12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 6 பரிணாமம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 24
கேள்வி 24 : இயற்கைத்தேர்வு செயல்படுதலை, கரும்புள்ளி அந்திப்பூச்சியினை எடுத்துக்காட்டாகக் கொண்டு விளக்குக, இந்நிகழ்ச்சியை எவ்வாறு அழைக்கலாம்?
விடை :
தொழில்மயமாதலும், கரும்புள்ளி அந்திப்பூச்சியும் (பிஸ்டன் பெட்டுலேரியா)
- தொழிற்சாலை மெலானின் ஆக்கம் என்பது இயற்கைத் தேர்வுக்கான மிகச் சிறந்த சான்றாகும். இந்த அந்திப்பூச்சிகள் வெள்ளை மற்றும் கருப்பு என இரண்டு நிறங்களில் இருந்தன.
தொழில்மயமாக்கலுக்கு முன்:
- கட்டிடங்களின் வெள்ளைச் சுவர்களில் வெள்ளை நிற அந்திப்பூச்சிகள் எளிதில் உருவமறைப்புப் பெற்று, கொன்றுண்ணிகளிடமிருந்து தப்பித்தன.
- கருப்பு நிற அந்திப்பூச்சிகள் சுலபமாக அடையாளம் காணப்பட்டன.
தொழில்மயமாக்கலுக்குப் பின்:
- தொழிற்சாலைப் புகை மற்றும் கரியினால் மரத் தண்டுகள் கருப்பு நிறமாக மாறின.
- இதனால், கருப்பு நிற அந்திப்பூச்சிகள் மரத் தண்டுகளில் உருவமறைப்புப் பெற்றுத் தப்பித்தன.
- வெள்ளை நிற அந்திப்பூச்சிகள் கருப்பான பின்னணியில் எளிதில் கொன்றுண்ணிகளால் அடையாளம் காணப்பட்டன.
விளைவு:
- இயற்கை, கருப்பு நிற அந்திப்பூச்சியைத் தேர்ந்தெடுத்ததால், அவற்றின் எண்ணிக்கை வெள்ளை நிறப் பூச்சிகளைவிட அதிகரித்தது (நேர்மறை தேர்வு அழுத்தம்).
- ஒரு இனக்கூட்டத்தில், தகுந்த தகவமைப்புக் கொண்ட உயிரினங்கள் இயற்கைத் தேர்வுக்கு உட்பட்டு, அதிக சந்ததிகளை உருவாக்கி எண்ணிக்கையில் உயரும் என்பதை இது தெளிவுபடுத்துகிறது.


0 Comments