Sunday, August 14, 2022

TNPSC G.K - 73 | ராம்சர் பட்டியல்

தமிழகத்தில் சுசீந்திரம், வடுவூர் உள்பட மேலும் 4 இடங்கள் ராம்சர் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன.


உலகெங்கும் உள்ள ஈர நிலங்களை பாதுகாக்க ஈரான் நாட்டின் ராம்சர் நகரில் பல்வேறு நாடுகளுடன் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதில் இந்தியாவும் கையெழுத்திட்டு உள்ளது. இதன்படி, பாதுகாப்புக்காக தேர்ந்தெடுக்கப்படும் ஈரநிலங்கள் ராம்சர் தளங்கள் என அழைக்கப்படுகின்றன.


இந்தநிலையில், இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டில் 13,26,677 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட 75 ராம்சர் தளங்களை உருவாக்க தமிழகத்தின் சுசீந்திரம் தேரூர் சதுப்பு நிலம், சித்திரங்குடி, வடுவூர் மற்றும் காஞ்சிரங்குளம் பறவை சரணாலயங்கள் உள்பட மேலும் 11 ஈரநிலங்களை ராம்சர் தளங்களின் பட்டியலில் இந்தியா சேர்த்துள்ளது. இந்த ஆண்டில் மொத்தம் 28 இடங்கள் ராம்சர் தளங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.


இந்திய ராம்சர் தளங்களில் தமிழகத்தில்தான் அதிகபட்சமாக 14 இடங்கள் உள்ளன. இதைத்தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் 10 இடங்கள் உள்ளன.


தமிழகத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் 260.47 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இது ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.


சுசீந்திரம் தேரூர் சதுப்பு நில வளாகம் கன்னியாகுமரி மாவட்டத்தில் மணக்குடி பகுதியோடு சேர்ந்து உள்ளது. 94.23 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இது, ஒரு முக்கியமான பறவைப்பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், கூடு கட்டும் நோக்கத்துக்காக ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு வருகின்றன.


வடுவூர் பறவைகள் சரணாலயம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகாவில் உள்ளது. 112.64 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு பெரிய நீர்ப்பாசன ஏரியாகும். புலம் பெயர்ந்த பறவைகளுக்கான தங்குமிடமாகவும் இது உள்ளது. உணவு, தங்குமிடம் மற்றும் இனப்பெருக்கம் செய்வதற்கான பொருத்தமான சூழலை இது வழங்குகிறது.


காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். 96.89 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இது, 1989-ம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. பல புலம்பெயர்ந்த ஹெரான் இனங்களின் கூடு கட்டும் இடமாக இது குறிப்பிடப்படுகிறது.


புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இந்த 11 தளங்களின் மொத்த பரப்பளவு 76,316 ஹெக்டர் ஆகும்.


| kalvisolai.in | tnpsc | trb | study materials | audio study materials |

No comments:

Popular Posts