கடந்த வார முக்கிய நிகழ்வுகள் (செப்டம்பர் 20-26)
போட்டித் தேர்வுக்கு தயாராகுபவர்கள் பயன்பெறும் வகையில், கடந்த வாரத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் குறித்த தகவல்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
தமிழகம்
- திருமலாபுரம் தொல்லியல் அகழாய்வு: தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே திருமலாபுரம் தொல்லியல் அகழாய்வு மையத்தில் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈட்டி கண்டெடுக்கப்பட்டது. மேலும், தமிழகத்திலேயே மிகப்பெரிய அளவிலான கற்களாலான அரண்களுக்குள் ஈமத்தாழிகளும் கிடைத்துள்ளன. (செப்டம்பர் 20)
- தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளங்கள்: தூத்துக்குடியில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்டில் உலகத் தரம் வாய்ந்த இரண்டு கப்பல் கட்டும் தளங்கள் அமைக்கப்படவுள்ளதாக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சிப்காட் நிர்வாகமும் வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகமும் கையெழுத்திட்டுள்ளன. (செப்டம்பர் 20)
- சென்னை ஒன் செயலி அறிமுகம்: இந்தியாவின் முதல் அனைத்துப் பொதுப் போக்குவரத்து இணைக்கும் செயலியான 'சென்னை ஒன்' என்பதை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் மாநகரப் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் பயணச்சீட்டுகளைப் பெறலாம். (செப்டம்பர் 22)
- கலைமாமணி விருதுகள் அறிவிப்பு: 2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, அனிருத், சாய் பல்லவி உள்ளிட்ட 90 பேருக்கு அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டன. மேலும், பாரதியார் விருதுக்கு எழுத்தாளர் ந.முருகேசபாண்டியனும், எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதுக்கு கே.ஜே.யேசுதாசும், பாலசரஸ்வதி விருதுக்கு முத்துக்கண்ணமாளும், சிறந்த கலை நிறுவனத்துக்கு சென்னை தமிழிசை சங்கமும் தேர்வு செய்யப்பட்டன. (செப்டம்பர் 24)
- அனாமலி ஸ்கேன் கருவிகள்: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் கருவில் உள்ள சிசுவின் குறைபாடுகளை அறியும் 'அனாமலி ஸ்கேன்' கருவிகள் விரைவில் நிறுவப்பட உள்ளன. இத்திட்டம் அடுத்த 6 மாதங்களுக்குள் தனியார்-அரசு பங்களிப்பின் கீழ் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் தெரிவித்துள்ளது. (செப்டம்பர் 25)
- புதிய நூலகக் கட்டிடங்கள் மற்றும் நூல்கள்: தமிழகத்தில் 146 நூலகங்களுக்கான புதிய கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் சார்பில் 26 புதிய நூல்களையும் வெளியிட்டார். (செப்டம்பர் 26)
இந்தியா
- தாதா சாகேப் பால்கே விருது: 2023 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது, இந்தியத் திரைத்துறைக்கு ஆற்றிய தனிச்சிறப்பான பங்களிப்புக்காக மலையாள நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்பட்டது. (செப்டம்பர் 22)
- தேசிய திரைப்பட விருதுகள்: புதுடெல்லியில் நடைபெற்ற 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், 2023 ஆம் ஆண்டுக்கான விருதுகளை ஷாருக்கான், விக்ராந்த் மாசே (சிறந்த நடிகர்கள்), ராணி முகர்ஜி (சிறந்த நடிகை), ஜி.வி.பிரகாஷ் (சிறந்த இசையமைப்பாளர்), எம்.எஸ்.பாஸ்கர் (சிறந்த துணை நடிகர்), ராஜ்குமார் பாலகிருஷ்ணன் (சிறந்த இயக்குநர்) ஆகியோருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். (செப்டம்பர் 22)
- முதல்வரின் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டம் (பீகார்): பீகார் மாநிலத்தில் சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கும் 'முதல்வரின் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தை' பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். (செப்டம்பர் 25)
- அட்டர்னி ஜெனரல் பதவிக்காலம் நீட்டிப்பு: 2022 ஆம் ஆண்டு அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்ட ஆர்.வெங்கடரமணியின் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் அறிவித்தது. (செப்டம்பர் 25)
உலகம்
- எச்-1பி விசா கட்டணம் உயர்வு (அமெரிக்கா): அமெரிக்காவில் தங்கி பணியாற்ற வழங்கப்படும் எச்-1பி விசா கட்டணம் ஆண்டுக்கு ரூ.1.49 லட்சத்திலிருந்து ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என அதிபர் டிரம்ப் அறிவித்தார். (செப்டம்பர் 20)
- உலக அளவிலான புதுமை படைத்தல் குறியீட்டு எண்கள்: உலக அளவிலான புதுமை படைத்தல் குறியீட்டு எண்களின் தரவரிசையில், 2015 இல் 91வது இடத்தில் இருந்த இந்தியா, 2025 இல் 38வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. (செப்டம்பர் 22)
- மருந்துகளுக்கு 100% வரி (அமெரிக்கா): அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அதிபர் டிரம்ப் அறிவித்தார். (செப்டம்பர் 25)
பொருளாதாரம்
- சில்லறை பணவீக்கம் உயர்வு: விவசாயிகள் மற்றும் ஊரகத் தொழிலாளர்களுக்கான சில்லறை பணவீக்கம் ஆகஸ்டு மாதத்தில் 1.07 சதவீதமாகவும், செப்டம்பர் மாதத்தில் 1.26 சதவீதமாகவும் உயர்ந்துள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. (செப்டம்பர் 19)
- மாநிலங்களின் வருவாய் நிலை: கடந்த 2023 ஆம் நிதியாண்டில் நாட்டின் 28 மாநிலங்களில் 16 மாநிலங்கள் வருவாய் உபரியை எட்டியதாகவும், 12 மாநிலங்களில் வருவாய் பற்றாக்குறை நிலவியதாகவும் தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி) அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் ரூ.37,263 கோடி வருவாய் உபரியுடன் உத்தரபிரதேசம் முதல் இடத்தில் உள்ளது. (செப்டம்பர் 21)
- 'இந்தியாவில் தயாரிப்போம்’ திட்ட ஊக்குவிப்பு: 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், 10 ஆயிரம் டன் அல்லது அதற்கு மேல் கொண்ட வர்த்தகக் கப்பல்களையும் மத்திய அரசு உள்கட்டமைப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. இந்திய நிறுவனங்களுக்குச் சொந்தமான, இந்தியக் கொடி ஏற்றப்பட்ட கப்பல்களுக்கு உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்கப்படும். (செப்டம்பர் 22)
அறிவியல்
- அக்னி-பிரைம் ஏவுகணை சோதனை: 2,000 கி.மீ. தொலைவிலான இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட அக்னி-பிரைம் ஏவுகணை, நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் ஏவும் திறனை உறுதிப்படுத்தும் வகையில், ரயில் மூலம் வெற்றிகரமாக ஏவி சோதிக்கப்பட்டது. (செப்டம்பர் 24)
விளையாட்டு
- பில்லி ஜீன் கிங் கோப்பை: சீனாவில் நடைபெற்ற இப்போட்டியின் இறுதிச்சுற்றில் இத்தாலி 2-0 என அமெரிக்காவை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை வென்றது. இத்தாலிக்கு இது 6வது சாம்பியன் பட்டமாகும். (செப்டம்பர் 20)
- உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த 20வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் அமெரிக்கா 26 பதக்கங்களுடன் (16 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம்) முதலிடத்தைப் பிடித்தது. அடுத்த 21வது உலக தடகளப் போட்டி 2027 இல் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற உள்ளது. (செப்டம்பர் 21)
- ஆசிய கேடட் கோப்பை வாள்வீச்சு போட்டி: உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் ஆண்களுக்கான தனிநபர் பிரிவின் 'ஏபீ' பந்தயத்தில் தமிழக வீரர் பெஜினோ ஸ்டெபின் வெண்கலப் பதக்கம் வென்றார். (செப்டம்பர் 22)
- ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: புதுடெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியின் 10 மீ. ஏர் பிஸ்டல் ஆண்கள் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த ஜோனாதன் கவின் அந்தோணி தங்கப் பதக்கம் வென்றார். 10 மீ. ஏர் பிஸ்டல் பெண்கள் பிரிவில் ராஷ்மிகா சாகல் வெள்ளிப் பதக்கம் வென்றார். (செப்டம்பர் 26)
0 Comments