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் சென்றன.
  • ஒன்றை ஒன்று செங்கோணத்தில் வெட்டிக் கொள்ளும் படியும் இருந்தன பெரிய தெருக்கள் 33 அடி அகலமும், சிறிய தெருக்கள் 9 அடிமுதல் 12 அடிவரை அகலம் கொண்டதாகவும் இருந்தன.
  • ஒவ்வொரு வீடும் பல அடுக்கு மாடிகளைக் கொண்டதாக இருந்தது. பெரும்பாலான வீடுகள் பல அறைகளையும் ஒரு முற்றத்தையும், ஒரு கிணற்றையும் கொண்டிருந்தன.
  • ஒவ்வொரு வீட்டிலும் கழிவறையும், குளியலறையும் இருந்திருக்கின்றன
  • கிணற்றுச்சுவர், சாக்கடைச்சுவர் போன்ற வளைந்த சுவர்களைக் கட்டுதற்கு ஆப்பு வடிவச் செங்கற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
  • ஒவ்வொரு வீட்டிலும் திடக் கழிவுகளைத் தேக்குவதற்கான குழிகள் இருந்தன. அவை திடக்கழிவுகளைத் தேக்கி, கழிவு நீரை மட்டும் வெளியேற்றின.
  • உள்ளாட்சி உள்ளாட்சி அமைப்பு ஒன்று நகரங்களின் திட்டமிடலை கட்டுப்படுத்தியிருக்கக் கூடும். சில வீடுகளில் மாடிகள் இருந்தன.
  • ஹரப்பர்களின் அரசு அமைப்பு பற்றி நமக்கு விபரங்கள் தெரியவில்லை. ஆனால், பண்டைய அரசு போன்ற ஒரு அரசியலைமைப்பு ஒன்று இருந்திருக்க வேண்டும்.
  • ஹரப்பாவிலும், மொஹஞ்சதாரோவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மட்பாண்டங்களுக்கிடையே சிறிய அளவு வேறுபாடு இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். எனவே, ஹரப்பா நாகரிகம் மொஹஞ்சதாரோவை விட பழமையானது என முடிவுக்கு வருகின்றனர்.

ஹரப்பாவை பற்றி கூடுதல் தகவல்கள் :


  • சிகப்பு பாறாங்கல்லினால் ஆன தலையும், கால்களும் இல்லாமல், உடைகளற்ற நிலையில் ஒரு ஆணின் உருவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஜைன மதம் இருந்ததற்கான பண்டகச்சாலைக்கும் கோட்டைக்கும் இடையில் வரிசையாக அமைந்துள்ள வட்ட வடிவிலான மேடைகள் கண்டறியப்பட்டுள்ளன.
  • இவை தானியங்களை இடிப்பதற்காக கட்டப்பட்டவையாக இருக்கலாம்.
  • பண்டகச்சாலைக்கு கீழே, மேடைகளிலும், கோட்டையிலும் ஒரு அறைகொண்ட பல வசிப்பிடங்கள் உள்ளன. இவை அடிமைகளின் இருப்பிடங்களாக இருக்கலாம்.

தானியக்களஞ்சியம் :


  • சிந்துவெளி மக்களின் முக்கியத்தொழிலாக வேளாண்மை இருந்தது. இவர்கள் எதிர்காலத் தேவையை முன்னிட்டு உணவுப் பொருள்களைச் சேமித்து வைத்திருந்தனர்.
  • இதற்கு ஹரப்பாவில் இருக்கும் தானியக்களஞ்சியமே சான்றாகும், இது 168 அடி நீளமும், 135 அடி அகலமும் உடையது, இதன் சுவர்கள் 52 அடி உயரமும், 9 அடி கனமும் உடையவை, இவை இரண்டு வரிசைகளாகக் கட்டப்பட்டு இருந்தன.
  • இவ்விரண்டு வரிசைகளுக்கிடையே உள்ள தூரம் 23 அடியாகும். இவ்விருநெடுஞ்சுவர்களுள் ஒவ்வொருவரிசையிலும் ஆறு மண்டபங்கள் இருந்தன.
  • ஒவ்வொரு மண்டபத்திலும் மூன்று பெருஞ்சுவர்கள் எழுப்பப்பட்டன. அதில் நான்கு அறைகள் இருந்தன, இம்மண்டபத்தின் தரைப்பகுதி மரப்பலகையால் ஆனது.
  • பல அறைகள் கொண்ட இத்தானியக்களஞ்சியத்தில் உணவு தானியங்கள் மட்டுமே சேமிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மொகஞ்சதாரோ :


  • 1922 ஆம் ஆண்டு, சிந்து மாகாணத்தில் (பாகிஸ்தான்) லர்க்கானா மாவட்டத்தில் எழுபது அடி உயரமுள்ள மண்மேடு அகழ்ந்தெடுக்கப்பட்டது.
  • இச்சின்னத்தை "மொகஞ்சதாரோ" என்பர்.
  • மொகஞ்சதாரோ ஓர் உயர்ந்த மேடை மீது நன்கு திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரம்.
  • அது கோட்டைப்பகுதியாகவும் தாழ்வான நகரமாகவும் இரு வேறுபட்ட பகுதிகளைக் கொண்டிருந்தது.
  • சிந்துவெளி நகரங்களிலேயே மிகப் பெரியது மொகஞ்சாதாரோ.
  • இது சுமார் இருநூறு ஹெக்டேர் பரப்பைக் கொண்டது என மதிப்பிடப்படுகிறது.
  • வீடுகளில் சுட்ட செங்கற்களால் தளம் அமைக்கப்பட்ட குளியலறையும் சரியான கழிவுநீர் வடிகாலும் இருந்தன. மேல்தளம் இருந்ததை உணர்த்தும்வகையில் சில வீடுகள் படிக்கட்டுகளைக் கொண்டுள்ளன. வீடுகளில் பல அறைகள் இருந்தன.
  • பல வீடுகளில் சுற்றிலும் அறைகளுடன் கூடிய முற்றம் அமைந்திருந்தது. நகரத்தின் கோட்டைப்பகுதி முக்கியத்துவம் வாய்ந்த இருப்பிடத்துக்கான அமைப்புகளுடன் காணப்படுகிறது.
  • இதைப் பொதுமக்களோ, மக்களில் குறிப்பிட்ட சிலரோ பயன்படுத்தியிருக்கலாம். 
  • மொகஞ்சதாரோவில் உள்ள ஒரு கட்டிடம் சேமிப்புக்கிடங்காக அடையாளம் காணப்படுகிறது. ·
  • பெரும் குளம் (The Great Bath) என்பது முற்றத்துடன் கூடிய ஒரு பெரிய குளமாகும். குளத்தின் நான்கு பக்கங்களிலும் உள்ள நடைபாதை வடக்குப்பக்கத்திலும் தெற்குப்பக்கத்திலும் படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளது.
  • நடைபாதையின் அருகே பல அறைகளும் உண்டு.
  • பொதுக்குளியல் குளம் தான் இதன் முக்கிய பொது இடமாகும். இது 39 அடி நீளமும் 23 அடி அகலமும், 8அடி ஆழமும் கொண்டதாகும்.
  • இது கோட்டைக்கு நடுவே அமைந்திருந்தது. இதன் அழகு மிகுந்த செங்கல் வேலைப்பாடு குறிப்பிடத்தக்கதாகும்.
  • இது ஒரு புனித நீராடும் இடமாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அதன் சுவர்கள் ஜிப்சம் செறிந்த சுண்ணச்சாந்தால் ("நீலக்கீல் (Bitumen) ) பூசப்பட்டு, நீர் புகாதபடி இருக்கின்றன.
  • அக்கட்டுமானத்தில் கழிவுநீர்வடிகால் வசதி இருந்தது.
  • நீச்சல் குளத்தின் தென்மேற்கு மூலையில் நீராவிப் பயன்பாட்டிற்கு வசதி செய்யப்பட்டிருந்தது. சில கட்டுமான அமைப்புகள் தானியக்கிடங்குகளாக அடையாளம் காணப்படுகின்றன.
  • செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்ட தானியக் களஞ்சியம் ஒன்று ஹரியானா மாநிலத்தில் உள்ள ராகிகர்கியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இது முதிர்ச்சியடைந்த ஹரப்பா காலத்தைச் சார்ந்தது.
  • அது சடங்குகளுடன் தொடர்புடைய நீராடல் நிகழ்வுகளுக்குத் தேவைப்பட்டிருக்கலாம்.
  • பெரும் குளம் தானியக்கிடங்காகவும் பெருங்குளமாகவும் கட்டுமானங்களை அடையாளப்படுத்துவது தொல்லியலாளர்களின் பார்வையாகக் கருதப்பட வேண்டும்.
  • மொஹஞ்சதாரோவிலிருந்து கிடைத்துள்ள ஒரு சிலை "பூசாரி அரசன்" என்று அடையாளம் காட்டப்படுகிறது. ஆனால் அது சரியானதா என்று உறுதிப்படுத்த முடியவில்லை.

மொகஞ்சதாரோவை பற்றி கூடுதல் தகவல்கள் :


  • சிந்தி மொழியில் மொகஞ்சதாரோ என்பதற்கு இடுகாட்டு மேடை என்று பொருள் சிந்து நகரங்களிலேயே இது தான் மிகப்பெரியதாகும்.
  • நீள் சதுர வடிவிலான ஒரு பெரிய சபை அரங்கு மற்றும் செவ்வக வடிவிலான ஒரு பெரிய கட்டிடம் ஆகியவற்றின் இடிபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
  • இவை நிர்வாகக் காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன. 
  • மொகஞ்சாதாரோவின் மிகப்பெரிய கட்டிடம் அதன் தானியக் களஞ்சியமாகும்.
  • இது 150 அடி நீளமும் 50 அடி அகலமும் கொண்டது. ஹரப்பா நகரின் கோட்டையில் ஆறு தானியக் களஞ்சியங்களைக் காணமுடிகிறது.
  • மொகஞ்சதாரோவின் பெரும்பாலான வீடுகள் சூளையில் இட்டு சுடப்பட்ட செங்கற்களால் கட்டப்பட்டவையாகும்.
  • இதன் முக்கிய தெருக்கள் 33 அடி அகலம் கொண்டவையாக இருந்தன. இவை தெற்கு வடக்காகவும், கிழக்கு மேற்காகவும் அமைந்திருந்தன.
  • அவை ஒன்றையொன்று செங்கோணத்தில் சந்தித்தன.
  • இந்தியக் கப்பல்களின் ஆதாரமும் (முத்திரையில் பொறிக்கப்பட்டுள்ளது) நெய்யப்பட்ட துணியின் ஒரு சிறிய துண்டும் இங்கிருந்து எடுக்கப்பட்டுள்ளன.
  • இணையான வரிசைகளில் அமைந்த இரு அறைகளை கொண்ட விடுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.
  • சமுதாயத்தின் ஏழை வகுப்புகளை சார்ந்தவர்களும், தொழிலாளர்களும் இதனை பயன்படுத்தி இருக்கலாம்.
  • வெண்கலத்தால் செய்யப்பட்ட நடனமாடும் ஒரு பெண்ணின் உருவமும், சவர்கார கல்லினால் செய்யப்பட்ட மதகுருமாரின் சிலையும், பசுபதி உருவம் பொறிக்கப்பட்ட முத்திரையும் இங்கு கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
  • மொகஞ்சதாரோவில் ஒன்பது நிலைகளைக் கொண்ட 300 அடிக்கும் மேலான உயரம் கொண்ட கோபுரம் ஒன்றும் இருந்தது. இந்நகரமானது ஏழு தடவைகளுக்கும் மேல் வெள்ளத்தினை சந்தித்துள்ளது. என்பதை ஆராய்ச்சிகள் எடுத்துரைக்கின்றன.

திட்டமிடப்பட்ட நகரங்கள் :


  • இந்நாகரிகம், பரவியுள்ள முக்கிய பகுதிகள் ஹரப்பா (பஞ்சாப், பாகிஸ்தான்), மொஹஞ்சதாரோ (சிந்து, பாகிஸ்தான்), தோலாவிரா (குஜராத், இந்தியா), காலிபங்கன் (ராஜஸ்தான், இந்தியா), லோத்தல் (குஜராத், இந்தியா), பன்வாலி (ராஜஸ்தான், இந்தியா) ராக்கிகார்க்கி (ஹரியானா, இந்தியா) சுர்கொடா (குஜராத், இந்தியா) ஆகியவை சிந்துவெளி சான்குதாரோ. இது தான் கோட்டை இல்லாத ஒரே சிந்து நகரமாகும்.
  • இரு ஹரப்பாவிற்கு முந்தைய மற்றும் ஹரப்பா நாகரிகத்தின் நிலைகளை கொண்டது.
  • இங்கு ஒரு சிறிய பாண்டம் கண்டறியப்பட்டுள்ளது. அது அநேகமாக மைபுட்டியாக இருக்கலாம்.
  • ஆராய்ச்சிகள் சான்குதாரோவின் மக்கள் சிறந்த கைவினை நிபுணர்களாக இருந்ததாக கூறுகின்றன.
  • இங்கு உலோகத்தொழிலாளர்கள் அணிகலன் செய்பவர்கள் மற்றும் மணிக செய்பவர்களின் கடைகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்நகரமானது இருமுறை வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டது.
  • இங்கு காட்டுமிராண்டித்தனமாக வாழ்க்கை முறை இருந்து வந்ததற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன.

காலிபங்கன் :


  • இது ஹரப்பாவிற்கு முந்தைய மற்றும் ஹரப்பா நாகரிகத்தின் நிலைகளை கொண்டது.
  • இது மொகஞ்சதாரோவுடன் ஒப்பிடப்படும்போது குறைவான வளர்ச்சி அடைந்ததாகும்.
  • இங்கு சுடப்படாத செங்கற்களால் அரண் அமைக்கப்பட்டதற்கான ஆதாரம் உள்ளது.
  • ஹரப்பாவிற்கு முந்தைய நிலையானது ஹரப்பா காலத்தினை போல் அல்லாமல் நிலங்கள் உழப்பட்டிருப்பதை காட்டுகின்றது.
  • தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அக்னி குண்டங்களுடன் கூடிய மேடைகளை (கோட்டைக்குள்) கண்டறிந்துள்ளனர்.
  • இது அக்னியை வழிபடும் பழக்கத்தை காட்டுகின்றது. சக்கர போக்குவரத்து இருந்தது.
  • ஒரே மையம் கொண்ட வண்டிச் சக்கரத்தினால் நிருபிக்கப்பட்டுள்ளது.

பன்வாலி :


  • காலிபங்கன், அம்ரி, கோட்டிஜி, மற்றும் ஹரப்பாவை போல பன்வாலியும் ஹரப்பாவிற்கு முந்தைய மற்றும் ஹரப்பா என்னும் இரு நாகரிக நிலைகளை கொண்டது.
  • இங்கு மனித மற்றும் விலங்கு உருவங்கள் களிமண் வளையல்கள் மற்றும் ஒரு பெண் தெய்வத்தின் சிலை ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.
  • இங்கு பார்லி, எள்ளு மற்றும் கடுகு ஆகியவற்றை பெருமளவில் காணலாம்.

சுர்கோட்டா :


  • ஆராய்ச்சியின் போது ஒரு கோட்டையும்.கீழ் இருக்கும் ஒரு நகரமும் கண்டறியப்பட்ட இரண்டுமே அரண் அமைத்து பாதுகாக்கப்பட்டு இருந்தன.
  • ஒரு குதிரையின் சடலம் உண்மையில் கண்டறியப்பட்ட ஒரே சிந்து நகரம் இதுவேயாகும்.

கோட்டிஜி :


  • ஹரப்பாவிற்கு முந்தைய மற்றும் ஹரப்பா நிலைகள் கண்டறியப்பட்டு உள்ளன.
  • ஆய்வுகளின் படி இந்நகரம் நெருப்பினால் அழிக்கப்பட்டிருக்கலாம்.
  • சக்கரத்தால் செய்யப்பட்ட வர்ணம் பூசப்பட்ட மட்பாண்டங்கள் தற்காப்பு மதில் மற்றும் நன்கு வரிசையாக அமைக்கப்பட்ட தெருக்களின் சுவடுகள் உலோகக்கலை அறிவு மற்றும் கலைநயம்மிக்க பொம்மைகள் போன்றவை கண்டறியப்பட்டுள்ளன.
  • பெண் தெய்வத்தின் ஐந்து உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ரூபார் :


  • மனிதனை புதைப்பதற்கு கீழே ஒரு நாயினை புதைக்கும் ஆதாரம் மிகவும் சுவாரஸ்யமானதாகும்.
  • செவ்வக வடிவில் சுடப்படாத செங்கற்களால் கட்டப்பட்ட கூடம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

தோலவிரா :


  • இது இந்தியாவில் உள்ள இரண்டு பெரிய ஹரப்பாக் குடியேற்றங்களில் ஒன்றாகும்.
  • மற்றொன்று அரியானாவில் உள்ள ரக்கிகார்க்கி ஆகும். இது சமீபத்திய கண்டுபிடிப்பாகும்.
  • மற்ற ஹரப்பா நகரங்கள் அனைத்தும் கோட்டை மற்றும் கீழ் நகரம் என்னும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
  • ஆனால் தோலாவிரா மூன்று முக்கிய பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் இரண்டு செவ்வக வடிவிலான அரண்களால் பாதுகாக்கப்பட்டுள்ளன.
  • மேலும் அங்கு இரண்டு உள் தடுப்புகள் உள்ளன.
  • அவற்றுள் ஒன்று கோட்டையில் (மிக உயர்ந்த அதிகாரத்தில் இருப்பவர் இருக்குமிடம்) இருக்கும்.
  • மற்றொன்று மத்திய நகரத்தினை (ஆட்சியாளர்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் பிற அதிகாரிகளுக்கானது)பாதுகாக்கும்.
  • கீழ் நகரம் மட்டுமின்றி மத்திய நகரமும் இருப்பது இதன் முக்கிய அம்சமாகும்.

லோத்தல் :


  • லோத்தல் என்னும் இடம் குஜராத்தில் சபர்மதி ஆற்றின் ஒரு துணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது செங்கலால் கட்டப்பட்ட செயற்கையான துறைமுகம் கொண்ட ஒரே சிந்து நகரம் இதுவேயாகும்.
  • இதுவே சிந்து மக்களின் முக்கிய கடல்துறைமுகமாக பயன்பட்டிருக்கும்.
  • இது செங்கல்லால் கட்டப்பட்ட பெரிய மதில் சுவரால் சூழப்பட்டுள்ளது.
  • இது வெள்ளத்திலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக கட்டப்பட்டிருக்கலாம்.
  • அக்காலத்திலேயே (கி.மு.1800) அரிசி விளைவிக்கப்பட்டதற்கான ஆதாரம் லோத்தாலில் உள்ளது.
  • அகமதாபாத்திற்கு அருகில் உள்ள ரங்பூர் என்னுமிடமே அரிசி, உமி கண்டறியப்பட்ட மற்றொரு சிந்து நகரம் ஆகும்.
  • அக்னி வழிபாடு இருந்ததை குறிக்கும் வகையில் அக்னி குண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • பாய்மரங்களுடன் கூடிய அக்காலத்தினை சேர்ந்த கப்பல்களும் படகுகளும் இருந்தன.

வாழ்வாதாரமும் பொருளாதார உற்பத்தியும் :


வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் :


  • ஹரப்பா மக்கள் நிலையாக வாழ்வதற்கு வேளாண்மை முக்கிய ஆதாரமாக விளங்கியது.
  • கோதுமை, பார்லி, அவரை வகைகள், கொண்டைக்கடலை, எள், வெவ்வேறு தினை வகைகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களைப் பயிரிட்டார்கள்.
  • வேளாண்மையில் கிடைத்த உபரி வருவாய் முக்கியமான பல செயல்பாடுகளுக்கு ஆதாரமாக விளங்கியது.
  • ஹரப்பா மக்கள் இரட்டைப்பயிரிடல் முறையைப் பின்பற்றினார்கள்.
  • ஹரப்பா மக்கள் உழவுக்குக் கலப்பையைப் பயன்படுத்தினார்கள்.
  • நிலத்தை உழுது, விதைக்கும் வழக்கத்தை அவர்கள் கொண்டிருந்திருக்கலாம்.உழுத நிலங்களைக் காலிபங்கனில் காண முடிகிறது. அவர்கள் பாசனத்துக்குக் கால்வாய்களையும் கிணறுகளையும் பயன்படுத்தினார்கள்.
  • ஆடு மாடு வளர்த்தலும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. மாடுகள், செம்மறியாடுகள், வெள்ளாடுகளையும் அவர்கள் வளர்த்தார்கள்.
  • யானை உள்ளிட்ட பல விலங்குகள் பற்றி அறிந்திருந்தார்கள். எருமை, பன்றி, யானை போன்ற விலங்குகள் குறித்த அறிவும் அவர்களுக்கு இருந்தது.
  • ஆனால் ஹரப்பா பண்பாட்டில் குதிரை இல்லை. ஹரப்பாவின் மாடுகள் ஜெபு என்றழைக்கப்படும்.
    இது ஒரு பெரிய வகை மாட்டின் இனம்.
  • சிந்துவெளி முத்திரைகளில் இவ்வகையான பெரிய காளை உருவம் பரவலாகக் காணப்படுகிறது.
    விலங்குகளைப் பழக்கப்படுத்துதல் ஹரப்பாவில் மேய்ச்சலும் ஒரு முக்கியமான தொழிலாக இருந்தது.
  • செம்மறியாடு, வெள்ளாடு, கோழி உள்ளிட்ட பறவைகளை வளர்த்தார்கள்.
    மக்களின் உணவில் மீன், பறவை இறைச்சி ஆகியவையும் இருந்தன. காட்டுப் பன்றி, மான், முதலை ஆகியவற்றுக்கான சான்றுகளும் ஹரப்பா நாகரிகப் பகுதிகளில் கிடைத்துள்ளன.

கைவினைத் தயாரிப்பு :


  • ஹரப்பா பொருளாதாரத்தில் கைவினைத் தயாரிப்பு ஒரு முக்கியமான பகுதியாகும்.
  • மணிகள் மற்றும் அணிகலன் செய்தல், சங்கு வளையல் செய்தல், உலோக வேலைகள் ஆகியவை கைவினைச் செயல்பாடுகளாக இருந்தன.
  • கார்னிலியன் (மணி), ஜாஸ்பர், கிரிஸ்டல் (படிகக்கல்), ஸ்டீட்டைட் (நுரைக்கல்) ஆகியவற்றிலும் செம்பு, வெண்கலம், தங்கம் ஆகிய உலோகங்களிலும் சங்கு, பீங்கான், சுடுமண் ஆகியவற்றிலும் அணிகலன்களைச் செய்தார்கள்.
  • இந்த அணிகலன்கள் எண்ணற்ற வடிவமைப்பிலும் வேலைப்பாடுகளுடனும் செய்யப்பட்டன.
  • இவை மெசபடோமியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
  • இங்கிருந்துகலைப்பொருள்கள் ஏற்றுமதி ஆன செய்தி மெசபடோமியாவில் நடத்தப்பட்ட அகழாய்வு மூலம் தெரிகிறது.
  • ஹரப்பா நாகரிகப் பகுதிகள் சில குறிப்பிட்ட கைவினைப்பொருள் தயாரிப்பில் தேர்ச்சி பெற்றதாக உள்ளன. அத்தகைய பொருள்களும் அவற்றின் உற்பத்தி மையங்களும் கீழேயுள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பொருள் & நகரம் :


  • சங்கு - நாகேஷ்வர்,பாலகோட். வைடூரியம் - ஷார்டுகை. கார்னிலியன் (மணி) - லோத்தல். ஸ்டீட்டைட் (நுரைக்கல்) - தெற்கு ராஜஸ்தான். செம்பு - ராஜஸ்தான், ஓமன்.

மட்பாண்டக் கலை :


  • ஹரப்பா மக்கள் அன்றாடத் தேவைகளுக்குப் பலவகைப்பட்ட மட்பாண்டங்களைப் பயன்படுத்தினர்.
    அவை நன்கு சுடப்பட்டவை ஹரப்பர்கள் ஓவியங்கள் தீட்டப்பட்ட மட்பாண்டங்களைப் பயன்படுத்தினார்கள்.
  • மட்பாண்டங்கள் ஆழமான சிவப்பு வண்ணம் பூசப்பட்டு கருப்பு நிற ஓவியங்கள் தீட்டப்பட்டவை.
    பீடம் வைத்த தட்டு, தானியம் போன்றவற்றைச் சேமித்து வைப்பதற்கான ஜாடிகள், துளையிடப்பட்ட ஜாடிகள், கோப்பைகள், 's' வடிவ ஜாடிகள், அகன்ற பாத்திரத்தை தாங்க ,நீரைச் சேர்த்துவைக்கும் கலன், துளைகளுடன் கூடிய கலன், கையில் ஏந்துவதற்கு ஏற்ப குறுகிய பிடியுடன் உள்ள கோப்பை, நுனி சிறுத்தும் தாங்கும் பகுதி நன்கு அகன்றும் உள்ள கோப்பைகள், தட்டுகள், கிண்ணங்கள் தட்டுகள், சிறுதட்டுகள், கிண்ணங்கள், பானைகள் என்று பலவிதமான மட்பாண்டங்களைச் செய்தார்கள்.
  • அவர்கள் மட்பாண்டங்களில் சித்திரங்களைத் தீட்டினார்கள்.
  • அரசமர இலை, மீன் செதில், ஒன்றையொன்று வெட்டும் வட்டங்கள்,குறுக்கும் நெடுக்குமான கோடுகள், கிடைக் கோட்டுப் பட்டைகள், கணித வடிவியல் (ஜியோமதி) வடிவங்கள், செடி, கொடிகள் எனப் பல்வேறு ஓவியங்களைக் கருப்பு நிறத்தில் தீட்டினார்கள். மட்பாண்டங்கள் அடர் சிவப்பும் கறுப்பும் கலந்த வண்ணம் பூசப்பட்டிருந்தன.
  • பலவகைகளில் ஹரப்பா நாகரிகத்தைச் சேர்ந்த மட்பாண்டங்கள் நன்கு சுடப்பட்டதாகவும் நுட்பமான வேலைப்பாடு கொண்டதாகவும் இருக்கின்றன.

உலோகங்களும் கருவிகளும் ஆயுதங்களும் :


  • ஹரப்பா நாகரிகம் வெண்கலக் நாகரிகமாகும். அம்மக்கள் செம்பு வெண்கலக் கருவிகள் செய்ய அறிந்தவர்கள்.
  • வெண்கலக் கால கருவிகளைத் தயாரித்தாலும், வேளாண்மைக்கும் கைவினைப்பொருள்கள் உற்பத்திக்கும் பலவகைப்பட்ட கருவிகள் அவர்களுக்குத் தேவைப்பட்டன.
  • ஹரப்பா பண்பாட்டு மக்கள் செர்ட் என்ற சிலிகா கல் வகையில் செய்த ஒருவகைப் படிகக்கலில் செய்யப்பட்ட கத்திகளும் செம்புப்பொருள்களும் எலும்பு மற்றும் தந்தத்தில் ஆன கருவிகளும் பயன்படுத்தப்பட்டன.
  • கூர்முனைக் கருவிகள், உளிகள், ஊசிகள், மீன் பிடிப்பதற்கான தூண்டில், சவரக்கத்திகள், தராசுத்தட்டுகள், கண்ணாடிகள், அஞ்சனக் கோல்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டன.
  • ரோரிசெர்ட் எனப்படும் படிகக்கல்லில் செய்யப்பட்ட கத்திகளை ஹரப்பா மக்கள் பயன்படுத்தினார்கள்.
  • அம்பு, ஈட்டி, கோடரி, மழுங்கல் முனைக் கோடரி ஆகியவை அவர்களின் ஆயுதங்களாக இருந்தன.
    ஹரப்பா மக்கள் இரும்பை அறிந்திருக்கவில்லை.
  • மொஹஞ்சதாரோவில் கிடைத்துள்ள நடனமாடும் பெண்ணின் சிலை, அவர்களுக்கு மெழுகு அச்சில் உலோகத்தை உருக்கி ஊற்றி சிலை வார்க்கும் தொழில் நுட்பம் தெரிந்திருந்தது என்பதைக் காட்டுகிறது.

ஆடை, அணிகலன்கள் :


  • ஆண், பெண் இருபாலரும்மங்கோலியரைப் போல் தலையில் முண்டாசுக் கட்டிக்கொண்டனர்.
  • வட்டுடை அணிந்தவருமுண்டு ஹரப்பா பண்பாட்டு மக்கள் பருத்தி மற்றும் பட்டு பற்றி அறிந்திருந்தார்கள். உலோகத்தாலும் கல்லாலுமான அணிகலன்களைப் பயன்படுத்தினார்கள்.
  • அவர்கள் செம்மணிக்கல் (கார்னிலியன்), செம்பு மற்றும் தங்கத்தாலான அணிகலன்களைச் செய்தார்கள்.
  • கல் அணிகலன்களையும் சங்கு வளையல்களையும் செய்தார்கள்.
  • சிலவற்றில் அணி வேலைப்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
  • இவற்றை அவர்கள் மெசபடோமியாவிற்கு ஏற்றுமதி செய்தார்கள்.
  • ஒரு சுடுமண் பொம்மையில் மதகுரு போல் தோற்றமளிக்கும் உருவம் துணியாலான, பூவேலைப்பாடுகள் கொண்ட மேலாடையை அணிந்துள்ளதைக் காண்கிறோம். மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட 'நடனமாடும் பெண்' சிலையின், முழங்கையின்மேல்பகுதி வரை வளையல்கள் காணப்படுகின்றன.
  • ஒப்பனைப்பாண்டங்கள்,கல்லாலான பாத்திரங்கள், சங்கு வளையல்கள் ஆகியவையும் பயன்பாட்டில் இருந்தன.
  • அவர்கள் உருவாக்கிய அணிகலன்கள் வணிக நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக விற்கவோ, பண்டமாற்றம் செய்யவோ பயன்பட்டன.

வணிகமும் பரிமாற்றமும் :


  • ஹரப்பர்களுக்கு மெசபடோமியர்களுடன் நெருங்கிய வணிகத் தொடர்பு இருந்தது.
  • மேற்காசிய பகுதிகளான சுமேரிய நாகரிகம் நிலவிய ஓமன், பஹ்ரைன், ஈராக், ஈரான் போன்ற பகுதிகளில் ஹரப்பன் முத்திரைகள் கிடைத்துள்ளன.
  • கியூனிபார்ம் ஆவணங்கள் மெசபடோமியாவிற்கும், ஹரப்பர்களுக்கும் இடையே இருந்த வணிகத் தொடர்பை வெளிபடுத்துகின்றன.
  • கியூனிபார்ம் எழுத்துகளில் காணப்படும் மெலுஹா என்ற குறிப்பு சிந்து பகுதியைக் குறிப்பதாகும். ஹரப்பாவில் செய்யப்பட்ட ஜாடி ஓமனில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  • ஹரப்பாவைச் சேர்ந்த முத்திரைகள், எடைக்கற்கள், தாயக்கட்டைகள், மணிகள் மெசபடோமியாவில் கண்டெடுக்கப்பட்டன.
  • கார்னிலியன், வைடூரியம், செம்பு, தங்கம், பலவகைப்பட்ட மரங்கள் ஆகியவையும் ஹரப்பாவிலிருந்து மெசபடோமியாவுக்கு ஏற்றுமதியாயின.
  • ஹரப்பா மக்கள் இந்தியாவின் வேறு பகுதிகளுடனும் தொடர்பு கொண்டு, மூலப்பொருள்களைப் பெற்று, அவற்றை மேலும் சில செய்முறைகளுக்கு உட்படுத்தி, உற்பத்தியில் ஈடுபட்டார்கள். ஹரப்பா நாகரிகப்பகுதிகளில் கிடைக்கும் நிக்கல் பொருள்களும் மெசபடோமியவுடன் இருந்த தொடர்புக்கு ஒரு சான்றாகும்.
  • மெசபடோமியப் புராணத்தில் மெலுகா குறித்து கீழ்க்கண்ட வரிகள் இடம்பெற்றுள்ளன: "உங்களது பறவை ஹஜா பறவை ஆகுக.
  • அதன் ஒலி அரண்மனையில் கேட்கட்டும்".
  • ஹஜா பறவை மயில் என்று சில தொல்லியலாளர்கள் கருதுகிறார்கள்.

எடைக்கற்களும் அளவீடுகளும் :


  • ஹரப்பர்கள் முறையான எடைகளையும் அளவுகளையும் பயன்படுத்தினார்கள்.
  • வணிகப் செப்புத் தராசு, மொஹஞ்சதாரோ பரிமாற்றங்களில் ஈடுபட்ட காரணத்தால் அவர்களுக்கு முறைப்படுத்தப்பட்ட அளவுகள் தேவையாக இருந்தது.
  • ஹரப்பா நாகரிகப் பகுதிகளில் கனசதுரமான செர்ட் எடைகள் கிடைத்துள்ளன. தராசுகளுக்கான செம்புத் தட்டுகள் கிடைத்துள்ளன.
  • ஹரப்பா நாகரிகப்பகுதிகளிலிருந்து படிகக்கல்லாலான, கனசதுர வடிவ எடைக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எடைக்கற்கள் இரும முறையை உணர்த்துகின்றன.
  • எடையின் விகிதம் இரு மடங்காகும்படி பின்பற்றப்பட்டுள்ளது: 1:2:4:8:16:32. இம்முறை அணிகலன்களையும் உலோகங்களையும் எடை போடப் பயன்பட்டிருக்கலாம்.
  • 16 இன்விகிதம்கொண்டசிறிய எடை அளவீடு இன்றைய அளவீட்டில் 13.63 கிராம் கொள்ளத்தக்கதாக உள்ளது.
  • ஹரப்பா மக்கள் இன்றைய அளவீட்டில் ஒரு இஞ்ச் = 1.75செ.மீ ஆகக் கொள்ளும்விதத்தில் அளவுகோலையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
  • எடைக்கற்கள் கனசதுர வடிவத்தில், படிகக்கல்லில் செய்யப்பட்டிருந்தன. குஜராத் மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தந்தத்தினாலான அளவுகோல் 1704 மி.மீ. வரை சிறிய அளவீடுகளைக் கொண்டுள்ளது. (அதன் சமகாலத்திய நாகரிகங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அளவுகோல்களில் இது தான் மிகச் சிறிய பிரிவு ஆகும்)

முத்திரைகளும் எழுத்துமுறையும் :


  • ஸ்டீட்டைட், செம்பு, சுடுமண், தந்தம் போன்றவற்றாலான முத்திரைகள் ஹரப்பா நாகரிகப் பகுதிகளில் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இம்முத்திரைகளை வெட்டி, வெள்ளை ஒளியுடையதாக மெருகேற்றும் கலை ஹரப்பா மக்களின் ஒப்பற்ற கண்டுபிடிப்பாகும்.
  • ஹரப்பா எழுத்துமுறையை இன்றுவரைக்கும் நம்மால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.
  • 5000க்கும் மேற்பட்ட எழுத்துத்தொடர்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
  • ஹரப்பாவில் கிடைத்தவற்றில் மிக நீளமானதாகக் கருதப்படும் எழுத்துத்தொடர் 26 குறியீடுகளைக் கொண்டுள்ளது.
  • எழுத்துகள் இடமிருந்து வலமாக ஒரு வரியும், வலமிருந்து இடமாக மற்றொரு வரியாகவும் எழுதப்பட்டுள்ளன.
  • தமிழகத்தின் கீழ்வாலை, குளிர்கனை, புறக்கல், ஆலம்பாடி, செத்தவாரை, நேகனூர்பட்டி ஆகிய இடங்களில் காணப்படும் எழுத்துகள், சிந்துவெளியிலுள்ள எழுத்துகளோடு தொடர்புடைய தொல்தமிழ் எழுத்துகளாகும்.
  • வடபிராமி எழுத்துகளும், தென்பிராமி எழுத்துகளும் சிந்துவெளி எழுத்துகளிலிருந்து வளர்ச்சி பெற்றவையாகும், பல அறிஞர்கள் அதிதிராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததாகக் கருதுகிறார்கள்.
  • போக்குவரத்துக்கு உட்படும் பொருள்கள் மீது குறியிட்டு அடையாளப்படுத்துவதற்காக முத்திரைகள் பயன்பட்டிருக்கலாம்.
  • பொருள்களின் உரிமையாளரைக் குறிப்பதற்கும் அவை பயன்பட்டிருக்கலாம்.
  • இவற்றுள் ஒற்றைக்கொம்பு விலங்கின் உருவமே அடிக்கடி முத்திரைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கலையும் பொழுதுபோக்கும் :


  • ஹரப்பா நாகரிகப்பகுதிகளிலிருந்து கிடைக்கும் சுடுமண் உருவங்கள், மட்பாண்டங்களில் காணப்படும் ஓவியங்கள், வெண்கல உருவங்கள் ஆகியவை ஹரப்பா மக்களின் கலைத்திறனை உணர்த்துகின்றன.
  • மாக்கல்லில் (ஸ்டீட்டைட்) கல்லில் அமைந்த 'மத குரு', செம்பாலான நடனமாடும் பெண்' (மொகஞ்சதாரோவிலும் இதுபோன்ற சிலை கிடைத்துள்ளது), மொஹஞ்சதாரோ, டோலாவிரா ஆகிய இடங்களில் கிடைத்த கல் சிற்பங்கள் மதகுரு அரசன் ஆகியவை ஹரப்பாவின் கலைப்படைப்புகளாகும்.
  • பொம்மை வண்டிகள், கிலுகிலுப்பைகள், சக்கரங்கள், பம்பரங்கள், சதுரங்க விளையாட்டில் பயன்படுத்தப்படுவதைப் போன்ற காய்கள், கட்டங்கள் வரையப்பட்ட பலகைகள் ஆகியவை ஹரப்பா மக்களின் பொழுதுபோக்கு விளையாட்டுகளுக்குச் சான்றாகும்.
  • ஹரப்பா, மொஹஞ்சதாரோ, தோலாவிராவில் கிடைத்த கற்சிலைகள் ஆகியவை இப்பகுதியின் முக்கியமான கலைப் படைப்புகள்.
  • பொம்மை வண்டிகள், கிலுகிலுப்பைகள், பம்பரங்கள், கோலிக்குண்டுகள், பல்வேறு விளையாட்டிற்கான சுடுமண் சில்லுகள் ஆகியவை ஹரப்பா மக்களின் பொழுதுபோக்கு விடையாட்டுகளைக் காட்டுகின்றன.
  • சிந்துவெளி மக்கள் இசையிலும், நாட்டியத்திலும் அதிக ஆர்வம் உடையவர்களாக இருந்தனர், இவர்கள் காளைச்சண்டை கோழிச்சண்டை, வேட்டையாடுதல், பறவைவளர்ப்பு போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்கள், கோழிச்சண்டை விளையாட்டு.
  • தமிழகப் பண்பாட்டிலிருந்து சிந்துவெளி மக்களின் பண்பாட்டிற்குப் பரவியுள்ளதை காணலாம்,

மருத்துவம் :


  • சிந்துவெளி மக்கள் கண், காது, தொண்டை, தோல் தொடர்பான நோய்களுக்குப் பயன்படுத்தும் மருந்துகளைச் செய்வதற்குக் கட்டில் (cutle) என்ற ஒரு வகையான மீனின் எலும்புகளைப் பயன்படுத்தினர்.
  • மான், காண்டாமிருகத்தின் எலும்புகள், பவளங்கள், வேப்பந்தழைகள் போன்றவை மருந்தாகப் பயன்படுத்தப்பட்டன.

நம்பிக்கைகள் :


  • ஹரப்பா மக்கள் இறந்தோரைப் புதைத்தனர். புதைப்பதற்கான நடைமுறைகள் விரிவாக இருந்தன மொகஞ்சதாரோவில் மூன்று விதமான சவ அடக்க முறைகள் இருந்தன.
    அவை, 1. முழு உடலையும் அப்படியே புதைப்பது, 2. உடலை பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் தின்னக்கொடுத்து எஞ்சிய எலும்புகளை ஒரு ஜாடியில் வைத்துப் புதைப்பது, மற்றும் 3. உடலை எரித்து கிடைக்கு சாம்பலை தாழியில் வைத்துப் புதைப்பது ஆகியவையாகும்.
  • ஆனால் சவத்தின் தலையை வடக்குப்புறமாக வைத்து உடலை மல்லாந்து படுக்க வைத்து புதைப்பதே பொதுவான பழக்கமாக இருந்தது. இறந்த உடலை புதைக்கும்போது, அவர்களுக்குப் பிடித்த உணவுப்பொருள்களை வைத்து புதைப்பதும் வழக்கத்தில் இருந்தது.
  • இப்பழக்கம், தமிழகத்தின் பெரும்பகுதிகளில் வழக்கத்தில் இருந்தது என்பது, ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இதுபோன்ற தாழிகள் அத்திரப்பாக்கம், அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர், திருகாம்புலியூர், தாமிரபரணி ஆற்றங்கரை போன்ற பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தின் வடக்கிலும், தக்காணத்தின் தெற்கிலும் இதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
  • இவை, தமிழ்நாட்டிற்கும் சிந்துவெளி மக்களுக்கும் உள்ள தொடர்பினை உறுதி செய்கின்றன ஹரப்பா புதைகுழிகளில் மட்பாண்டங்கள், அணிகலன்கள், அணிகலன்கள், தாமிரக்கண்ணாடி, தாமிரக்கண்ணாடி, மணிகள் ஆகியவை கிடைத்துள்ளன.
  • இறப்பிற்கு பின்னரான வாழ்க்கை பற்றிய அவர்களின் நம்பிக்கையை இவை குறிக்கலாம்.
  • லோத்தல் நகரில் புதைகுழியைச் சுற்றி செங்கற்கள் அடுக்கப்பட்டுள்ளன.
  • ஹரப்பா நகரில் மரத்தாலான சவப்பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஜோடியாகவும் மட்பாண்டத்திற்குள் வைத்தும் இறந்தோரை புதைத்ததற்கான சான்றுகளும் லோத்தலில் கிடைத்துள்ளன.
  • 'சதி' என்ற உடன்கட்டையேறும் வழக்கம் நிலவியதற்கான தெளிவான சான்றுகள் இல்லை.
  • சிந்துவெளி மக்கள் இயற்கையை வணங்கினார்கள். அரசமரத்தை வழிபட்டார்கள்.
  • சில சுட்ட களிமண் சிலைகள் பெண் தெய்வத்தைக் குறிப்பது போன்று உள்ளன.
  • காலிபங்கனில் நெருப்புக் குண்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இறந்தவர்களைப் புதைப்பது வழக்கத்திலிருந்தது. இறந்தவர்களை எரிக்கும் வழக்கம் இருந்ததற்கான சான்றுகள் அரிதாகக் கிடைத்துள்ளன. அவர்களது முக்கிய பெண் கடவுள் தாய்க் கடவுளாகும்.
  • இதன் சுடுமண் வடிவங்கள் கிடைக்கின்றன. பிற்காலத்தில் லிங்க வழிபாடும் காணப்பட்டது.
    பேய்கள், கெட்ட ஆவிகள் போன்றவற்றின்மீது நம்பிக்கை கொண்டிருந்த அவர்கள், தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தாயத்துக்களையும் அணிந்தனர்.

பசுபதி வழிபாடு :


  • ஹரப்பாவில் கிடைத்த முத்திரைகளில் அமர்ந்த நிலையிலுள்ள மகாயோகியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது, அதில் மூன்று முகங்களை கொண்ட கடவுள், யோக நிலையில் அமர்ந்திருப்பது போலவும், அதனைச்சுற்றி யானை,புலி ஆகியவற்றின் உருவங்கள் வலப்புறமாகவும், காண்டாமிருகம், எருமை ஆகியவற்றின் உருவங்கள் இடப்புறமாகவும் அமைந்துள்ளன.
  • வரலாற்று ஆய்வாளர்கள் கூற்றுப்படி, இது சிவனுக்குரிய "திருமுகம்" (மூன்று முகம்), பசுபதி (விலங்குகளின் கடவுள்), யோகேசுவரன் யோகிகளின் கடவுள்) போன்ற பல்வேறு வடிவங்களை உணர்த்துவதாக இவ்வழிபாடுகள் உள்ளன.

விலங்கு வழிபாடு :


  • சிந்துவெளி மக்கள் விலங்குகளைத் தெய்வமாக வழிபட்டனர், தமிழகப் பண்பாட்டில் பண்டைய காலம் முதல் இன்றுவரை பசு, எருது, புலி, பறவைபோன்ற விலங்குகள் சமயச் சின்னங்களாக இருந்து வருவதைக் காணலாம்.
  • இது சிந்துவெளி நாகரிகத்திற்கும் திராவிடப் பண்பாட்டிற்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்துவதாக உள்ளது.

ஆற்றுவழிபாடு :


  • நீர் வழிபாடு ஹரப்பா, மொகஞ்சதாரோ நகர மக்கள் ஆற்றங்கரையின் அருகிலேயே வசித்ததன் காரணமாக, நீரைக் கடவுளாகக் கருதி வழிபட்டனர்.
  • சிந்துவெளி மக்கள் ஆற்றுவணக்கம் (அ) ஆற்றுவழிபாடு செய்து வந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.
    தமிழகத்தில் வழிபடுவதற்கு முன் நீராடும் வழக்கம் இருப்பதை இன்றும் காணலாம்.
  • மேலும், நீர்நிலைகளைத் தெய்வமாக வணங்குவதும் தமிழர்களிடையே உள்ள பண்பாடாகும், மர வழிபாடு சிந்துவெளி மக்களிடம் மரங்களை வழிபடும் வழக்கமும் இருந்தது என்பதை ஹரப்பா, மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகளின் வாயிலாக அறியலாம், இவற்றில், அரசமரமே முதன்மையாக உள்ளது, மரத்தடியில் மேடை அமைத்தலும் விழாக்கள் நடத்துதலும் வழக்கமாகும், மரங்களை ஆண் கடவுளாகவும், பெண் கடவுளாகவும் கருதி வழிபட்டனர், இன்றும், தமிழகத்தின் வழிபாட்டுத் தலங்களில் வேப்பமரத்தை பெண் கடவுளாகவும், அரசமரத்தை ஆண் கடவுளாகவும் வணங்குவது வழக்கமாகவுள்ளது, அரசியல் முறை மட்பாண்டங்கள், முத்திரைகள், எடைக்கற்கள், செங்கற்கள் ஆகியவற்றில் காணப்படும் சீரான தன்மை அரசியல் முறை செயல்பட்டதை உணர்த்துகிறது.
  • தீவிரமான வணிக நடவடிக்கைகளுக்குத் தொழிலாளர்களைத் திரட்ட வேண்டிய தேவை இருந்திருக்கும்.
  • அதிகாரம் படைத்த ஆட்சியமைப்பால் இத்தேவை நிறைவேற்றப்பட்டிருக்கலாம்.
  • ஹரப்பாவும் மொஹஞ்சதாரோவும் நகர அரசுகளுக்கான ஆட்சியமைப்பின் கீழ் இயங்கியிருக்கலாம்.
  • பண்பாட்டுப் பொருள்களிலும் அளவீடுகளிலும் காணப்படும் சீரான தன்மை ஹரப்பா சமூகம் உறுதியான மைய நிர்வாகத்தின் கீழ் இயங்கியிருக்க வேண்டும் என்ற கருத்தை வலுப்படுத்துகிறது.

சிந்து நாகரிகமும் சமகாலப் பண்பாடுகளும் :


  • மேய்ச்சல் சமூக மக்கள், வேளாண்மை செய்வோர், வேட்டையாடிகள்-உணவு சேகரிப்பாளர்கள், வணிகர்கள் போன்றோரை உள்ளடக்கிய பல குழுக்கள் சிந்து பகுதியில் வசித்தன.
  • இப்பகுதியில் கிராமங்களும் பெரிய நகரங்களும் இருந்தன.
  • இத்தகைய எண்ணற்ற சமூகங்களைச் சேர்ந்தமக்கள் இக்காலகட்டத்தில் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரையும், குஜராத்திலிருந்து அருணாசல பிரதேசம் வரைக்கும் இருந்திருக்கலாம்.
    அவர்களின் வரலாறும் இதே அளவு முக்கியமானது.
  • இச்சமூகங்களின் பண்பாடும் சூழலியல் அறிவும் இந்தியப் பண்பாட்டுக்குப் பங்களிப்பு செய்துள்ளன.
  • இந்தியாவின் வடமேற்குப்பகுதியில் சிந்து நாகரிகம் செழிப்புற்றிருந்தபோது, பிற பகுதிகளில் பல்வேறு பண்பாடுகள் வளர்ந்துகொண்டிருந்தன.
  • இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியிலும் (கேரளா) இலங்கையிலும் வேட்டையாடியும் சேகரித்தும் வாழ்ந்த சமூகங்கள் செயல்பட்டன. படகுப்போக்குவரத்து குறித்த அறிவுடன் இருந்த ஹரப்பா மக்கள் தென்னிந்தியாவுடன் தொடர்பு கொண்டிருந்திருக்கலாம்.
  • ஆனால் அதற்குத் தெளிவான தொல்லியல் சான்றுகள் கிடைக்கவில்லை.
    தென்னிந்தியாவின் வட பகுதி, குறிப்பாகக் கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகியவை புதிய கற்காலப் பண்பாடுகளுடன், மேய்ச்சல் மற்றும் கலப்பை சார்ந்த வேளாண்மையிலும் ஈடுபட்டுவந்தன.
  • புதிய கற்காலப் பண்பாடு காஷ்மீர், கங்கைச் சமவெளி ஆகிய வட இந்தியப் பகுதிகளிலும் மத்திய இந்தியாவிலும் கிழக்கு இந்தியாவிலும் பரவியிருந்தபோது தக்காணத்திலும் மேற்கு இந்தியாவிலும் செம்புக்காலப் பண்பாடு நிலவியது.
  • இவ்வாறு இந்தியா ஹரப்பா நாகரிகக் காலத்தில் பல்வேறு பண்பாடுகளின் கலவை என்று சொல்லத்தகுந்த நிலப்பகுதியாக விளங்கியது.

வீழ்ச்சி :


  • ஹரப்பா பண்பாட்டில் கோட்டைகள் பல அழிக்கப்பட்டது குறித்து ரிக்வேதம் குறிப்பிடுகிறது.
  • ஏறத்தாழ பொ.ஆ.மு. 1900இல் சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சி அடைந்தது.
  • காலநிலை மாற்றம், மெசபடோமியாவுடனான வணிகத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி, தொடர்வறட்சியின் காரணமாக ஆறுகள் மற்றும் நீர் நிலைகளின் மறைவு ஆகியவை வீழ்ச்சிக்கான காரணங்களாக வரலாற்றாசிரியர்களால் கணிக்கப்படுகின்றன.
  • சிந்து நாகரிகத்தின் அழிவுக்குப் படையெடுப்பு, வெள்ளம், ஆறு தன் போக்கை மாற்றிக்கொண்ட நிகழ்வு ஆகிய காரணங்களும் முன்வைக்கப்படுகின்றன. காலப்போக்கில் இம்மக்கள் சிந்து பகுதியிலிருந்து தெற்கு நோக்கியும் கிழக்கு நோக்கியும் இடம்பெயர்ந்தார்கள்.
  • சிந்து நாகரிகமும் தமிழ் நாகரிகமும் இந்திய வரலாற்றில் நிகழ்ந்த முதல் நகரமயமாக்கத்தின் வெளிப்பாடு சிந்து நாகரிகமாகும்.
  • சிந்துவெளி நாகரிகம் முற்றிலுமாக அழிந்துவிடவில்லை. அது கிராமப் பண்பாடாக இந்தியாவில் தொடர்ந்தது.

சிந்துவெளி நாகரிகமும், தமிழர் நாகரிகமும் :


  • தென்னிந்தியாவின் பெருங்கற்கால முதுமக்கள் தாழிகளில் காணப்படும் கோட்டுருவக் குறியீடுகள் சிந்துவெளி எழுத்துகளை ஒத்திருப்பதும், தமிழக ஊர் பெயர்கள் - பாகிஸ்தானின் சிந்து பகுதி ஊர் பெயர்கள் ஒத்துள்ளமையும் சிந்துவெளி நாகரிகத்திற்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் உள்ள உறவை நிறுவ வாதங்களாக முன்வைக்கப்படுகின்றன.
  • அருட்தந்தை ஹென்றி ஹெராஸ், அஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன் போன்ற ஆய்வாளர்களும் சிந்துவெளி எழுத்துக்கும் திராவிட/தமிழ் மொழிக்கும் இடையே ஒற்றுமை நிலவுவதை இனங்கண்டுள்ளார்கள்.
  • தொல்லியல் சான்றுகள் இடைக் கற்காலத்திலிருந்தே தமிழ்நாட்டிலும் தென்னிந்தியாவிலும் பல மக்கள் குழுக்கள் தொடர்ச்சியாக வசித்து வந்ததைக் காட்டுகின்றன. சிந்துவெளியிலிருந்து சில குழுக்கள் தென்னிந்தியாவிற்கு இடம் பெயர்ந்திருக்கக் கூடும்.
  • இரும்புக்காலத்தில் சிந்துவெளியின் சில கருத்துகளும் தொழில்நுட்பங்களும் தென்னிந்தியாவை அடைந்துள்ளன.
  • தமிழ்நாட்டின் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த, அகழ்வாய்வுப் பகுதிகளில கிடைத்துள்ள கார்னீலியன் பாசிமணிகள், சங்கு வளையல்கள், செம்பு முகம்பார்க்கும் கண்ணாடிகள் ஆகியவை முதலில் சிந்துவெளி மக்களால் அறிமுகம் செய்யப்பட்டவை எனக் கருதப்படுகிறது.
  • மக்கள் இடம் பெயராமலேயே கருத்துகளும், அறிவும், பொருட்களும் தொலை தூரங்களுக்குப் பரவமுடியும்.
  • இவ்விவாதத்திற்கு தெளிவான முடிவுகள் பெற மேலதிகமான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.
  • தமிழகத்தின் பண்டைய நகரங்களான கீழடி, அரிக்கமேடு, உறையூர் போன்றவை இந்தியாவின் இரண்டாவது நகரமயக் காலகட்டத்தில் தழைத்தோங்கின.
  • காலகட்டத்தில் தழைத்தோங்கின.
  • இந்த நகரங்கள் சிந்துவெளியின் நகரங்களிலிருந்து பெரிதும் மாறுபட்டுள்ளன. இந்த நகரங்கள் சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சி அடைந்து சுமார் 1200 ஆண்டுகள் கழித்து உருவானவை.
  • சிந்துவெளி நாகரிகமும் தமிழர் நாகரிகமும் தற்போது தென்கோடித் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற இடப்பெயர்கள் சிந்துவெளி நாகரிகம் தோன்றி வளர்ந்த பகுதியிலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளமை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
  • தமிழ்நாட்டின் ஆரணி, கொற்கை, மைலம், மானூர், நாகல், தொண்டி, கண்டிகை போன்ற இடப்பெயர்கள் தற்போதைய பாகிஸ்தானிலும் (பண்டைய சிந்துவெளி பகுதி) வழக்கத்தில் உள்ளன, அதேபோல் தமிழ்நாட்டிலுள்ள ஆலூர், ஆசூர், படூர், இஞ்சூர், குந்தா, நாகல், தானூர், செஞ்சி போன்ற இடப்பெயர்கள் தற்போதைய ஆப்கானிஸ்தானில் உள்ளன.
  • திராவிடர்கள் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் போன்ற பகுதிகளில் வாழ்ந்தனர் என்பதை இதன் மூலம் அறியலாம்.

வருடங்கள் & கண்டுபிடிப்பாளர்கள் :


  • 1921 - ஹரப்பா தயாராம் சகானி.
  • 1922 மொகஞ்சதாரோ - R.D.பானர்ஜி.
  • 1927 - சுட்கஜென்தூர் - R.L.ஸ்டெயினி.
  • 1931 - சாகுன்தாரோ - N.G.மஜும்தார்.
  • 1953 - ரங்பூர் - M.வாட்ஸ்.
  • 1953 - காலிபங்கன் - A.கோஷ்.
  • 1955-56 ரூபார் - Y.D.ஷர்மா.
  • 1955-60 லோத்தல் - S.R.ராவ்.
  • 1972-75 - சுர்கோட்டடா - J.ஜோஷி.
  • 1973-74 - பன்வாலி - R.S.பிஷ்த்.
  • தோலாவிரா - R.S.பிஷ்த்.
  • ரக்கிகார்கி & கான்வெரிவாலா பாகிஸ்தான் - ரஃபீக் மொகல்.

சிந்துவெளி நாகரிகம் பரவியிருந்த இடங்கள் :


  • ஹரப்பா - ராவி நதியோரம்.
  • மேற்கு வங்காளம் (தற்போதைய பாகிஸ்தான்).
  • மொகஞ்சதாரோ - சிந்து நதியோரம் மேற்கு பஞ்சாப் (தற்போதைய பாகிஸ்தான்).
  • ரூபார் - சட்லெஜ் நதியோரம், பஞ்சாப்.
  • லோத்தல் - சட்லெஜ் நதியோரம், குஜராத்.
  • காலிபங்கன் - காகர் நதி தென் கரையோரம், இராஜஸ்தான்.
  • சாகுந்தாரோ - சரஸ்வதி நதியோரம், இராஜஸ்தான்.
  • தோல்வீரா - கபீர் மாவட்டம், குஜராத்.
  • கோட்டிஜி - சிந்து மாகாணம்.
  • பனவாலி - ஹரியானா.
  • சுர்கோட்டா - குஜராத்

தகவல் பேழை :


  • 1924-ல் இந்திய தொல்பொருள் நாகரிகம் என்ற வார்த்தை பண்டைய லத்தீன் மொழி வார்த்தையான 'சிவிஸ்' (CIVIS) என்பதிலிருந்து வந்தது. இதன் பொருள் 'நகரம்' ஆகும்.
  • ஹரப்பாதான் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இடம் என்பதால், சிந்துவெளி நாகரிகம் ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • இந்த நாகரிகம் சிந்து நதிக்கு அப்பாலும் பரவியுள்ளதால் சிந்து சமவெளி நாகரிகம் என்று முன்னர் அழைக்கப்பட்டதற்கு மாறாக சிந்துவெளி நாகரிகம் என்று அழைக்கப்படுகிறது.
  • தொல்தாவரவியலாளர்கள் (Palacobotanists) பழமையான வேளாண்மையையும் மனிதருக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையேயான உறவையும் குறித்து ஆய்வு செய்கிறார்கள்.
    இந்திய தொல்லியல் துறை - ASI (Archaelogical Survey of India).
  • 1861 ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் என்ற நில அளவையாளர் உதவியுடன் நிறுவப்பட்டது இதன் தலைமையகம் (தாரோகர் பவன்) புது தில்லியில் உள்ளது.
    ரோரி செர்ட்: இந்தப் படிகக்கல் பாகிஸ்தானில் உள்ள ரோரி பகுதியில் காணப்படுகிறது. ஹரப்பா மக்கள் கத்திகளும் பிற கருவிகளும் செய்வதற்கு இது பயன்பட்டது.
  • பலுசிஸ்தானில் பிராகுயி என்ற திராவிட மொழி இன்றுவரை பேசப்பட்டு வருகிறது, மனிதர்களால் முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்ட மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட உலோகம் செம்பு.
    மொஹெஞ்ச-தாரோவில் வெண்கலத்தால் ஆன இந்த சிறிய பெண் சிலை கிடைத்தது.
  • நடன மாது என்று குறிப்பிடப்படுகிற இந்தச் சிலையைப் பார்த்த சர் ஜான் மார்ஷல் "முதலில் இந்தச் சிலையை நான் பார்த்த பொழுது இது வரலாற்றிற்கு முந்தையகாலத்தின் உருவாக்க முறையைச் சார்ந்தது என்று நம்புவதற்குக் கடினமாக இருந்தது.
  • ஏனெனில் இதுபோன்று உருவாக்கம் பண்டைய மக்களுக்கு கிரேக்க காலம் வரை தெரியவில்லை.
    இவை ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என நினைத்தேன். இச்சிலைகள் அக்கால கட்டத்துக்கு உரியதாகவே இருந்தன" என்றார்.
  • கே.வி.டி (கொற்கை - வஞ்சி - தொண்டி) வளாகம்: பாகிஸ்தானில் இன்றும் கொற்கை, வஞ்சி, தொண்டி, மத்ரை, உறை, கூடல்கர் என்ற பெயர் கொண்ட இடங்கள் உள்ளன. கொற்கை, பூம்புகார் போன்ற சங்க கால நகரங்கள் மற்றும் துறைமுகங்களின் பெயர்களுடன் உள்ள இடங்கள் ஆப்கானிஸ்தானில் உள்ளன. ஆப்கானிஸ்தானில் உள்ள ஆறுகளான காவ்ரி, பொருண்ஸ் மற்றும் பாகிஸ்தானில் உள்ள ஆறுகளான காவிரி வாலா மற்றும் பொருனை ஆகிய பெயர்கள் தமிழ்ச் சொற்களை முழுமையாகப் பிரதிபலிக்கின்றன. முதல் எழுத்து வடிவம் சுமேரியர்களால் உருவாக்கப்பட்டது.
  • மொஹஞ்சதாரோவில் தொல்பொருள் ஆராய்ச்சி நடைபெறும் இடம் உலகப் பாரம்பரியத் தளமாக யுனெஸ்கோ அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கதிரியக்க கார்பன் வயதுக்கணிப்பு முறை தொல்லியல் ஆய்வாளர்களுக்கான தரப்படுத்தப்பட்ட முறை கார்பனின் கதிரியக்க ஐசோடோப் ஆன கார்பன் 14ஐப் பயன்படுத்தி, ஒரு பொருளின் வயதை அறியும் முறை கதிரியக்க கார்பன் முறை அல்லது கார்பன் முறை என்று அழைக்கப்படுகிறது. உலகம் அந்நாளில் பொ.ஆ.மு 2500 ல் குஃபு மன்னனால் சுண்ணாம்புக் கல்லால் கட்டப்பட்ட கிசே பிரமிடு.(ஒவ்வொன்றும் 15 டன் எடை உடையது) மெசபடோமியா (சுமேரியர் காலம்) ஊர் நம்மு என்ற அரசனால் சின் என்ற சந்திர கடவுளுக்கு கட்டப்பட்ட ஊர் ஜிகரட். அபு சிம்பல் - எகிப்து அரசன் இரண்டாம் ராமெசிஸ் என்பவரால் கட்டப்பட்ட இரட்டைக் கோயில்கள் உள்ள இடம்.
  • கீழடி தொல்லியல் களம் என்பது, இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் அகழாய்வு செய்யப்பட்டு வரும் ஒரு சங்க கால வசிப்பிடம் ஆகும். இந்த அகழாய்வு மையம், தமிழ்நாட்டில் மதுரைக்குத் தென்கிழக்கில் 12கி.மீ. தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் கீழடி என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ளது.
  • ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்துக்கு அடுத்து, இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான அகழாய்வு இதுவேயாகும்.
  • உலக மொழிகள் எவற்றிலும் இல்லாத சிறப்பு தமிழ்மொழிக்கு மட்டுமே உண்டு, எழுத்துகளின் ஒலிப்பு முறையான முன,ள,ற,ண ஆகிய எழுத்துகள் சிந்துவெளி முத்திரைகளில் காணப்படுகின்றன. தொல்லியலாளர்கள் எவ்வாறு புதையுண்ட நகரத்தைக் கண்டு பிடிக்கிறார்கள்?
  • அகழ்வாராய்ச்சியாளர்கள் செங்கற்கள், கற்கள், உடைந்த பானை ஓடுகள் போன்றவற்றை ஆராய்ந்து அவை பயன்படுத்தப்பட்ட காலத்தை அறிந்து கொள்கிறார்கள்.
  • பண்டைய இலக்கிய ஆதாரங்களைப் பயன்படுத்துகின்றனர்.
  • வான் வழி புகைப் படங்கள் மூலம் புதையுண்ட நகரங்கள் மற்றும் இடங்களின் மேற்பரப்பைக் கண்டறிந்து கொள்கிறார்கள்.
  • நிலத்தடியை ஆய்வு செய்ய காந்தப்புல வருடியை (Magnetic scanner) பயன்படுத்துகின்றனர்.
    எஞ்சிய தொல்பொருட்கள் புதையுண்டு இருக்கின்றனவா இல்லையா என்பதை ரேடார் கருவி மூலம் அறிய முடியும் (தொலை நுண்ணுணர்வு முறை).
TNPSC-GENERAL-STUDIES TNPSC-HISTORY-AND-CULTURE-OF-INDIA
கல்விச்சோலை

TNPSC-HISTORY-AND-CULTURE-OF-INDIA

No comments:

Post a Comment

Labels

  • TNPSC APTITUDE AND MENTAL ABILITY
  • TNPSC BOTANY
  • TNPSC CHEMISTRY
  • TNPSC CURRENT AFFAIRS
  • TNPSC CURRENT EVENTS
  • TNPSC DEVELOPMENT ADMINISTRATION IN TAMIL NADU
  • TNPSC GENERAL SCIENCE
  • TNPSC GENERAL STUDIES
  • TNPSC GENERAL TAMIL
  • TNPSC GEOGRAPHY
  • TNPSC HISTORY AND CULTURE OF INDIA
  • TNPSC HISTORY AND CULTURE OF TAMIL NADU
  • TNPSC INDIAN ECONOMY
  • TNPSC INDIAN NATIONAL MOVEMENT
  • TNPSC INDIAN POLITY
  • TNPSC SYLLABUS
  • TNPSC ZOOLOGY
  • TNPSC இந்திய ஆட்சியியல்
  • TNPSC இந்திய தேசிய இயக்கம்
  • TNPSC இந்தியப் பொருளாதாரம்
  • TNPSC இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
  • TNPSC தமிழ்நாட்டின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்
  • TNPSC நடப்பு நிகழ்வுகள்
  • TNPSC புவியியல்
  • TNPSC பொது அறிவியல்
  • TNPSC பொது அறிவு
  • TNPSC-APTITUDE-AND-MENTAL-ABILITY
  • TNPSC-CURRENT-EVENTS
  • TNPSC-DEVELOPMENT-ADMINISTRATION-IN-TAMIL NADU
  • TNPSC-GENERAL-SCIENCE
  • TNPSC-GENERAL-STUDIES
  • TNPSC-GENERAL-TAMIL
  • TNPSC-GEOGRAPHY
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-INDIA
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-TAMIL-NADU
  • TNPSC-INDIAN-ECONOMY
  • TNPSC-INDIAN-NATIONAL-MOVEMENT
  • TNPSC-INDIAN-POLITY
  • TRB_STUDY_MATERIALS
  • TRB-TET
  • கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger
Copyright © 2025 Kalvisolai - No 1 Educational Website | Powered by Blogger