Ad Code

Responsive Advertisement

TNPSC G.K - 93 | தேசிய வாக்காளர் தினம்.

இன்று தேசிய வாக்காளர் தினம். இந்தியா, 1947-ம் ஆண்டு சுதந்திர நாடான போதும், அதற்கு அடுத்த 5 ஆண்டுகள் கழித்து 1951-1952-ல்தான் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அப்போது இருந்த மொத்த வாக்காளர்கள் சுமார் 17 கோடி. இவர்களில், சுமார் 8 கோடி பேர் வாக்களித்தார்கள்.

60 ஆண்டுகள் கழித்து, 2014-ல் நம் நாட்டில் இருந்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 81.4 கோடி. தற்போதைய நிலவரப்படி, ஒவ்வொரு பொதுத் தேர்தலுக்கும், அதாவது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை, சுமார் 10 கோடி புதிய வாக்காளர்கள் சேர்ந்துகொள்கிறார்கள். இதனால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்கிற பெருமையுடன் முதல் இடத்தில் இருக்கிறோம்.

அரசியல் சாசனம் பிரிவு 326-ன் படி, குறிப்பிட்ட வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க உரிமை உடையவர்கள். தொடக்கத்தில் 21 வயது நிரம்பியவர்கள்தான் வாக்களிக்க முடியும் என்று இருந்தது. பிறகு 1989-ல் ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது, 61-வது திருத்தம் மூலம், வாக்களிக்கும் வயது 18 ஆக குறைக்கப்பட்டது. இதுவரை நடந்த பொதுத்தேர்தல்களில், 2019-ம் ஆண்டில், அதிகபட்சமாக 67 சதவீதம் வாக்குகள் பதிவாகின. அதாவது மூன்றில் ஒரு பங்கினர் பொதுத்தேர்தலில் பங்கேற்பதில்லை. இது மிகவும் வருந்துதற்குரிய செய்தி. பொதுமக்களின் பங்களிப்பு முழுமையாக இருப்பதுதான் ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு மிக நல்லது.

இந்த விஷயத்தில் சிலர், ‘கட்டாய வாக்களிப்பு’ குறித்து பேசி வருகின்றனர். நமது சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாகும் இந்த கோரிக்கை. வாக்களிக்க ஒருவருக்கு உரிமை இருப்பது போலவே, வாக்களிக்காது விலகி நிற்கவும் ஒருவருக்கு உரிமையுண்டு. ஆனால், தகுந்த வலுவான காரணம் இன்றி, சோம்பல், மெத்தனம், அறியாமை காரணமாக வாக்களிக்காமல் இருப்பவர்களே இங்கு வெகு அதிகம். கட்டாயம் இந்தநிலை மாற வேண்டும். மாறும் என்று நம்புவோம்.

வாக்காளர் பதிவேடு அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு, சரிசெய்யப்பட்டு வருகிறது. அரசியலமைப்பு சட்டம் பிரிவு 324-ன்படி, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் தலையாய பணிகளில் இது ஒன்று. புதிய, இளைய வாக்காளர் சேர்ப்பு பணியும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

அரசு அலுவலர்களை கொண்டு வாக்காளர் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. இறந்து போனவர்களின் பெயர் நீக்கம், முகவரி மாறியவர்களின் பதிவுகளை அதற்கேற்ப மாற்றுதல் ஆகிய இரண்டும் ஆணையத்தின் முன்பு உள்ள மிகப்பெரும் சவால்கள். பொதுமக்கள் தாமாக முன்வந்து இந்த தகவல்களை ஆணையத்துடன் பகிர்ந்து கொள்கிற வழக்கம் வந்தால் மட்டுமே முழுமையாக பலன் கிட்டும்.

ஆணையம் முன்வந்து ஆற்ற வேண்டிய கடமைகளும் உண்டு. பொதுத்தேர்தல் நடைமுறைகள் எல்லாமே, காலப்போக்கில், பெரிய அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்பவே செயல்படுத்தப்படுகின்றன என்கிற தோற்றம் வலுப்பெற்று வருகிறது. தேர்தல் களத்தில், கைவிரலில் மை வாங்கி, வாக்களிப்பதோடு, ஒரு வாக்காளரின் ‘ஜனநாயக கடமை’ முடிந்து போகிறது. அதன் பிறகு அரங்கேறும் எந்த ஆட்டத்திலும் வாக்காளருக்கு, ‘மவுன பார்வையாளர்’ என்கிற ‘பெருமை’ மட்டுமே மிஞ்சுகிறது.

‘ஜனநாயகம்’ உயிர்ப்புடன் இருக்க முழுமுதற்காரணி, ஒரே அடிப்படை காரணி வாக்காளராகிய பொதுமக்களின் பங்களிப்பு. நமது அரசியலமைப்பு சட்டமே கூட. ‘நாமாகிய இந்திய மக்கள்’ நமக்கு நாமே அளித்துக்கொண்ட, மக்களின் ஆவணம்தான். இப்படி இருக்க, வாக்காளர்களை வெறுமனே பார்வையாளர்களாக வைத்து, ‘தேர்தல் திருவிழா’ என்கிற கிளுகிளுப்பை கொண்டு மக்களை மகிழ்விக்கிற போக்கு முற்றிலுமாக மாறட்டும்.

எழுத்தால், செயலால், நடைமுறைகளால், மக்களால் மக்களுக்காக இயங்குகிற ஜனநாயக குடியரசாக இந்தியா திகழ வேண்டும். பொதுமக்கள், அரசுகள், தேர்தல் ஆணையம் மூவரும் சம அதிகாரத்துடன் இணைந்து செயல் புரிதல் வேண்டும். இதற்கு வழி கோலட்டும், இந்திய தேர்தல் ஆணையம். அதற்கான அத்தனை தகுதியும் ஆற்றலும் ஆணையத்துக்கு உண்டு என்பதே இந்திய ஜனநாயகத்தின் ஆகச்சிறந்த ஆதாயம்.

- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement